பெண்கள் திருமணத்தை கடந்த உறவைத் தேர்வு செய்வதற்கான காரணங்கள்.!
2 மார்கழி 2022 வெள்ளி 15:28 | பார்வைகள் : 12253
திருமண உறவு அழகாக இருக்கவும், நீடிக்கவும் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் நல்ல புரிதல் இருக்க வேண்டும்; விட்டுக்கொடுக்க வேண்டும்; அடிப்படையான நம்பிக்கை வேண்டும்.
இதை கடந்தும் ஒரு சிலர் வேறு ஒரு ஆண் அல்லது பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. கணவன் அல்லது மனைவி மீது கோபம், ஏமாற்றம் மற்றும் வெறுப்பு ஆகியவை முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
எவ்வளவு முயற்சி செய்தும் திருமண உறவு சீராக இல்லை, மகிழ்ச்சியாக இல்லை என்று வரும்போது அன்பையும், காதலையும், ஆறுதலையும்தான் விரும்பும் மற்றொரு நபரிடம் பெற்றுக்கொள்கிறார்கள்.
மேலோட்டமாக பார்க்கும்போது இது உறவின் நம்பிக்கையை உடைப்பது போலவும், நேர்மையற்று நடப்பது போலவும் காணப்பட்டாலும், ஒரு சிலர் எக்ஸைடிங் ஆக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவும், த்ரில் வேண்டும் என்பதற்காகவும் இந்த உறவுகளில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது.
குறிப்பாக பெண்களைப் பொறுத்தவரை திருமணம் கடந்த மற்றொரு உறவில் ஈடுபடுவதற்கு முக்கியமான ஐந்து காரணங்கள் கூறப்படுகின்றன. அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
இப்போதெல்லாம் பெண்கள் தாமதமாகத் தான் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றாலுமே, பலருக்கும் இளம் வயதிலேயே திருமணம் நடந்து விடுகிறது. கல்லூரி முடித்தவுடன் இருபதுகளின் ஆரம்பத்திலேயே திருமணம் செய்து கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள்.
இளம் வயது திருமணம் நடந்த பெண்களுக்கு மனைவி என்ற ஒரு குறுகிய வட்டத்திலேயே இயங்கும் நிலை ஏற்படுகிறது. குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும்; வீட்டில் இருக்கும் எல்லா வேலையும் செய்ய வேண்டும்; குழந்தைகளை வளர்க்க வேண்டும்; தனக்கென்று நேரமில்லை என்று இளம் வயதில் திருமணம் நடந்து ஒரு பெண் தெரிவித்திருக்கிறார்.
இதற்குப் பிறகு, தன்னை கவனித்துக் கொள்ள வேண்டும்; பராமரிக்க வேண்டும் என்று நினைத்து அதற்கான முயற்சியில் ஈடுபடும்போது அவர் கூண்டிலிருந்து விடுதலை பெற்றது போல உணர்வு ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
ஒரு புதிய உலகத்தை அப்போதுதான் பார்த்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கணவர் ரொமாண்டிக்காகவும் இல்லை; அன்பாகவும் நடந்து கொள்ளவில்லை; தன் தேவைகளை பார்த்துக் கொள்ளவும் இல்லை குடும்பத்திற்கு தேவையான விஷயங்களில் உதவி செய்யவும் இல்லை. எனவே எனக்கான அன்பையும் காதலையும் நான் இன்னொரு இடத்தில் பெற்றேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று தெரிவித்திருக்கிறார்.
ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். ஒரு சிலர் பயங்கர பொசசிவாக இருப்பார்கள்; ஒரு சிலர் எல்லாவற்றையும் எளிதாக ஏற்றுக்கொள்ளும் தன்மையில் இருப்பார்கள்; சிலர் பொறுப்பில்லாமல் சுற்றுவார்கள்; இவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டால் கூட, தன்னைப் பற்றி மட்டுமே யோசிக்கும், மற்றவர்களை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் தனக்கான தேவைகளையும் வசதிகளையும் மட்டுமே முன்னிறுத்தும் நார்சிசிஸ்ட் என்று கூறப்படும் நபருடன் யாராலும் வாழ முடியாது. அப்படியான ஒரு நபருடன் தனக்கு நேரிட்ட கொடூரமான அனுபவங்களின் காரணமாக இன்னொரு நபருடன் உறவில் இருக்க விரும்பியதாக ஒரு பெண் தெரிவித்திருக்கிறார்.
என்ன செய்தாலுமே அதை ஏதேனும் ஒரு வகையில் குற்றம் சாட்டிக் கொண்டே, தான் செய்வதெல்லாம் தவறு, தனக்கு எதுவுமே தெரியாது என்று மட்டம் தட்டி வரும் ஒரு உறவில் சிக்கிக் கொண்டிருப்பதாக அந்த பெண் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் 1 நிமிடம் கூட மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. குடும்பம், குடும்பச் சூழல் கட்டப்பட்டிருக்கும் விதம் ஆகியவற்றின் காரணத்தால் விவாகரத்தும் செய்ய முடியாத ஒரு நிலைமையில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
கொஞ்சம் கூட மகிழ்ச்சியே இல்லாத ஒரு திருமணத்தில், இன்னொரு உறவின் மூலம் மகிழ்ச்சி கிடைத்தால் அதை தேர்வு செய்வதில் எந்த தயக்கமும் இல்லை, அதை ரகசியமாகவும் வைத்துக் கொள்வதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
திருமண உறவில் ஆண் பெண் இருவருக்குமே எதிர்பார்ப்புகள் இருக்கும். அந்த எதிர்பார்ப்புகளின் அடிப்படையான ஒரு சிலவற்றையாவது பூர்த்தி செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. இதில் பெண்களை பொறுத்தவரை சின்ன சின்ன விஷயங்களை கூட தன்னுடைய கணவன் பூர்த்தி செய்வதில்லை, அதில் மிகப்பெரிய ஏமாற்றம் அடைவதாக காணப்படுகிறது.
இருவருக்குமிடையில், வெறுப்பும் கோபமும் ஆத்திரமும் அதிகரித்து தன்னைப் பற்றி தன் கணவர் கண்டுகொள்வதே இல்லை; நாளாக நாளாக அது இடைவெளியை ஏற்படுத்தி வெறுப்பும், கோபமும் வளர்ந்து வந்தது; அது மட்டுமில்லாமல் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில், யாரை, எதை நம்பி இருப்பது என்பது பற்றி யோசித்த போது விடை கிடைக்கவில்லை.
தனக்கு அவை மிகவும் வருத்தம் அளிப்பதாக இருக்கிறது என்று ஒரு பெண் மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். சில நேரங்களில் சுற்றி நடப்பது எதையுமே தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு உணர்ச்சிபூர்வமாக பாதிக்கப்பட்டு இருக்கிறேன் என்றும், இந்த மாதிரி விஷயங்களில் நீண்ட காலமாக தன் கணவரிடம் இருந்து சின்ன ஆறுதல் கூட கிடைத்தது இல்லை என்றும், இதனால் மிகப்பெரிய ஏமாற்றமும் வெறுப்பும் இருந்து வந்ததாக தெரிவித்திருக்கிறார்.
தேவையான நேரத்தில் கூட தன்னை கவனித்துக் கொள்ளவில்லை என்றும் அல்லது அதற்கான முயற்சிகளில் கூட ஈடுபடவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். எனவே இன்னொரு நபர் தன் மீது விருப்பம் காட்டி, தன்னை பிடித்திருக்கிறது என்று கூறும்போது அந்த இடத்தில் இன்னொரு உறவு ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
திருமண உறவை பலப்படுத்தும் முக்கியமான விஷயங்களில் ஒன்று, பாலியல் உறவு. ஆண் பெண் இருவருக்குமே திருப்தி அடையும்படி பாலியல் உறவு இருக்க வேண்டும். இதில் ஏற்படும் பிரச்சனைகள் கூட திருமணமான பெண் இன்னொரு நபரை நாடுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது.