தாம்பத்திய ரகசியங்கள்
26 வைகாசி 2022 வியாழன் 15:43 | பார்வைகள் : 10870
கணவன்-மனைவி இடையே சச்சரவுகள், சண்டைகள், வாக்குவாதங்கள் ஏற்படும்போது இருவரும் நிதானம் இழந்துவிடுவது உறவில் விரிசல் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது. இருவரில் யாராவது ஒருவர் சட்டென்று கோபம் கொள்வது பிரச்சினையை அதிகப்படுத்திவிடுகிறது. வாழ்க்கையில் எத்தகைய நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் மகிழ்ச்சியை விதைக்கும் புன்னகையை தக்கவைத்து கொள்ள வேண்டியது அவசியமானது. எத்தகைய பிரச்சினைகள் எழுந்தாலும் அன்றைய நாளின் இறுதிக்குள் இருவரும் சமாதானமாகி மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் தூங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு செய்ய வேண்டிய சில விஷயங்கள்:
* உண்மையிலேயே வாழ்க்கை துணையை நேசிக்கிறீர்கள் என்றால், அவரை காயப்படுத்தி அழ வைக்கக்கூடிய எதையும் செய்ய மாட்டீர்கள். அதற்கு பதிலாக, ஒவ்வொரு நாளும் அவரை உற்சாகப்படுத்தும் விஷயங்களை செய்ய வேண்டும். மனைவியை மகிழ்விப்பதற்கான முதல்படி, உங்களுக்குள் மகிழ்ச்சியை தக்கவைத்துக்கொள்வதுதான். ஏனெனில் கணவர் சந்தோஷமான மனநிலையில் இல்லாவிட்டால் அவரால் மனைவியை மகிழ்விக்க முடியாது. அதனால் ஜாலியான நபராக இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். நேர்மறையான சிந்தனை, நகைச்சுவை உணர்வு மிக்க நபராக இருங்கள்.
* மனைவியின் மனநிலையை கவனத்தில் கொள்ளுங்கள். அவர் சோர்வுடனோ, சலிப்புடனோ இருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு முயற்சியுங்கள். வீட்டுவேலைகள்தான் பெரும்பாலும் மனைவியை நெருக்கடிக்குள்ளாக்கும். அவருடன் இணைந்து சின்ன சின்ன வேலைகளை செய்து முடிக்கலாம்.
* மனைவியின் ஆடை, அலங்கார நேர்த்தியை எப்போதும் பாராட்டுங்கள். அதனை அவர் எதிர்பார்ப்பார். குறிப்பாக வெளி இடங்களுக்கு செல்லும்போது தனது ஆடை தேர்வு எப்படி அமைந்திருக்கிறது என்பது பற்றி கணவர் கருத்து கூற வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவார். அவருடைய உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுங்கள். ஏதேனும் குறை இருந்தால் தயங்காமல் சொல்லுங்கள். அதற்காக கோபப்பட மாட்டார். அதனை திருத்திக்கொள்வதற்குத்தான் முயற்சி செய்வார்.
* மனைவியிடம் பொய் பேசுவதை தவிர்த்துவிடுங்கள். அது உங்கள் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைத்துவிடும். எந்தவொரு சூழலிலும் உண்மையை பேசுங்கள். அது உங்கள் மீதான மதிப்பை உயர்த்தும்.
* மனைவி செய்யும் சிறு சிறு தவறுகளை மனம் நோகாமல் சுட்டிக்காட்டுங்கள். அதே தவறை திரும்ப செய்தாலும் கடிந்து கொள்ளாமலும், வாய்க்கு வந்தபடி திட்டாமலும் நிதானமாக தவறுகளை சரி செய்வதற்கு ஆலோசனை வழங்குங்கள்.
* மனைவி ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் கோபமாக இருந்தால், கணவரும் பதிலுக்கு கோபப்படுவதோ, எரிச்சல் கொள்வதோ அழகல்ல. அது இருவருக்கும் இடையே இடைவெளியை அதிகப்படுத்திவிடும். மனைவி கோபமாக இருந்தாலும் புன்னகையுடன் கடந்து செல்லுங்கள்.
* மனைவி ஏதேனும் முக்கிய வேலையில் இருந்தால் அவரது கவனத்தை திசை திருப்பும் விதத்தில் பேச்சு கொடுக்காதீர்கள். அவருக்கு உதவி செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். அதைவிடுத்து அவரிடம் ஏதேனும் வேலை சொல்லிக்கொண்டிருந்தால் அவர் கோபம் அடையக்கூடும். இருவருக்கும் இடையே சச்சரவுகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
* வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வீடு திரும்பியதும் அன்றைய நாளில் நடந்த சம்பவங்களை கணவரிடம் கூறுவதற்கு ஆர்வம் காட்டுவார். அதனை புரிந்து கொண்டு அவர் பேசுவதை காது கொடுத்து கேளுங்கள். அதுபோல் அன்றைய நாளில் நடந்த உங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
* வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், அவருடைய விருப்பங்களை கேட்டறிந்து ஓய்வு நாளில் அதனை நிறைவேற்றுவதற்கு மறக்காதீர்கள்.
* மனைவி ஏதாவது ஒரு பொருளை விரும்பி கேட்கும் போது, கையில் பணம் இல்லாதபட்சத்தில் அடுத்த மாதம் வாங்கி தருவதாக கூறலாம். அதைவிடுத்து ‘கையிருப்பில் பணம் இல்லாததை சுட்டிக்காட்டி’ அவர் மனம் நோகும்படி வார்த்தைகளை உச்சரித்துவிடக்கூடாது. அந்த பொருள் அவசியம் தேவையில்லாத பட்சத்தில் நிதானமாக பேசி புரியவைக்கலாம்.
* மனைவி ஏதேனும் தவறு செய்திருந்தால் அதனை மனதில் வைத்திருந்து, தக்க சமயத்தில் சுட்டிக்காட்டி பேசி மனம் நோகச்செய்யக்கூடாது. தேவையில்லாமல் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களை பற்றி பேசவும் கூடாது. அது மனைவி மனதில் வெறுப்புணர்வை விதைத்துவிடும்.
* தம்பதியர் இருவரும் பேசும்போது வாக்குவாதம் ஏற்படும் சூழல் உருவானால் யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து பேசுவதுதான் சரியானது. மற்றவர்கள் முன்பும் துணையை விட்டுக்கொடுத்து பேசக்கூடாது.
* மனைவி செய்யும் வீட்டு வேலைகளில் குறை கண்டுபிடிப்பதையே வாடிக்கையாக கொள்ளக்கூடாது. தவறு இருக்கும் பட்சத்தில் அவருடன் சேர்ந்து அந்த தவறை திருத்துவதற்கு முயற்சிக்க வேண்டும். சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குடிகொள்ளும்.