காதல் திருமணத்திற்கு உங்கள் பெற்றோரை சம்மதிக்க வைக்க வேண்டுமா..?
18 ஐப்பசி 2021 திங்கள் 06:18 | பார்வைகள் : 9019
நம் நாட்டை பொறுத்த வரை பெற்றோர் மற்றும் பெரியவர்கள் மூலம் நடக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தினால் வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பாரம்பரிய முறையே இன்னும் அதிகம் நம்பப்படுகிறது. ஆனால் சமீபத்திய நவீன கால வாழ்க்கையில் இதை செய்யாத நபர்களே இல்லை என்னும் அளவிற்கு பள்ளி பருவத்திலேயே காதல் என்ற அத்தியாயம் துவங்கி விடுகிறது. எனவே தற்போது காதல் திருமணம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.
ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் காதல் திருமணத்தை விட, பெரியவர்களால் நிச்சயிக்கப்படும் திருமணமே தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை சிறப்பாக்கும் என்று உறுதியாக நினைக்கிறார்கள். இதனால் காதல் எவ்வளவு முக்கியமோ அதை விட பெற்றோர் முக்கியம் என்பது தெரிந்தாலும், பெற்றோர் சம்மதமின்றி திருமண வாழ்க்கைக்குள் பலர் நுழைகின்றனர். பெற்றோரை காயப்படுத்தாமல் காதல் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க உதவும் சில வழிகளை இங்கே பார்க்கலாம்.
திருமணத்தைப் பற்றி பேசும் முன் உங்கள் பெற்றோருடனான உங்கள் உறவை வலுப்படுத்த சிறிது நேரம் ஒதுக்குங்கள். குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஒருவரை ஒருவர் நேசித்தாலும் வளர வளர சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக இந்த உறவுக்குள் சில நேரங்களில் இடைவெளி ஏற்படுகிறது. சிறு வயதில் உங்கள் பெற்றோரை எப்படி நேசித்தீர்களோ, எப்படி அன்பாக இருந்தீர்களோ அதே போன்றதொரு ஆரோக்கியமான உறவை அவர்களிடம் பராமரித்து, நட்பாக இருங்கள். இது உங்கள் காதலை அவர்களிடம் பக்குவமாக எடுத்து சொல்லவும், சமாதானப்படுத்தவும் பெரிதும் உதவும்.
திருமணத்தைப் பற்றிய உங்கள் பெற்றோரின் பார்வையை புரிந்து கொள்வது மிகவும் உதவியாக இருக்கும். உங்களுக்கு திருமணம் செய்வது பற்றிய பேச்சு வீட்டில் எழும் சமயத்தில்,பெற்றோருடன் நீங்கள் எப்போதும் நட்பாக பழகும் குணம் உங்களுக்கு உதவும். முதலில் திருமணத்தைச் சுற்றியுள்ள விஷயங்களை பற்றி பேசி அவர்களது எதிர்பார்ப்புகள் என்ன, வருங்கால மருமகன் / மருமகள் எப்படி அமைய வேண்டும், எந்த மாதிரியான குணங்களை கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதை முழுவதும் அறிந்து கொள்ளுங்கள்.
பின்னர் திருமணத்தை பற்றிய உங்கள் சொந்த விருப்பங்களை பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களது எதிர்பார்ப்பு என்னவென்பதை அவர்கள் அறிந்து கொள்ள இது போன்ற உரையாடல்கள் உதவும்.
உங்கள் கருத்தை பெற்றோர் காது கொடுத்து கேட்க துவங்கிய பிறகு, காதல் திருமணம் பற்றிய உங்கள் பார்வை மற்றும் சாதகங்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் ஏற்படும் சிக்கல்களை மிகவும் அமைதியாக அவர்களுக்கு விளக்கி சொல்லுங்கள். காதல் திருமணம் பற்றிய எதிர் கருத்துக்களை அவர்கள் முன்வைக்கும் போது, அவர்களது மரியாதையை குறைத்து விடாமல் இன்னும் கனிவாக பேசி ஏன் நீங்கள் காதலுக்கு ஆதரவாக இருக்கிறீர்கள் என்பதை விளக்கி கூறுங்கள். பின்னர் உங்கள் காதலை வீட்டில் உள்ளவர்களுக்கு வெளிப்படுத்துங்கள்.
அனைத்து பெற்றோரும் காதலை எளிதில் ஏற்று கொள்ள மாட்டார்கள். அதே போல எல்லா உறவினர்களும் காதலுக்கு எதிராக இருக்க மாட்டார்கள். உங்கள் பெற்றோர் மிகவும் மதிக்க கூடிய உறவுக்கார பெரியவர்களின் குணம் அறிந்து யாரிடம் உதவி கேட்க முடிகிறதோ கேளுங்கள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பின் அவர்களால் உங்கள் பெற்றோரை சமாதானப்படுத்தி விட முடியும்.
எல்லாம் நல்லபடியாக முடிந்து விட்டால் உங்கள் காதலரை குடும்ப உறுப்பினர்களுக்கு நேரில் அறிமுகப்படுத்துங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவர் பற்றியும் மறக்காமல் உங்கள் காதலரிடம் விரிவாக சொல்லி வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள். அபோது தான் அவர்களால் உங்கள் உறவினர்களை எளிதாக கையாள முடியும். உறவினர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நீங்களும் உங்கள் காதலரும் இருப்பது அவர்களை மகிழ்ச்சியுடன் திருமணத்திற்க்கு சம்மதம் சொல்ல வைக்கும்.