ஆண்களுக்கு பாலியல் ஆசை குறைந்தால் ஆயுள் குறையுமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி செய்தி!
16 தை 2023 திங்கள் 14:37 | பார்வைகள் : 7383
பருவம் எய்திய அனைவருக்குமே பாலியல் ரீதியிலான ஆசைகள் துளிர் விட தொடங்கிவிடும். அதுதான் இயற்கை. அரிதிலும், அரிதாக ஆயிரத்திற்கு ஒன்றிரண்டு பேர் முழுமையான பிரமச்சரியத்தை கடைப்பிடிக்கின்றனர்.
மற்ற எல்லோருமே சரியான வயதில் அல்லது தாமதமாக பாலியல் உறவில் ஈடுபடுகின்றனர். என்னதான் இருந்தாலும் ஆரம்பத்தில் இருக்கின்ற அதே ஆசையும், ஏக்கமும் இறுதிவரை இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. வயது, உடல் பலம், சுற்றுப்புற சூழ்நிலை, மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் பாலியல் குறித்த ஆசை குறைவது இயல்புதான். ஆனால், இவ்வாறு பாலியல் ஆசை குறைந்தால் அதன் காரணமாக ஆயுளும் குறையும் என்பதுதான் ஜப்பானிய ஆய்வு ஒன்று தெரிவிக்கும் அதிர்ச்சிகரமான செய்தியாக உள்ளது.
.
ஆய்வு எப்படி நடைபெற்றது : 40 வயது அல்லது அதற்கு மேற்பட்ட 8,558 ஆண்கள் மற்றும் 12,411 பெண்களை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. சுமார் 6 ஆண்டு கால இடைவெளியில் இவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஜப்பானைச் சேர்ந்த யமகதா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பாலியல் ஆர்வம் தொடர்பான பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
ஆர்வம் குறைந்தால் ஆயுசும் குறையும் : பாலியல் ஆர்வம் குறைகின்ற ஆண்களுக்கு புற்றுநோயால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் மற்றும் இதர நோய்களால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது. வயது, கல்வி, திருமண நிலை, புகைப்பிடித்தல், மது அருந்துதல், சிரிப்பு, மன அழுத்தம், ஹைப்பர்டென்சன், நீரிழிவு போன்ற பல விஷயங்கள் ஆய்வின்போது பரிசீலிக்கப்பட்டன.
பெண்களுக்கு ஆபத்தில்லையாம் : பெண்களுக்கு பாலியல் ஆர்வம் குறைவதன் காரணமாக ஆயுள் குறைவதில்லை என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதே சமயம், எண்ணிக்கையில் ஆண்களை காட்டிலும் பெண்களுக்குத் தான் பாலியல் ஆர்வம் குறைகிறதாம். அதாவது, ஆய்வில் பங்கேற்ற 8 சதவீத ஆண்களும், 16 சதவீத பெண்களும் பாலியல் ஆர்வம் குறைந்திருப்பதாகக் கூறியுள்ளனர்.
காரணங்கள் : ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக ஆண்களுக்கு பாலியல் ஆர்வம் குறையக் கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாலியல் ஆர்வம் குறைவதால் நரம்பு மண்டல பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, அழற்சி போன்ற பல்வேறு விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆய்வின் குறைபாடுகள் : பாலியல் ஆர்வம் குறித்த கேள்விகளில் சில குறைபாடுகள் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதாவது, தற்சமயம் நீங்கள் எதிர்பாலினத்தவர் மீது பாலியல் ஆர்வம் கொண்டுள்ளீர்களா? என்ற கேள்வியைத்தான் முன்வைத்துள்ளனர். ஆனால், சக பாலினத்தவர் மீதான பாலியல் ஆர்வத்தை ஆய்வின் போது கவனத்தில் கொள்ளவில்லை. அதேபோல, பாலியல் ஆர்வத்தை பாதிக்கின்ற மருத்துவ ரீதியிலான விஷயங்களையும் ஆய்வாளர்கள் பரிசீலிக்கவில்லை.