வியாழனின் முதல் படத்தை பூமிக்கு அனுப்பியது ஜூனோ விண்கலம்!
15 ஆடி 2016 வெள்ளி 00:18 | பார்வைகள் : 9384
வியாழன் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை அடைந்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் ஜூனோ விண்கலம், அந்த வளி அரக்கக்கோளின் நெருங்கிய படத்தை முதல் முறை பூமிக்கு அனுப்பியுள்ளது.
வியாழனின் சூரிய ஒளி படும் திசையுடன் அதன் மூன்று மிகப்பெரிய நிலவுகளான அயோ, யூரோபா மற்றும் கேனிமெட் ஆகியனவும் அந்த படத்தில் காண முடிகிறது. எனினும் வியாழனின் நான்காவது பெரிய துணைக்கோளான கலிஸ்டோ இந்த படத்திற்குள் உள்ளடங்கவில்லை.
ஜூனோ விண்கலம் தற்போது வியாழனின் சுற்றுவட்டப்பாதையில் தொலை தூரத்தில் இருந்த போதும் வரும் ஓகஸ்ட் மாதம் அதனை நெருங்கி வரவுள்ளது. அப்போது ஜூனோ கெமராவினால் மேலும் தெளிவான படங்களை எடுக்க வாய்ப்பு ஏற்படும்.
தற்போதைய நிலையில் ஜூனோ விண்கலத்தின் ஆய்வு உபகரணங்களை சரிபார்ப்பதில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜூலை 5இல் வியாழனின் சுற்றுவட்டப்பாதையை ஜூனோ அடையும்போது கடுமையான கதிவீச்சு சூழல் பாதிப்பை ஏற்படுத்தியதா என்பது குறித்தே ஆய்வாளர்கள் அதானம் செலுத்தி உள்ளனர்.
இந்நிலையில் ஜூனோ ஆய்வுக் குழு அந்த விண்கலத்தின் அனைத்து உபகரணங்களையும் இயக்கவைத்து சரிபார்த்து வருகின்றனர். வியாழன் கிரகத்தில் வரும் ஒக்டோபர் மாதம் தொடக்கம் முக்கியமான ஆய்வுகளை ஜூனோ ஆரம்பிக்கவுள்ளது.
கடந்த ஞாயிறன்று வியாழனில் இருந்து 4.3 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் வைத்து எடுக்கப்பட்ட படத்தையே ஜூனோ பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் வரும் ஓகஸ்ட் மாதம் வியாழனை 5,000 கிலோமீற்றர் வரை நெருங்கவுள்ளது.
அனுப்பப்பட்டிருக்கும் படத்தின் மூலம் சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோளினது வண்ணமயமான வளிமண்டலம், பல நூற்றாண்டுகாலமாக புயல் வீசும் அதன் பிரபலமான சிவப்பு புள்ளி ஆகியவற்றுக்கு ஆதாரம் கிடைத்துள்ளது.
ஜூனோ விண்கலம் அடுத்த 18 மாதங்களில் வியாழனின் தோற்றம் மற்றும் அதன் மேற்பரப்பு பற்றி ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. சுமார் நான்கரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வியாழனின் உருவாக்கம் தொடர்பில் அதன் உட்பகுதியில் உள்ள கட்டமைப்பு மற்றும் இரசாயன முறை கொண்டு தடயங்களை பெற முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.