இரவை பகலாக மாற்ற முடியுமா?
23 வைகாசி 2017 செவ்வாய் 09:50 | பார்வைகள் : 9561
இரவை விட பகலில் நாம் பயமில்லாமல் இருக்கிறோம், நன்றாக விளையாடுகிறோம், விருப்பம் போல சுற்றுகிறோம் என்பதால் அனைவரும் பகலையே அதிகமாக விரும்புவோம் அல்லவா?
ஆனால் உண்மையில் இரவு தான் உன்னதமானது. ஏனெனில் பகலை விட இரவில் தான் நமது ஐம்புலன்களுமே அதிக விழிப்புணர்வோடு செயல்படுகிறது.
எனவே மனிதகுலத்தின் பல்வேறு நன்மைகளுக்காக, சில விஞ்ஞானிகள் இரவை பகலாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள். அந்த முயற்சி சாத்தியமாகுமா? என்பதை பற்றி பார்ப்போம்.
இரவை பகலாக எப்படி மாற்ற முடியும்?
சூரியன் பக்கம் பூமியைத் திருப்பினால் தான் இரவை பகலாக மாற்ற முடியும். பூமியைச் சூரியன் பக்கம் திருப்ப முடியாது.
ஆனால், சூரியனின் ஒளியைத் திருப்ப முடியும் அல்லவா? அப்படியொரு முயற்சியில் ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதாவது, வான்வெளியில் பிரம்மாண்டமான கண்ணாடிகளை நிறுவி, அங்கிருந்து சூரியனின் ஒளியைப் பூமிக்குப் பிரதிபலிக்கச் செய்வது தான் இந்த திட்டத்தின் தத்துவம்.
வான்வெளியில் கண்ணாடியை நிறுவுவது எப்படி?
ஒரு பெரிய செயற்கைக் கோளில் கிட்டத்தட்ட 10,000 சதுர அடி பரப்பளவு கொண்ட கண்ணாடியை நிறுவி, அதிலிருந்து இருட்டான இடங்களுக்குச் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கச் செய்ய முடியும் என்று ரஷ்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டதுடன், இந்த திட்டம் இன்னும் 50 ஆண்டுகளுக்குள் வெற்றி பெற்றுவிடும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
வான்வெளி கண்ணாடியின் சிறப்புகள் என்ன?
சூரிய ஒளியைப் பிரதிபலிக்க செய்வதற்காக இந்த சூரியப் பிரதிபலிப்பான் (Solar Reflector) கண்ணாடியை வித்தியாசமாகவும், பல்வேறு வசதிகளுடனும் தயாரிக்கப்பட்டுள்ளது.
பத்து பவுர்ணமி நிலவுகள் சேர்ந்து பூமிக்கு வெளிச்சம் கொடுத்தால் எவ்வளவு வெளிச்சம் கிடைக்குமோ அந்த அளவுக்கு இந்தச் சூரியப் பிரதிபலிப்பான் மூலம் ஒளியைப் பெற முடியும்.
இரவை பகலாக மாற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்
இரவை விட பகல் நேரத்தை அதிகரிக்க செய்வதன் மூலம் மனித குலத்துக்கு நிறைய நன்மைகளைச் செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
ஏனெனில் குளிர்காலங்களை விட வெயில் காலங்களில் குழந்தைகள் இரண்டு மடங்கு அதிகமாக வளர்ச்சி அடைகின்றார்கள்.
இதற்கு இரவை விட பகலில் குழந்தைகளின் வளர்ச்சி ஹார்மோன்கள் அதிகம் தூண்டப்படுவது தான் காரணமாகும்.
மேலும் பயிர்களில் ஒளிச்சேர்க்கை நிகழ்ந்து பகலில் நன்றாக வளர்ச்சி அடைகின்றது. குளிர் பனியில் பயிர்களுக்கு ஏற்படும் நோய்களைக் குறைத்து, விளைச்சலை அதிகரிக்கச் செய்து, உணவு உற்பத்தியை அதிகரிக்கலாம்.