ஆண்கள் மனைவியை காதலிக்க ஆரம்பிக்கும் வயது தெரியுமா?
15 மார்கழி 2021 புதன் 11:51 | பார்வைகள் : 9225
உண்மையில் வயதான பிறகுதான் பெரும்பாலான ஆண்கள் மனைவியைப் புரிந்துகொள்ளத் துவங்குகிறார்கள். மனைவியின் சின்ன சின்ன விருப்பு வெறுப்புகள் அவர்கள் கண்களில் படுகின்றன.
எது செய்தாலும் மனைவியின் சௌகர்யத்தையும் கணக்கில் எடுக்கவேண்டும் என்று தோன்றுவதே வயதான பிறகுதான். அதற்கு முன் வரை எப்படியிருந்தாலும் சமாளித்துக்கொள்வாள் அவளுக்கெதற்கு ப்ரெஃபரன்ஸ் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் (சிலருக்கு) ஓடும்.
மனைவியை ஆண்கள் காதலிக்கத் துவங்குவதே ஐம்பது வயதிற்கு மேல்தான். மனைவியின் உடல் வனப்பு மறைந்து அன்பும் அக்கறையும் கண்ணில் படும் வயது அது.
கணவருக்கு வெல்லச்சீடை பிடிக்குமென்று கூட ஒன்றை இலையில் போடும்போதோ, எடுத்து வைத்துக் கொடுத்தாலோ, கிழங்களுக்கு இந்த வயசிலும் ரொமான்ஸ் பாரேன் என்று காதுபடப் பேசாத இளையோர் அமையவேண்டும். இல்லையெனில் சுண்டிப் போவார்கள்.
தான் ஏதாவது கல்யாணத்தில் போய் சாப்பிட்டால், வீட்டிற்கு எதற்கோ அழைப்பதுபோல் கால் செய்து உருப்படாமல் ஏதாவது பேசிவிட்டு, சாப்பிட்டியா என்று முடிக்கும் பெரியவர்களை எனக்குத் தெரியும்.
எங்கேயாவது மனைவிக்குப் பிடித்த தின்பண்டங்களைப் பார்த்தால் வாங்கிக்கொண்டு வந்து அதை பகிரங்கமாகக் கொடுக்கமுடியாமல் திணறும் ஆண்கள் பலர்.நேரடியாகக் கொடுக்க ஈகோ இடம் தராது.
மற்றொரு விஷயம், சிறு வயதில் முகத்திற்கு நேராகப் பல விஷயங்கள் பேசியபோதும் அமைதியாகக் கேட்டுக்கொண்ட அதே பெண்ணில்லை அவள். பெண்களுக்கு ஆண்களை விட மனோ பலமும், குடும்ப விஷயத்தில் அனுபவமும் அதிகம். எனவே, இப்போது கன்னா பின்னாவென்று பேசினால் திருப்பிக் கேட்டுவிடுவாளோ என்று ஒரு தயக்கம்.
அப்பா அம்மா ரூம்தானே என்று பெற்ற மகனோ மகளோ கதவைத் தட்டாமல் அவர்களது தனியறையில் நுழைவது அவர்களுக்கு சங்கடம் தரும்.
தனியறை இல்லாவிட்டாலும் கூட அவர்கள் இருவரின் உரையாடலை கவனிப்பதையும், அதில் குறுக்கே நுழைந்து பதில் சொல்வதையும் பெரும்பாலும் அவர்கள் விரும்புவதில்லை.
60 வயது வரை மனைவியை வீட்டில் விட்டுவிட்டு அலுலக வேலை என்று ஊர் ஊராகச் சுற்றிவிட்டு, வயதானபின் ஒருநாள் கூட மனைவியைப் பிரிய முடியாமல் தவிக்கும் பல பெரியவர்கள் உண்டு.
காமம், மற்றும் உடல் சார்ந்த விஷயங்களுக்காகத்தான் அந்தரங்கம் என்றல்ல. அன்பையும் காதலையும் பரிமாறிக்கொள்ள பெரியவர்களுக்கு தனிமை தேவைப்படுகிறது.அதை மதிக்கும் இளைய தலைமுறை அமைந்தால் அது வரமாகும்.