பூமியை ஒத்த புதிய கோள் ஒன்றை கண்டுபிடித்த ஜேர்மனிய விஞ்ஞானிகள்!
8 சித்திரை 2017 சனி 09:45 | பார்வைகள் : 9056
பூமியை போன்று வளிமண்டலவியல் அம்சங்களடங்கிய புதிய கோள் ஒன்றை, சூரிய மண்டலத்திற்கு வெளியில் ஜேர்மனிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அண்டவெளியில் சூரிய மண்டலத்துக்கு வெளியே ஏராளமான கோள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிதாக ஒரு கோள் கண்டறியப்பட்டுள்ளதாக ஜேர்மனியின் மாஸ் பிளாங்க் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜேர்மனியின் விண்வெளி கிரகங்கள் ஆய்வு நிறுவனமான மாஸ் பிளாங்க் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கோளிற்கு ஜிஜே 1132பி என பெயரிடப்பட்டுள்ளது.
அத்தோடு புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோளில், பூமியை ஒத்த வளிமண்டல அம்சங்கள் அடங்கிய தோற்றத்தை குறித்த ஜிஜே 1132பி கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த கோளானது பூமியை விட 1.4 மடங்கு பெரிதாக உள்ளதோடு, பூமியிலிருந்து சுமார் 39 வெளிச்ச ஆண்டுகள் தூரத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ள குறித்த கோளில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாஸ் பிளாங்க் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.