திருமணத்திற்கு பிறகு ப்ரேக்-அப் ஆவது எதனால்?
22 தை 2022 சனி 06:57 | பார்வைகள் : 9077
நம் முன்னோர்கள் கணவன்-மனைவி இருவரும் இனி வரும் நாட்களில் மனம் ஒத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் திருமணத்தை ஆயிரம் காலத்துப் பயிர் என்று குறிப்பிட்டனர். அவர்களிடையே பழக்கவழக்கங்கள், நடைமுறைகள், அன்பு, புரிதல், நம்பிக்கை மிக அவசியம். ஆனால், இன்றைய இளைய தலைமுறையினரின் உண்மையான அன்பிலும் உறவிலும் விரிசல்தான் எட்டிப்பார்க்கிறதே தவிர உயிர்த்துடிப்பு இல்லையென்றே சொல்லலாம். அதனால் தான், இன்றைய நவீன உலகில் திருமணம் என்பது இணையம் வழியாக நடைபெற்று அதன் மூலம் முடிவடைய துவங்கியுள்ளது.
தற்போது கூட தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகராக வளம் வரும் நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷும் திருமணமாகி 18 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளனர். அதேபோன்று, தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வளம் வரும் சமந்தாவும், நாக சைதன்யாவும் சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், வெகு சிலர் மட்டுமே, தங்கள் திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக கடந்து செல்கின்றனர். எனவே, ஆரோக்கியமான, வலுவான மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்விற்கான 6 எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. நல்ல நண்பராக இருங்கள்:
எந்த தகவலாக இருப்பினும், உங்கள் மனைவியிடம் முதலில் தெரியப்படுத்த வேண்டும். இது, உங்கள் வாழ்க்கையில் அவர்கள் பாதி என்ற நிலையை அவர்களுக்கு உறுதிப்படுத்துகிறது. நீங்கள் வெளியில் சிறந்த நண்பர்களைக் கொண்டிருந்தாலும், உங்கள் மனைவியுடன் வீட்டில் அதிக நேரத்தை செலவிடுங்கள். அடிக்கடி இருவரும் தன்னிச்சையான பயணங்களுக்குச் சென்று ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொள்ளுங்கள். இது உங்கள் இருவரையும் திருமண வாழ்வில் மகிழ்ச்சியுடன் வழி நடத்த உதவும்.
2. மனம் விட்டு பாராட்டுங்கள்:
உங்களுக்காக அவர்கள் செய்யும் எளிய விஷயங்களை மதிப்பிட கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் துணையிடம் அவர்கள் அணிந்திருக்கும் உடையில் அழகாக இருப்பதாகக் கூறுவது உண்மையில் அவர்கள் முகத்தில் அழகை பிரதிபலிக்கும். மேலும், எந்த நேரத்திலும் அவர்களின் குணங்கள் மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் புகழ்வது நிச்சயமாக அவர்களை ஊக்குவிக்கும்.
3. உங்கள் துணைக்கு உதவியாக இருங்கள்:
உங்கள் துணை சில வீட்டு வேலைகள் அல்லது அடிப்படை வசதிகளில் அவர்கள் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கும்போது அவற்றை செய்து முடியுங்கள். தனிப்பட்ட மற்றும் தொழில்ரீதியான அவர்களின் எதிர்பார்ப்புகளை குறைத்து மதிப்பிடாதீர்கள். ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துவது முக்கியம். அதிகப்படியான விமர்சன, மனச்சோர்வு அல்லது தீர்ப்பளிக்கும் நடத்தை உங்கள் துணையின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தி அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
4. துணையின் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருங்கள்:
உங்கள் துணையுடனான உங்கள் உறவு மிக முக்கியமானது, ஆனால் அது உங்களிடம் உள்ள துணையின் உறவாக மட்டும் இருக்கக்கூடாது. எனவே, ஆதரவுக்காக எப்போதும் உங்கள் துணையின் குடும்பத்தினரையும் வளையத்தில் வைத்திருங்கள். அதே சமயம், உங்கள் துணையை யாரிடமும் விட்டு கொடுக்காமல் பார்த்து கொள்ளுங்கள்.
5. சிறிய சிக்கல்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம்:
முடிந்தவரை சண்டையில் கூறும் விஷயங்களை லேசாக எடுத்துக் கொள்ளுங்கள். தம்பதிகளுக்கு இடையிலான மோதல்களுக்கு மன அழுத்தம் மிகவும் பொதுவான காரணம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவது அல்லது அவர்கள் செய்த விஷயங்கள் குறித்து வாதங்களை எடுப்பதை தவிர்ப்பது அவசியம். அவர்கள் கோபமாக இருந்தால், அவர்களை மகிழ்ச்சியடைய செய்யும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.
6. துணையுடன் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்:
கணவன்- மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்படும் சமயத்தில், கடந்த கால தவறுகளை கொண்டு வருவது நிலைமையை இன்னும் மோசமாக்கும். எனவே, சிக்கல்களை இணக்கமாக தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். பொதுவாக, வெவ்வேறு ஆளுமைகளைக் கொண்ட இரண்டு நபர்களிடையே, அதிக அளவில் கருத்து வேறுபாடு இருக்கும். இருப்பினும், நியாயமாக போராடி பிரச்சினையைத் தீர்க்கவும். எந்தவொரு விஷயத்திலும் உங்கள் இருவருக்கும் சமமான கருத்து இருப்பதை உறுதிப்படுத்தவும்.
எனவே, தம்பதியினர் மனம் விட்டுப் பேசுங்கள். இவை உங்கள் திருமண வாழ்க்கையை வெற்றிகரமானதாக மாற்றும்.