உங்கள் துணைக்கு நீங்கள் எப்போதுமே ‘முதல் சாய்ஸ்’ இல்லை என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
24 தை 2022 திங்கள் 15:12 | பார்வைகள் : 9149
உறவுகளைப் பொறுத்தவரை அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டாலும் விட்டுக்கொடுத்து செல்வது, ஒருவர் மீது மற்றொருவர் வைக்கும் நம்பிக்கை என்ற பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் தான் உறவின் பிணைப்பு அதிகமாகும். அதுமட்டுமின்றி மற்றவர்களைவிட தனக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று எல்லாருமே எதிர்பார்ப்பார்கள். காதலிப்பவர்கள், கணவன் மனைவி என்று குறைந்தபட்சமாக நேரம் செலவழிக்க வேண்டும்.
ஒரு சிலருக்கு காதலன் / காதலி அல்லது கணவன் / மனைவி எப்போதுமே இரண்டாவது பட்சம் தான் என்பதை போல நடந்து கொள்வார்கள். அதாவது அந்த உறவுக்கு, அந்த நபருக்கு முக்கியத்துவம் இருக்காது. உங்களுக்கு முன்னுரிமையும் முக்கியத்துவம் இல்லாமல் நீங்கள் எப்போதுமே இரண்டாவது சாய்ஸ் தான் என்பதை எப்படி தெரிந்து கொள்வது?
நீங்கள் எப்போது வெளியில் செல்ல விரும்பினாலும், டேட் அல்லது வீகெண்ட் பயணம் அல்லது சுற்றுலா செல்ல விரும்பினாலும் உங்கள் பார்ட்னர் எதற்குமே சரி என்று சொல்லாமல் இருப்பார். அதே நேரத்தில், சரி என்று சொல்லாமல் கடைசி நிமிடத்தில் உங்களுடன் திட்டம் போடுவது என்பது அவருக்கு வேறு சில முக்கியமான வேலைகள் அல்லது முன்னுரிமை அளிக்கக்கூடியவை இருக்கிறது என்பதை உணர்த்தும். அந்தத் திட்டம் செயல்படுத்த முடியாமல் போனதால் உங்களிடம் வந்திருக்கிறார். சில நேரங்களில் இது இயல்பானதுதான், ஆனால் எப்போதுமே உங்களுடன் இருக்கும் போது மட்டும் கடைசி நிமிடத் திட்டங்கள் அல்லது பயணங்கள் என்று முடிவு செய்வது நீங்கள் முக்கியம் இல்லை என்பதை குறிக்கிறது.
உங்கள் அழைப்பு, SMS என்று எதுவுமே கவனிக்கப்படாது
உங்களுக்கு முன்னுரிமை அளிக்காத போது, நீங்கள் அனுப்பும் செய்திகளும் கவனிக்கப்படாது. நீங்கள் அழைக்கும் போது வெயிட்டிங் காலில் இருந்தாலும், அல்லது முழு ரிங் சென்று கால் கட் ஆகி இருந்தாலும் திரும்ப அழைக்காமல் இருக்கலாம். நீங்கள் அனுப்பும் செய்தியைப் பார்த்துவிட்டு பதில் சொல்லாமல் இருக்கலாம். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்தாலும் உங்களை கவனிக்க மாட்டார். ஆனால், உங்கள் பார்ட்னருக்கு ஏதாவது தேவை என்று வரும்போது உங்களை தேடி வருவது ஆரோக்கியமான பழக்கம் அல்ல.
உங்களைப் பற்றி பேசுவதைத் தவிர்ப்பது
உங்களுக்கு முன்னுரிமை இல்லாமல் இருக்கும் போது, உங்களைப் பற்றி பேசுவதையோ அல்லது உங்களைப் பற்றி குறிப்பிடுவதைப் பற்றியோ கூட மிகவும் ஜாக்கிரதையாக எல்லா இடங்களிலும் தவிர்ப்பார்கள். பொதுவாக காதல் ஜோடிகளிடையே இது அதிகமாக ஏற்படும். சில திருமணமான ஜோடிகளிடம் கூட, மனைவி பற்றி கணவன் வெளியிடங்களில் பேசுவதை முற்றிலுமாகத் தவிர்ப்பார். உங்கள் உறவு எவ்வளவு தூரம் வலுவானது அல்லது எவ்வளவு தூரம் செல்லக்கூடும் என்பது தெளிவில்லாமல் இருக்கும்.
சரி என்பது சொல்லில் இருக்கும் செயலில் இருக்காது
நீங்கள் சொல்லும் எல்லாவற்றுக்கும் சரி என்று சொல்லிவிட்டு ஆனால் எதையுமே செயல்படுத்தாமல் எல்லாவற்றையும் ரத்து செய்வது உங்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்பதை தெளிவாக உணர்த்தும். உதாரணமாக நீங்கள் திரைப்படத்துக்குச் செல்லலாம் என்று புக் செய்து வைத்தால் அல்லது வெளியில் செல்லலாம் என்று திட்டமிட்டு இருந்தால் சரி என்று சொல்லிவிட்டு, கடைசி நேரத்தில் வர முடியாது என்று கூறும் பழக்கம் அதிகமாக இருந்தால் அதற்கு உங்களை விட மற்ற வேலைகளுக்கு / நபர்களுக்குத் தன அதிக முக்கியத்துவம் அளிக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
உங்களைப் பற்றி எதுவும் நினைவில் இருக்காது
ஒருவரை நேசிக்கும் போது, அவருடைய விருப்பு வெறுப்புகளை நினைவில் வைத்துக் கொள்வோம். அவருக்கு பிடித்தவற்றை செய்வதற்கு சின்ன சின்ன அளவிலாவது ஈடுபாடு காட்டுவோம். ஆனால் ஒருவர் மீது அவ்வளவாக ஆர்வம் இல்லாத போது அல்லது இரண்டாம் பட்சமாக கருதும் போது அவர்கள் சொல்லும் எதுவுமே நம் மனதில் இருக்காது. எனவே நீங்கள் சொல்வதை நினைவில் வைத்துக் கொள்ளாமல் இருந்தால், நீங்கள் அவருக்கு முக்கியத்துவம் இல்லை என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.