குழந்தை முன் சண்டை போட்டுக்கொள்வதை தவிர்ப்பது எப்படி..?
4 ஆனி 2023 ஞாயிறு 06:40 | பார்வைகள் : 7488
பலரது வீட்டில் பொதுவாக நடக்க கூடிய நிகழ்வு தம்பதியருக்குள் நிகழும் கருத்து மோதல் அல்லது சண்டை. இந்த சண்டைகள் தம்பதியருக்குள் மட்டுமே நடக்கும் போது அது அவர்களோடு முடிந்து விடுகிறது. ஆனால் தங்கள் குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர் சண்டையிடுவது குழந்தைகளின் மனஆரோக்கியத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.
பெற்றோர்கள் தங்கள் முன் சண்டை போடுவதை பார்க்கும் குழந்தைகள் சில நேரங்களில் அழ ஆரம்பிக்கிறார்கள் அல்லது எதிர்மறையாக ரியாக்ட் செய்ய கூடும். சண்டை போட்டுக்கொள்ளும் பெற்றோர்கள் பிரிந்து விடுவார்களோ என்று கூட சில நேரங்களில் மிகவும் கவலை கொள்வார்கள். அவர்களை பொறுத்தவரை அப்பா, அம்மா இருவருமே முக்கியம், இருவருமே தங்கள் வாழ்வில் இருக்க வேண்டும் என்று தான் பெரும்பாலும் விரும்புவார்கள்.
பல ஆய்வுகள் பெற்றோரிடையே நிகழும் மோதல்கள் அவர்களின் குழந்தையை மனரீதியாக பாதிப்பதை எடுத்து காட்டுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் இருப்பதை மிகவும் பாதுகாப்பாக உணர்கிறார்கள். ஆனால் அவர்கள் கண்முன்பே மோதல்கள் நிகழும் போது மிகவும் அச்சம் கொள்கிறார்கள். பெற்றோரிடையே அடிக்கடி ஏற்படும் கடும் சண்டைகள், வீடு பாதுகாப்பான இடம் அல்ல என்ற உணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்திவிட கூடும்.
பெற்றோர்கள் சண்டையிட்டு கொள்வதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்: மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலை சேர்ந்த மருத்துவர் சமீர் மல்ஹோத்ரா கூறுகையில், பெற்றோர்கள் தான் தங்கள் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள். ஒரு குழந்தையின் நடத்தை மற்றும் ஆளுமையை வடிவமைப்பதில் ஆரோக்கியமான குடும்ப சூழல் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வேர் போன்றவர்களாக இருக்கின்றனர். வேர்களிலேயே பிரச்சனை ஏற்பட்டால் குழந்தையின் ஆளுமை அடித்தளம், உறவுகள் மற்றும் சமாளிக்கும் நடத்தைகள் உள்ளிட்டவற்றில் சிக்கல் ஏற்படும்.
அதே போல பெற்றோருக்கு இடையே அடிக்கடி ஏற்படும் தேவையற்ற மோதல்கள், கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோசமாக வெளிப்படுத்துவது, கண்டபடி பேசுவது, பொறுமையின்மை, மனநல கோளாறுகள், ஈகோ மோதல்கள், கத்தி பேசி கோபத்தை வெளிப்படுத்துவது, ஒருவருக்கொருவர் பழி சுமத்தி கொள்வது, கைகலப்பு உள்ளிட்ட விஷயங்கள் குழந்தைகளின் மனநலனில் குறிப்பிடத்தக்க பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். துரதிர்ஷ்டவசமாக தம்பதியர்கள் தங்களது பார்ட்னரை காயப்படுத்த குழந்தைகளையே சில நேரங்களில் கருவியாக பயன்படுத்துகிறார்கள். குழந்தைகளும் சில நேரங்களில் பெற்றோருக்கிடையே நடக்கும் சண்டையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு பிரச்சனையை பெரிதாக்கி விடுகிறார்கள். அதே போல பெரும்பாலும் குழந்தைகள் பெற்றோருக்கிடையே நடக்கும் மோதலை உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்றார்.
மற்றொரு மருத்துவரான டாக்டர் ஷெல்ஜா சென் பேசுகையில், அடிக்கடி பெற்றோருக்கிடையே மோதல்கள் ஏற்படும் வீட்டில் குழந்தைகள் வளரும் போது, வீட்டில் பாதுகாப்பாக இருக்க முடியாத உணர்வு அவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. சில நேரங்களில் தங்கள் துணைக்கு ஆதரவாக இருப்பதாக நினைத்து தாய் அல்லது தந்தை இருரில் ஒருவரின் வெறுப்பு அல்லது கோபத்திற்கு குழந்தைகள் ஆளாக நேரிடலாம். சில சமயங்களில் பெற்றோர் கோபம் குழந்தைகள் மீது திரும்ப கூடும். அது போக குழந்தைகள் தங்கள் நண்பர்களுடன் பேசும் போது அவர்கள் வீட்டில் அனைத்தும் ஒழுங்காக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் போது அவர்களை விட நாம் சந்தோஷத்தில் மற்றும் வளர்க்கப்படும் விதத்தில் குறைவாக இருக்கிறோம் என்று தங்களையே நொந்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.
இது போன்ற எண்ணங்கள் குழந்தைகளிடையே உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அடிபணியும் ஆளுமை, சுயமரியாதை குறைவு, மனச்சோர்வு, உடல் வலிகள், வலிகள், குடல் இயக்கத்தில் சிக்கல், தடிப்புத் தோல் அழற்சி போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கின்றன. தவிர பெற்றோருக்கிடையே நடக்கும் சண்டைகள் தவறான வார்த்தைகளை பேசுதல், அதிகம் கோபம் கொள்வது, பொய்களை அடுக்கி கொண்டே செல்வது போன்ற பல தவறான நடத்தைகளை குழந்தைகளுக்கு ஏற்படுத்த கூடும்.
பெற்றோர் என்ன செய்ய வேண்டும்.? பிரச்சனைகள் இல்லாத வீடே இல்லை என்பது தான் உண்மை. எனவே தம்பதியர் தங்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை சுமூகமாக பேசி தீர்த்து கொள்ள முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்கிறார் டாக்டர் சமீர். எதிர்காலத்தில் கடினமான வாழ்க்கைச் சூழலை சமாளிக்கும் உங்கள் குழந்தையின் திறன் மற்றும் மனநிலையை உங்கள் சண்டை பாதிக்கும் என பெற்றோர்களை எச்சரிக்கிறார்.
வீட்டில் குழந்தை முன் கருத்து வேறுபாடு ஏற்படும் போது தம்பதியர் உடல் ரீதியாக ஆக்ரோஷமாக இருக்க கூடாது, முதலில் ஒருவர் பேசட்டும் என மற்றொருவர் அமைதியாக கேட்டு பின் தன் கருத்தை முன்வைக்கலாம். தேவையற்ற வார்த்தை பிரயோகத்தை அறவே தவிர்க்க வேண்டும். தம்பதிக்குள் இருக்கும் எதிர்மறை விஷயங்களை லாவகமாக கையாள வேண்டும். கோபத்தில் ஒன்றிரண்டு வார்த்தைகள் கூடுதலாக பேசியிருந்தால் அது தவறு என்று உணரும் நிமிடத்தில் குழந்தைகள் முன்பே துணையிடம் மன்னிப்பு கேட்கும் பழக்கத்தை வளர்த்து கொள்ளுங்கள். நீண்ட நேரம் மோதல் போக்கை கடைபிடிக்காமல் வெகுவிரைவாக குடும்பத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சிக்கவும் என்கிறார் நிபுணர்.