நட்சத்திரங்கள் இல்லாமல் இருண்டு கிடக்கும் பால்வீதி
3 ஆவணி 2016 புதன் 18:58 | பார்வைகள் : 9975
பால் வீதியின் மையத்தை சுற்றி யுள்ள அகண்ட உள் பகுதிகளில் இளம் நட்சத்திர கூட்டங்கள் இல்லாததால், அண்டவெளியில் நமது பால்வீதி எப்படி உருவானது என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அண்டவெளியில் உள்ள பால்வீதி சுழல் வடிவில் அமைந்துள்ளது. இதில் நமது சூரியனை மையமாக கொண்டு 26,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நட்சத்திரங்கள் அனைத்தும் நமது சூரியனை விட இளமையானவை. குறிப்பிட்ட கால அளவில் இவை ஏறி இறங்கி மின்னும்தன்மை கொண்டவை. அதை வைத்து அதன் தூரத்தை விஞ்ஞானிகள் கணக்கிடுகின்றனர்.
ஆனால் பால்வீதியின் உள்ளுக்குள் இருக்கும் நட்சத்திரங்களை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. அண்டவெளியில் இருக்கும் தூசுகள், அந்த நட்சத்திரங்களின் மின்னும் ஒளியை மறைத்து விடுவது தான் இதற்கு காரணம்.
இதையடுத்து, அந்த நட்சத்திரங்களை கண்காணிப்பதற்காக அகச்சிவப்பு தொலை நோக்கி ஒன்று தென்னாபிரிக்காவில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த தொலைநோக்கி மூலம் ஆராய்ந்த போதும் பால்வீதியின் உள்ளே இளம் நட்சத்திரங்கள் ஏதும் தென்படவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து டோக்கியோ பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சிதுறை விஞ்ஞானி நோரியூகி மட்சுனகா கூறும்போது, ‘‘நமது பால்வெளியின் உள்ளே இளம் நட்சத்திரங்கள் ஏதும் இல்லாமல் இருண்டு கிடக்கிறது. கோடிக்கணக்கான ஆண்டுகளாக அங்கு எந்தவொரு நட்சத்திரமும் உருவாகவில்லை’’ என தெரிவித்துள்ளார்.
இதனால் நமது பால்வீதி எப்படி உருவானது என்பதை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.