மகளின் காதலும்.. அம்மாக்களின் கவலையும்..
20 புரட்டாசி 2021 திங்கள் 16:47 | பார்வைகள் : 8924
உணர்வுரீதியான அன்பு, அனுசரணை, பாதுகாப்பு, நம்பிக்கை போன்ற அனைத்துமே மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறது. அதனால்தான் சிறுவயதில் இருந்தே மனிதர்கள் அனைவரும் அன்புக்கு அடிமையாகி விடுகிறார்கள். பொதுவாக தாய்மார்கள் அன்பு, அனுசரணை, பாதுகாப்பு போன்ற அனைத்தையும் சிறுவயதில் இருந்தே தங்கள் மகள்களுக்கு உணர்வுரீதியாக வழங்கிக்கொண்டிருப்பார்கள்.
மகள்களும் தாயின் அன்பிற்குள் அடைபட்டுக்கிடப்பார்கள். ஆனால் மகள் பருவமடைந்ததும் அவள் எதிர்பார்க்கும் அன்பு, அனுசரணையின் தன்மையில் மாற்றம் ஏற்படுகிறது. அப்போது அவள் அதனை வெளியே தேடத் தொடங்குகிறாள். அந்த தேடலில் உருவாகும் நட்பே, எதிர்பால் ஈர்ப்பு மூலம் காதலாக வலுப்பெறுகிறது.
சிறுவயதில் கிடைத்தது போன்ற அன்பும், பாசமும் யாருக்கெல்லாம் அவர்களது வீட்டிலே டீன்ஏஜிலும் கிடைக்கிறதோ அவர்களெல்லாம் பெரும்பாலும் காதல் வலையில் விழுவதில்லை.
பெண்கள் பருவமடைந்துவிட்டதும், தானும் பெரிய மனுஷிதான் என்று நினைத்து தனித்துவம் பெற விரும்புகிறார்கள். மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அந்த தனித்துவத்தை தக்கவைக்க விரும்புகிறார்கள். அப்போது மகளிடம் என்ன மாற்றங்கள் ஏற்படுகிறதோ, அதற்கு தக்கபடி பெற்றோர் மாறி அவளை நேசிக்க வேண்டும். நேசித்தால், அவர்களது உணர்வுக்கு தகுந்த மதிப்பு குடும்பத்தினர் மூலமாகவே கிடைத்துவிடும். கிடைத்துவிட்டால் எளிதாக வெளியே காதல் வலையில் விழமாட்டார்கள்.
அதையும் மீறி உங்கள் மகள் காதல்வலையில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
உடனே மனங்குழம்பி நிதா னத்தை இழந்து விடாதீர்கள். மகளை குற்றவாளியாக்கி, தனிமைப்படுத்தி தண்டிக்க முயற்சிக்க வேண்டாம். அவளை பதற்றப்படுத்தாமல் அமைதிப்படுத்தி, உட்காரவைத்து பொறுமையாக பேசுங்கள். அவளை நிதானமாக யோசிக்கவையுங்கள்.
அவளிடம், ‘நான் உன்னை நம்புகிறேன். உனக்கு எதிராக எந்த முடிவும் எடுக்கமாட்டேன். அதே நேரத்தில் சில உண்மைகளை உனக்கு புரியவைக்க வேண்டியது என் கடமை’ என்று கூறி, அவளது காதலின் தன்மையையும், சூழ்நிலையையும் உணர்த்துங்கள்.
படிக்கிற வயதில் அவள் காதலித்தால், அந்த காதலால் அவளது கல்வியும், எதிர்காலமும் கேள்விக்குறியாவதை சுட்டிக்காட்டி படிப்பு முடியும் வரை காதலை தள்ளிவைக்கும்படி எடுத்துரையுங்கள். ஆத்திரம், அவசரம் இல்லாமல் பக்குவமாக இதை செய்யவேண்டும்.
பெரும்பாலான தாய்மார்கள் மகளின் காதலை எடுத்த எடுப்பிலே நிராகரிக்கிறார்கள். அப்படி நிராகரித்தால் அவள் தனது தாயை எதிரியாக நினைப்பாள். அதனால் பாதுகாப்பு தேடி வீட்டைவிட்டு வெளியேற முயற்சிக்கலாம்.
அவள் வீட்டைவிட்டு வெளியேறுவது நல்லதல்ல. அதுபோல் காதலனை கண்மூடித்தனமாக நம்புவதும் சரியல்ல. அதனால் அவளுக்கு எதிரான எந்த முடிவையும் எடுக்கப்போவதில்லை என்று முதலிலே அவளுக்கு நம்பிக்கை கொடுங்கள். காதலை பற்றி யோசித்து முடிவெடுக்க தேவையான கால இடைவெளியையும் கொடுங்கள். கால இடைவெளியில் பலர் உண்மையை உணர்ந்து தப்பான காதலை கைவிட்டிருக்கிறார்கள்.
காதல் வேறு, காமம் வேறு என்பதை மகளுக்கு புரிய வையுங்கள். காதல் என்ற பெயரில் யாரும் அவளை ஏமாற்றிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கச்சொல்லுங்கள். இப்போது சமூகத்தில் எப்படி எல்லாம் பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையும் பக்குவமாக சுட்டிக்காட்டுங்கள்.
பெண்களின் உடல் புனிதமானது. காதல் என்ற பெயரில் அதில் ஆளுமை செலுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதை அடிக்கடி உணர்த்துங்கள்.
டீன்ஏஜ் காதல் கவலைக்கும், கலவரத்திற்கும் உரியதல்ல. கவனிக்கத்தகுந்தது. சரியான முறையில் அணுகினால், உங்கள் மகளை அதிலிருந்து மீட்டுவிடலாம்.