கணவன் மனைவிக்குள் இந்த விஷயங்களை மட்டும் ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்...
27 புரட்டாசி 2022 செவ்வாய் 07:29 | பார்வைகள் : 10644
காதல், கல்யாணம் என எந்த உறவாக இருந்தாலும் ஆண், பெண் பந்தத்திற்கான ஆணிவேராக அன்பும், நம்பிக்கை, அக்கறை போன்றவையே இருக்கிறது. சில சமயங்களில் அற்புதமான உறவுக்குள் நுழையும் விரும்பத்தகாத விஷயங்கள் உறவை முறித்துவிடுகிறது. எனவே சிறந்த வாழ்க்கை துணை, காதல் உறவு, திருமண பந்தத்தை உறுதி செய்ய நம்மிடம் உள்ள நிறைகுறைகளை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஆண், பெண் இருவருக்கும் உள்ள பழக்கவழக்கங்கள் அல்லது நடத்தைகள் மாறுபடும் போது அந்த உறவு நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறிவிடுகிறது.
துஷ்பிரயோகம் : தம்பதிகள் தங்களுக்கு ஒருவரை ஒருவர் மதிப்பதும், நேசிப்பதும், அக்கறை செலுத்துவதும் தான் ஆரோக்கியமான உறவுக்கான சரியான அஸ்திவாரம் ஆகும். ஆனால் பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் அதிகாரம் மிக்கவர்களாக கருதிக்கொண்டு, பெண்களை தாக்குவதும், குரலை உயர்த்தி அவதூறான வார்த்தைகளில் பேசுவதும் உறவில் விரிசலை உருவாக்கி, இறுதியில் முறிவுக்கு காரணமாக அமைகிறது.
உறவை ரகசியமாக வைத்திருப்பது: இந்தியாவைப் பொறுத்தவரை லிவிங் ரிலேஷன்ஷிப், காதல் போன்ற உறவுகளை பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் வெளிப்படையாக சொல்ல முடியாத நிலை உள்ளது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகும் உறவை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்த முயற்சிக்காமல் ரகசியமாக வைத்திருப்பது உறவில் முறிவை ஏற்படுத்தக்கூடும். இது ஆண், பெண் என இருதரப்பினருக்கும் பொருந்தும்.
ஏமாற்றுவது: உறவை முறிக்கக்கூடிய மிகப்பெரிய ஆயுதம் இது. ஏனெனில் உறவை வளர்க்கும் முக்கியமான விஷயமான நம்பிக்கை என்பது, இதனால் முற்றிலும் சிதைக்கப்படுகிறது. நம்பிக்கை சிதையும் போது உறவை தொடருவது என்பது இருதரப்பினருக்கும் இயலாத காரியம். ஏமாற்று வேலையில் ஈடுபடுபவர் அவரது துணையையும், உறவையும் அவமதிப்பதோடு, நம்பிக்கை துரோகம் என்ற மிகப்பெரிய குற்றத்தையும் செய்கிறார்.
குற்ற உணர்வை ஏற்படுத்துதல்: கணவன் - மனைவி, காதலன் - காதலி என யாராக இருந்தாலும் இரு தரப்பினரும் சண்டை போடும் போது அல்லது வாக்குவாதம் ஏற்படும் செய்யக்கூடாத, ஆனால் தொடர்ந்து செய்யும் ஒரே விஷயம் தேவையற்ற விஷயங்களை சுட்டிக்காட்டி பேசுவது. சம்பாதிக்கவில்லை, குழந்தையை பார்த்துக்கொள்ளவில்லை, வேலை, ருசியாக சமைப்பதில்லை என்பதில் தொடங்கி பல ஒருவரது குற்ற உணர்ச்சியை அதிகரிக்கக்கூடிய வார்த்தைகளை கொட்டி தீர்ப்பது நிச்சயம் உறவுகளுக்கு முறிவை உருவாக்கும்.
சுகாதாரமின்மை: ஆரோக்கியமான உறவுக்கும் சுகாதாரத்திற்கும் என்ன தொடர்பு என நீங்கள் நினைக்கலாம். வியர்வை மற்றும் வாயில் இருந்து வரும் துர்நாற்றம் கூட உங்கள் எதிர்பாலினத்தவரை வெறுக்க வைக்கும் காரணியாக மாறலாம். எனவே புகைப்பிடித்த பின் வாயில் இருந்து வரும் வாசனையை போக்க மவுத்வாஷ் பயன்படுத்துவது, தினமும் நன்றாக தேய்த்து குளிப்பதோடு வியர்வை துர்நாற்றத்தை போக்க வாசனை திரவியம் உபயோகிப்பது போன்றவை சுகாதாரமாக இருக்க உதவுவதோடு, துணைக்கு உங்கள் மீது ஈர்ப்பை அதிகரிக்க உதவும்.
கட்டுப்பாடுகள் விதிப்பது : ஆண் - பெண் என யாராக இருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கையை வாழ அவரவருக்கு உரிமை உள்ளது. அவள் எனக்கானவள், அவன் எனக்கு சொந்தமானவன் என்ற மனநிலையை வளர்த்துக்கொண்டு, துணையின் வேலை, படிப்பு, நண்பர்கள், சுற்றுலா, உணவு, உடை போன்ற விஷயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதும், இதைத் தான் செய்ய வேண்டும் என கட்டளையிடுவதும் நச்சுத் தன்மை வாய்ந்த உறவுக்கான அறிகுறிகள் ஆகும். இப்படிப்பட்ட உறவுகள் நீண்ட காலம் நீடிக்க வாய்ப்பில்லை.