கட்டிப்பிடிப்பதால் உடலில் ஏற்படும் அதிசயங்கள்
22 சித்திரை 2022 வெள்ளி 06:51 | பார்வைகள் : 10108
நாம் மகிழ்ச்சியாகவோ, சோகமாகவோ, உற்சாகமாகவோ இருக்கும்போது மனதுக்கு பிடித்தமானவர்களை கட்டிப்பிடித்தோ, கைகுலுக்கியோ அந்த தருணத்தை அனுபவிப்போம். அப்படி அரவணைப்பது ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவும். கட்டிப்பிடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகளையும் பெறலாம்.
கட்டிப்பிடிப்பது ‘காதல் ஹார்மோன்’ எனப்படும் ஆக்ஸிடாஸின் அளவை அதிகரிக்கச் செய்யும். அந்த காதல் ஹார்மோன் இதய ஆரோக்கியத்தில் நேர் மறையான விளைவை ஏற்படுத்தக்கூடியது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மையும் சேர்க்கும். 20 வினாடிகள் கட்டிப்பிடிப்பது, 10 நிமிடங்கள் கைகளை இறுக பற்றிக்கொள்வது ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, மன அழுத்தம் போன்றவற்றை குறைக்கக்கூடும். கட்டிப்பிடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காதல் ஹார்மோன் உடலில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
குழந்தைகள் சிறப்பாக செயல்படும்போது சாக்லேட் கொடுத்து பாராட்டுவார்கள். பரிசு கொடுத்தும் ஊக்கப்படுத்துவார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் இன்னும் சிறப்பாக செயல்பட தொடங்குவார்கள். இதேபோல் கட்டிப்பிடிப்பது, முதுகில் தட்டுவது, கைகுலுக்குவது போன்ற செயல்பாடுகள் நரம்பு மண்டலத்தில் அதிர் வலைகளை ஏற்படுத்தி ஆன்மாவில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று நம்பப்படுகிறது. மகிழ்ச்சியையும் உணர வைக்கிறது.
கட்டிப்பிடிப்பது போல் சிலர் தொடுதல் மூலம் மன வருத்தத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறுவார்கள். அத்தகைய ஆறுதல் சம்பந்தப் பட்டவரிடம் குடிகொண்டிருக்கும் மன அழுத்தத்தை குறைக்க உதவும். அந்த சமயத்தில் கட்டிப்பிடிப்பதும் அன்பைக் காட்ட சிறந்த வழிமுறையாக அமையும்.
கட்டிப்பிடித்து அரவணைப்பது பயத்தை குறைக்கவும் உதவும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலவீனமாக இருப்பவர்களுக்கு ஆறுதல்தான் அரு மருந்தாகும். வெறுமனே ஆறுதல் கூறாமல் அரவணைப்பது கவலையை குறைக்கவும் உதவும். தனிமை உணர்வில் இருந்து விடுபடுவதற்கும் வித்திடும். மிகவும் பிடித்தமான பொருளை தொடுவது பயத்தை குறைக்க உதவும் என்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. டெட்டி பியர் பொம்மைகள் அல்லது தலையணையைக் கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்க விரும்புவதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்.
கோபம், பயம், வெறுப்பு, நன்றி உணர்வு, சோகம், மகிழ்ச்சி, அன்பு மற்றும் அனுதாபம் போன்ற பல்வேறு உணர்வுகளையும் தொடுதல் மூலம் வெளிப்படுத்த முடியும்.
கட்டிப்பிடிப்பது ஆறுதல் அளிப்பதோடு மற்றவர்களுடன் நெருக்கத்தை வலுப் படுத்திக்கொள்வதற்கும் வித்திடும்.