உங்கள் வாழ்க்கைத் துணைக்கு பிடித்தவராக இருக்க
31 தை 2022 திங்கள் 13:57 | பார்வைகள் : 9403
ஒரு கணவன் தன் மனைவியிடம் அல்லது ஒரு மனைவி தன் கணவனிடம் பின்வரும் குணாதிசயங்களை கடைபிடித்தால் அவர்களது மனதில் நீங்காத இடத்தை பிடிக்கலாம். அவை இதோ...
பொதுவாக ஆண், பெண் என இருபாலருக்குமே, தங்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணை நல்ல பண்பாளராக, அன்பு மிகுந்தவராக, தன்னை மிகவும் நேசிப்பவராக, உண்மையானவராக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இதே எதிர்பார்ப்பை நமக்கு அமையும் வாழ்க்கை துணைக்கு நாம் பூர்த்தி செய்கிறோமா என்ற கேள்வியும் எழுகிறது.
ஒரு கணவன் தன் மனைவியிடம் அல்லது ஒரு மனைவி தன் கணவனிடம் பின்வரும் குணாதிசயங்களை கடைபிடித்தால் அவர்களது மனதில் நீங்காத இடத்தை பிடிக்கலாம். அவை இதோ..
இரக்கம் : நீங்கள் ஓர் நல்ல வாழ்க்கை துணை என்றால் இரக்கம் மிகுந்தவராக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத்துணை மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தினர் மீதும் பொறுப்பு மற்றும் அக்கறை கொண்டவராக இருப்பது அவசியம். உங்கள் வாழ்க்கை துணை, ஏதேனும் பிரச்சனைகளில் சிக்கும் போது அவற்றுக்கு தீர்வு அளிப்பவராகவும், அவர்களது மனதை அமைதி கொள்ள செய்பவராகவும் இருக்க வேண்டும்.
நேரம் : நேரத்தை விலை கொடுத்து வாங்க முடியாது என்பது முதுமொழியாகும். அப்படி விலை மதிப்பில்லா நேரத்தை உங்கள் வாழ்க்கைத் துணையுடன் செலவு செய்ய நீங்கள் எவ்வளவு நேரம் ஒதுக்குகிறீர்கள் என்பதை பொருத்து உங்கள் மீதான அன்பு பலப்படும். எந்த நேரமும் கடமை, வேலை என்று மூழ்கி இருக்க கூடாது. வாழ்க்கைத் துணையிடம் அன்பாக பேசவும், பரிவோடு நடந்து கொள்ளவும் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்.
ஊக்கப்படுத்துதல் மற்றும் மரியாதை : ஒரு நல்ல வாழ்க்கை துணைக்கான அடையாளம் என்பது, தமது துணையை ஊக்கப்படுத்துவதும், அவருக்கு உந்துசக்தியாக அமைவதும் ஆகும். வாழ்க்கைத் துணையின் கருத்துக்களுக்கும், முடிவுகளுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும். எப்போதும் நம்முடைய கருத்துகளையும், முடிவுகளையும் அவர்கள் மீது திணிக்கக் கூடாது.
பிரச்சினைகளுக்கு தீர்வு காண நம்பிக்கை : பிரச்சினைகள் இல்லாத வீடுகளே இருக்க முடியாது. ஆனால், ஒவ்வொரு முறை பிரச்சனை எழும் போதும், அதற்கு விரைவாகவும், எல்லோரும் ஏற்கும்படியாகவும் தீர்வு காண்பவராக நாம் இருக்க வேண்டும்.
குழு மனப்பான்மை : வீட்டில் இதெல்லாம் கணவரின் வேலை, இதெல்லாம் மனைவியின் வேலை என்றெல்லாம் ஒதுக்கி விடக் கூடாது. அனைத்து வேலைகளையுமே இருவரும் பங்கு போட்டு செய்ய வேண்டும். ஒவ்வொருவரின் திருமண வாழ்விலும், குழு மனப்பான்மை மிக முக்கியமான குணாதிசயம் ஆகும். இருவரும் ஒற்றுமையுடனும், ஒத்துழைப்புடனும் வாழ்ந்தால் சண்டை சச்சரவுகளுக்கு வேலை இருக்காது.
தனி சுதந்திரம் : திருமணம் செய்து விட்ட ஒரே காரணத்திற்காக கணவன்-மனைவி ஆகிய இருவரின் மனங்களும், எல்லா சமயத்திலும் ஒன்றாகி விட முடியாது. சில சமயங்களில் இது என்னுடைய நேரம் என்ற சிந்தனை ஒவ்வொருவருக்கும் ஏற்படும். ஆகவே, ஒரு நல்ல கணவன் அல்லது மனைவி என்பவர் தனது வாழ்க்கைத் துணையின் தனி சுதந்திரத்தில் தலையிடக்கூடாது.
மகிழ்ச்சியான முகம் : உங்களுக்குள் ஒளிந்திருக்கும் நல்லவரை வெளிக்கொணருபவராக உங்கள் வாழ்க்கைத் துணை அமைய வேண்டும். எப்போதும் அனைவரிடமும் அன்பு காட்டுபவராக, கருணை உடையவராக, மரியாதை கொடுப்பவராக, அக்கறை செலுத்துபவராக, மகிழ்ச்சியுடன் இருப்பது அவசியமாகும்.