Paristamil Navigation Paristamil advert login

மகிழ்ச்சியாக வாழ்வதற்கு என்ன செய்யலாம்?

மகிழ்ச்சியாக வாழ்வதற்கு என்ன செய்யலாம்?

1 சித்திரை 2022 வெள்ளி 04:09 | பார்வைகள் : 9563


 சிலர் தாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் வெளிக்காட்டிக்கொள்வார்கள். மகிழ்ச்சி என்பது உண்மையில் ஆழ் மனதில் இருந்து வெளிப்பட வேண்டும். மகிழ்ச்சியாக இருப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றிய பட்டியல் இது.

 
1. மகிழ்ச்சிக்கு முன்னுரிமை கொடுங்கள்:
 
 
மகிழ்ச்சியாக இருப்பதற்கு முதல் படி, மகிழ்ச்சியான மன நிலையை தக்கவைத்துக்கொள்வதற்கு முன்னுரிமை கொடுப்பதாகும். உங்களின் தேவைகள் பற்றியும், எதை விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றியும் புரிந்துகொள்ளவும் இது உதவும். அவ்வாறு செய்வது மகிழ்ச்சிக்கு பங்களிக்கும் வழிமுறையாகவும் அமையும். உங்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். அதாவது தனிமையில் அமர்ந்து உங்களைப் பற்றி சிந்தியுங்கள். அதன் மூலம் உங்கள் உணர்வுகளை நன்றாக புரிந்துகொண்டு அதன்படி செயல்படலாம். உடல் ஆரோக்கியத்தை போல் மன ஆரோக்கியத்தையும் கவனிக்க வேண்டியது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
 
2. உங்களை கவனித்துக் கொள்ளுங்கள்:
 
மகிழ்ச்சியாக இருப்பது உங்கள் செயல்பாடுகளில்தான் இருக்கிறது. எனவே உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக மற்றொரு நபருக்காகவோ, சிறந்த சந்தர்ப்பங்களுக்காகவோ காத்திருக்க வேண்டாம். அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தை குறைக்கவும், டோபமைன் எனப்படும் நல்ல ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கவும் தியானம் மேற்கொள்ளலாம். ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை கடைப்பிடிக்கலாம். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடலாம்.

3. நிகழ்காலத்தில் இருங்கள்:
 
உண்மையிலேயே நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் எதிர்காலத்தை பற்றி சிந்திப்பதையோ அல் லது திட்டமிடுவதையோ நிறுத்துங்கள். நிகழ்காலத்தின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அன்றைய நாளை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்கு முயற்சியுங்கள். கடந்த காலத்தை பற்றி அதிகம் சிந்திக்காதீர்கள். எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறதோ என்று எதிர்மறையாக சிந்தித்து கவலைப்படாதீர்கள். நீங்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் பாராட்டுவதற்கு நேரம் ஒதுக்குங்கள். நிகழ்காலத்தை அனுபவிப்பதற்கு இன்றே உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள்.
 
4. உண்மையான உறவுகளை நாடுங்கள்:
 
உங்கள் நலன் மீது அக்கறை கொள்ளும் அர்த்தமுள்ள உறவுகளை வைத்திருப்பது, அவர்களுடன் போதுமான நேரத்தை செலவிடுவது, மகிழ்ச்சியைத் தரும் செயல்களை செய்வது போன்றவைதான் மகிழ்ச்சிக்கு ஆதாரமாக விளங்குபவை. ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், உண்மையான மற்றும் அர்த்தமுள்ள உறவுகளை கொண்டிருப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே உண்மையான உறவுகளிடம் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்களோ அந்த அளவுக்கு மகிழ்ச்சியான மற்றும் அமைதியான நபராக நீங்கள் மாறலாம்.
 
5. விரும்பியதை செய்யுங்கள்:
 
உங்களுக்கு எது பிடிக்குமோ அதனை தயங்காமல் செய்யுங்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ? என்று சிந்திப்பதை விட்டொழியுங்கள். தூங்க விரும்பினால், நன்றாக தூங்குங்கள். பிடித்தமான உணவை சாப்பிட விரும்பினால், உடனே சாப்பிடுங்கள். சுற்றுலா செல்ல விரும்பினால், இன்றே திட்டமிடுங்கள். பயனுள்ள ஒன்றை செய்ய விரும்பினால், தாமதிக்காமல் உடனே களத்தில் இறங்கி விடுங்கள். வித்தியாசமான, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். அவ்வாறு செய்வது மன அழுத்தத்தையும், கவலைகளையும் குறைப்பது மட்டுமல்லாமல் சுறுசுறுப்புடன் செயல்பட தூண்டும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்