வால் நட்சத்திரத்தில் ரொசெட்டா விண்கலத்தை மோதவிட முடிவு
16 புரட்டாசி 2016 வெள்ளி 00:08 | பார்வைகள் : 9505
வால் நட்சத்திரத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக வலம் வரும் ரொசெட்டா விண்கலம் இம்மாத இறுதியில் அந்த வாழ் நட்சத்திரத்தில் மோதி தன்னைத் தானே அழித்துக் கொள்ளவுள்ளது.
ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தால் பத்து ஆண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்ட இந்த விண்கலம் 67பீ வால் நட்சத்திரத்தில் பல ஆய்வுகளை மேற்கொண்டதோடு அதன் தெளிவான படங்களையும் பூமிக்கு அனுப்பியது.
ரொசெட்டா வால் நட்சத்திரத்தில் தரையிறக்கிய பீலியா ஆய்வு இயந்திரம் செயலிழந்த நிலையில் ஒரு வாரத்திற்கு முன்னரே அது இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் ரொசெட்டா விண்கலம் வரும் செப்டெம்பர் 30 ஆம் திகதி வால் நட்சத்திரத்தில் மோதவுள்ளது. இதன்போது விண்கலத்தின் சுற்றுப்பாதை மாற்றப்பட்டு அது சுதந்திரமாக வால் நட்சத்திரத்தில் விழ வழி ஏற்படுத்தப்படவுள்ளது.
தற்போது வியாழன் கிரக சுற்றுவட்டப்பாதையை நெருங்கும் ரொசட்டா போதிய சூரிய சக்தியை பெற முடியாத நிலை ஏற்படும். அது மீண்டும் சூரியனை நெருங்க நான்கு ஆண்டு காலம் எடுக்கும் என்ற நிலையிலேயே விண்கலத்திற்கு விடைகொடுக்க விஞ்ஞானிகள் தீர்மானித்துள்ளனர்.