கணவன்-மனைவி விவாகரத்து பின் வாழும் வாழ்க்கை கொடுமையானது....
28 ஆடி 2022 வியாழன் 05:54 | பார்வைகள் : 16137
மனிதர்களின் அடிப்படை குணாதிசயங்களில் இருந்து இந்த நூற்றாண்டில் காணாமல்போன விஷயங்கள் மூன்று. அவை: பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை. இவைகள் இல்லாமல் போனதால்தான், கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு விவாகரத்துதான் என்ற நிலை சமூகத்தில் ஏற்பட்டிருக்கிறது.
விவாகரத்துக்கு மாற்றாக வேறு எதையும் அவர்கள் கருத்தில்கொள்வதில்லை. முறித்துக்கொள்வது மட்டுமே முடிவானது என்று கருதுகிறார்கள். ஆணும், பெண்ணும் சரி சமம் என்று தலைநிமிர்ந்து நிற்கும் இன்றைய தலை முறையினரிடம் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் எந்த சிக்கலுக்கும் சரியான தீர்வு காணும் பொறுமை இல்லை. பொறுமையின்றி, நிதானமின்றி அதிரடியும் ஆவேசமுமாக களத்தில் இறங்கி சண்டையிட்டுக்கொண்டு விவாகரத்து வாங்கிவிடுகிறார்கள்.
ஆனால் விவாகரத்துக்குப் பிறகு வாழும் வாழ்க்கை மிகவும் கொடுமையானது. அதைப் பற்றி பலரும் யோசிப்பது இல்லை. கையில் பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற மனோபாவத்தில் விவாகரத்து முடிவு எடுக்கப்படுகிறது. ஆனால் இழந்த எதையும் பணத்தால் வாங்கமுடியாது என்பதை உணரும்போது அவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கும், விரக்திக்கும் உள்ளாகிவிடுகிறார்கள். .
மனிதர்கள் எல்லோருமே தவறு செய்யக்கூடியவர்கள்தான். அதை திருத்திக்கொள்ளும் முயற்சிதான் வாழ்க்கை. திருமணத்துக்கு முன்பு செய்யும் தவறுகளுக்காக பெற்றோர் பிள்ளைகளை தூக்கி எறிவது இல்லை. ஆனால் திருமணத்துக்கு பிறகு செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவரை தூக்கி எறியும் முடிவுக்கு இன்னொருவர் வந்துவிடுகிறார்.
திருமணத்துக்கு முன்பு - திருமணத்துக்கு பின்பு என்று ஒருவருடைய வாழ்க்கையை இரண்டாக பிரித்துப் பார்த்த காலம் போய், இப்போது விவாகரத்துக்கு முன்பு - பின்பு என்று பிரித்துப் பார்க்கிறார்கள். அதில் பிந்தைய காலம் அநேகமாக பெண்களுக்கு இருண்ட காலம் ஆகிவிடுகிறது.
விவாகரத்துக்கு பிறகு ஆண்களும் அதிகமான மனநெருக்கடிக்கு உள்ளாகி விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய தொழில் பாதிப்படைகிறது. 'தன்னைப் பற்றி தனக்கு பின்னால் என்ன பேசிக்கொள்வார்களோ!' என்ற எண்ணம் அவர்களுடைய நட்பு வட்டாரத்தை குறைக்கிறது அல்லது சிதைக்கிறது.
அப்போது, தான் செய்யும் சின்னச் சின்ன தவறுகள் கூட, பெரிதாகி தன் கண்முன்னே வந்து நின்று மிரட்டும். அந்த நேரத்தில் தன் மீதே தனக்கு கோபமும், வருத்தங்களும் ஏற்பட்டு மன அழுத்தம் எல்லைமீறும். இதனால் காரை வேகமாக ஓட்டி தாறுமாறாக செல்வது, மது அருந்துவது, உறவுகளை புறக்கணிப்பது என்று முரண் பாடான பாதையில் அவர்கள் பயணிக்க தொடங்கிவிடுவார்கள்.
அதனால் அவர்களது மாண்பும், மரியாதையும் சிறிது சிறிதாக அவர்களுடைய வாழ்க்கை யில் இருந்து விடைபெற்று சென்றுகொண்டே இருக்கும். இந்த இழப்பை பணத்தாலும், பதவியாலும் ஈடு செய்ய முடியாது என்பதை உணரும்போது, வாழ்க்கையில் தவறு செய்துவிட்டதை புரிந்துகொள்வார்கள்.
பெண்கள்தான் விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். என்னதான் மனதளவில் பெண்கள் தைரியமானவர்களாக இருந்தாலும், அவர்களுடைய சமூக அந்தஸ்து குறைந்துவிடும். அதற்குதக்கபடி பெண்கள் தங்கள் மனதை பக்குவப்படுத்திக் கொள்ளாவிட்டால், மனதளவில் உடைந்துபோவார்கள்.
அப்போது தங்களுக்கு முன்னால் இருக்கும் உலகம் வேறு, தங்களுக்கு பின்னால் இயங்கும் உலகம் வேறு என்பதை உணர்வார்கள். அப்படி உணர்கிறபோது அவர்களுக்குள் இன்னொரு கேள்வி எழும். அது, 'நாம் மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறோமோ?' என்ற கேள்வி! அப்போது விவாகரத்து என்பது தான் எடுத்த தவறான முடிவு என்ற குற்ற உணர்வு தோன்றும். தனது எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கவலையும் தோன்றும். தன் வயதை ஒத்தவர்கள் வாழும் சந்தோஷ வாழ்க்கையும் கண்களை உறுத்தி, கண்ணீர் வரச்செய்யும். அதனால் மணவாழ்க்கையை முறித்துக்கொள்ளாமல், பொருந்திப்போவதே சிறந்தது.