விண்கல்லில் மாதிரிகளை பெற நாஸாவின் விண்கலம் பயணம்
10 புரட்டாசி 2016 சனி 00:01 | பார்வைகள் : 9912
விண்கல்லில் இருந்து மாதிரிகளை பெற்று பூமிக்கு திரும்பும் விண்கலம் ஒன்றை அமெரிக்க விண்வெளி மையமான நாஸா விண்ணில் ஏவியுள்ளது.. இதன்மூலம் பூமியில் உயிர்களின் தோற்றம் மற்றும் சூரிய மண்டலத்தில் ஏனைய பகுதியில் உயிர்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் பற்றி அறிய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
ஏழு ஆண்டு திட்டமாக ஒசிரிஸ் - ரெக்ஸ் என்ற ஆய்வு இயந்திரத்தை இணைத்த அட்லஸ் 5 ரொக்கெட் பிளோரிடாவின் கேப் கனவேரல் விமானத்தளத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது..
ஒசிரிஸ் - ரெக்ஸ் விண்கலம் 1,640 அடி (500 மீற்றர்) அகலம் கொண்ட பென்னு என்ற விண்கல்லை நோக்கி பயணிக்கவுள்ளது. இந்த விண்கல் சுமார் பூமியின் அளவான சுற்றுப்பாதையில் சூரியனை வட்டமிடுகிறது.
தற்போதில் இருந்து 166 ஆண்டுகளில் இந்த பென்னு விண்கல் பூமியை தாக்க 800இல் ஒரு வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
2135 ஆம் ஆண்டு இந்த விண்கல் பூமிக்கு மிக நெருக்கமாக சந்திரனின் சுற்றுவட்டப் பாதையில் கடக்கவிருப்பதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நெருக்கமான பயணம் பென்னுவின் சுற்றுவட்டப் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.
சூரிய வெப்பத்தால் சிறிய அளவு உந்தப்படும் இந்த விண்கல்லை அடையும் திட்டத்திற்கு நாஸா ஒரு பில்லியன் டொலர் செலவிடுகிறது. விண்கல்லை அடையும் ஒசிரிஸ் ரெக்ஸ் மேம்பட்ட படங்கள் மற்றும் வரை படங்களை பெறவிருப்பதோடு அவை விண்கல்லில் சுரங்கம் தோண்டும் எதிர்கால வர்த்தக விண்வெளி திட்டத்திற்கு உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
ஒசிரிஸ் ரெக்ஸ் விண்கலம் வரும் 2018 ஓகஸ்ட்டில் பென்னு விண்கல்லை அடையவிருப்பதோடு அங்கு விண்கல்லின் அமைப்பு மற்றும் இரசாயன கலவைகள் பற்றி இரண்டு ஆண்டுகள் ஆய்வு நடத்தவுள்ளது. தொடர்ந்து சூரிய சக்தியில் இயங்கும் இந்த விண்கலம் பென்னுவின் மேற்பரப்பை நோக்கி பயணித்து அதன் இயந்திர கை கொண்டு குறைந்தது 2 அவுன்ஸ்கள் (60 கிராம்கள்) அளவு மாதிரியை பெறவுள்ளது. விண்கல்லின் மேற்பரப்பில் கார்பன் வலம் கொண்ட மூலப்பொருட்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
அனைத்தும் திட்டமிட்டபடி நிகழும் பட்சத்தில் ஒசிரிஸ் ரெக்ஸ் விண்கலம் பென்னு விண்கல்லில் இருந்து புறப்பட்டு 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் 24 ஆம் திகதி மீண்டும் பூமிக்கு திரும்பும்.
பென்னு விண்கல்லில் இருந்து பெறப்படும் மாதிரிகள் சூரிய குடும்பத்தின் ஆரம்பகால நிலையை பற்றி தெரிந்து கொள்ள உதவும் என்று அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னணி ஆய்வாளர் டன்டே லொரட்டா குறிப்பிட்டார்.
சூரிய மண்டல தோற்றத்தின் ஆரம்பத்தில் சிறிய பாறை உடல்கள் தோன்றின. அவ்வாறான பெரும்பாலான உடல்கள் பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கான பிரதான மூலக்கூறுகளை கொண்டவையாகும்.