விண்வெளியில் முதல்றையாக ஏவப்பட்ட மறுசுழற்சி ராக்கெட்!!
31 பங்குனி 2017 வெள்ளி 11:37 | பார்வைகள் : 9049
கடலில் விழுந்த ராக்கெட்டை சீர்படுத்தி மறுசுழற்சி முறையில் முதன்முறையாக விண்ணில் ஏவும் திட்டத்தில் ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் நிறுவனம் வெற்றி கண்டுள்ளது. இதன்மூலம் இனி ராக்கெட்டுகளை செலுத்தும் செலவு பாதியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் எந்திரங்கள், கட்டுமான பொருட்கள் போன்றவற்றை தனியாருக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் என்ற ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டு வந்தன. இதுதவிர உலகில் உள்ள சிறிய நாடுகளுக்கு சொந்தமான செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி நிலைநிறுத்தும் சேவையையும் உரிய கட்டணம் பெற்றுகொண்டு இந்நிறுவனம் செய்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புளோரிடா மாநிலத்தின் கேப் கனவெரல் விமானப்படை நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த ஏவுதளத்தில் இருந்து 23 பிரிவுகளை கொண்ட ஒன்பது நிலைகளில் இயங்கும் “ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9” ராக்கெட் கடந்த ஆண்டு புறப்பட்டு சென்றது. அதில் தகவல்தொழில்நுட்பம் தொடர்பான 11 செயற்கைக் கோள்கள் இணைக்கப்பட்டிருந்தன.
பூமியில் இருந்து சீறிப்பாய்ந்து சென்ற அந்த ராக்கெட்டின் 156 அடி நீளம்கொண்ட முதல்நிலை உந்து இயந்திரம் (first stage rocket) ராக்கெட்டில் இருந்து கழன்று, பிரிந்து, பத்தே நிமிடங்களில் பூமியை நோக்கி பத்திரமாக திரும்பி வந்தது.
ஆரஞ்சுநிற தீப்பந்தாக ஒளியை உமிழ்ந்தபடி பூமியை நோக்கி திரும்பிய “ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9” தானாகவே கால்களை விரித்தபடி, ஏவப்பட்ட இடத்தில் இருந்து தெற்கே சுமார் ஆறு மைல் தூரத்தில் பத்திரமாக வந்து அமர்ந்தது. இந்த நிகழ்ச்சியை மேற்கத்திய ஊடகங்கள் விண்வெளி தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லாக குறிப்பிட்டன.
இதேபோல் ‘ஜேசன் 3’ செயற்கைக்கோளை சுமந்து செல்லும் “ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9” ராக்கெட்டை பத்திரமாக கடலில் தரையிறக்க விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இதையடுத்து, கலிபோர்னியா கடல் பகுதியில் தயாராக நிற்க வைக்கப்பட்டிருந்த கப்பலில் அந்த ராக்கெட் திரும்பிவந்து தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
திட்டமிட்டபடி செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்திவிட்டு கடலுக்கு திரும்பிய அந்த ராக்கெட், கப்பலின் மீது செங்குத்தாக இறங்கியது. ஆனால், சென்ற முறையைப்போல் இல்லாமல் எதிர்பாராதவிதமாக அந்த ராக்கெட் ஒருபுறமாக சாய்ந்து, கீழே விழுந்து நொறுங்கி தீக்கிரையானது.
பின்னர் அடுத்தடுத்த சோதனை முயற்சிகள் வெற்றியை தழுவின. இந்நிலையில், கடலில் விழுந்த பின்னர் கண்டெடுத்து செப்பனிடப்பட்ட ராக்கெட்டை மறுசுழற்சி முறையில் மீண்டும் விண்வெளியில் செலுத்தும் முயற்சியில் தற்போது ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் நிறுவனம் முதன்முறையாக வெற்றி கண்டுள்ளது.
தற்போது, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு சொந்தமான 65 செயற்கைக் கோள்களை மறுசுழற்சி செய்யப்பட்ட ராக்கெட்டின் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் நிறுவனம் நேற்று விண்ணில் செலுத்தி, வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது.
புளோரிடா மாநிலத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 6.27 மணியளவில் இந்த சாகசப் பயணம் நிகழ்ந்ததாக பால்கன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி பயணத்தின் புதிய பரிணாம வளர்ச்சியாக பார்க்கப்படும் இத்தகையை ஏற்பாட்டால் செயற்கைக் கோள்களை விண்வெளியில் செலுத்தும் செலவினங்கள் இனி வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.