மனிதர்களை செவ்வாய்க்கு அழைத்து செல்லும் ஃபால்கன்!
11 வைகாசி 2017 வியாழன் 11:21 | பார்வைகள் : 9198
மனிதர்களை விரைவில் செவ்வாய் கிரகத்திற்கு அழைத்து செல்ல இருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் ஹெவி ராக்கெட் சோதனை வீடியோ டீசர் வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்வெளி துறையில் உலகை திரும்பி பார்க்க வைத்திருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது ஃபால்கன் ஹெவி ராக்கெட் வீடியோவினை முதல் முறையாக வெளியிட்டுள்ளது. ராக்கெட் சோதனை செய்யப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ 18 நொடிகள் ஓடுகிறது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவில் உலகின் அதிக சக்திவாய்ந்த ராக்கெட் சோதனையின் போது கடந்த வாரம் படமாக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க் துவங்கிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய ராக்கெட்டான ஃபால்கன் அந்நிறுவனத்தின் எதிர்காலத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.
சோதனைகள் வெற்றி பெறும் பட்சத்தில் ரோபோடிக் பேலோடு, மற்றும் மனிதர்களை பூமியில் இருந்து நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மறுபயன்பாட்டு ராக்கெட் என்பதால் ஃபால்கன் ஹெவி ராக்கெட் விண்வெளி சென்று மீண்டும் பூமிக்கு திரும்பும். இதனால் மற்ற ராக்கெட்களுடன் ஒப்பிடும் போது செலவும் குறைவாகிறது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் படி ஃபால்கன் ஹெவி ராக்கெட் இந்த ஆண்டின் இறுதிக்குள் தனது முதல் பயணத்தை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வரும் இந்த ராக்கெட் வரும் மாதங்களில் முழுமையாக நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.