உங்கள் திருமண வாழ்க்கை சந்தோஷமா இருக்க வேண்டுமா..?
24 பங்குனி 2022 வியாழன் 11:01 | பார்வைகள் : 9712
இன்பம், துன்பம், அன்பு, அரவணைப்பு, சண்டை, கோபம் என எல்லாமும் நிறைந்தது தான் திருமண வாழ்க்கை. திருமணம் முடிந்த நாளில் இருந்து ஆயுள் முடியும் வரை எல்லா நாளும் ஒரே மாதிரியாக மகிழ்ச்சியுடன் இருந்து விடாது. ஆனால், அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே இருந்தால், வாழ்க்கை மிக வேகமாக கசந்து விடும். இதன் விளைவாக விவாகரத்து பெறும் முயற்சிகளும் இருக்கலாம்.
இத்தகைய சூழலில் உங்கள் வாழ்க்கையில் எந்தெந்த விஷயங்கள், இருவருக்குள் சண்டை ஏற்பட காரணமாக இருக்கின்றன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சண்டைக்கு உரிய காரணங்களை புரிந்து கொண்டு, அவற்றை ஒதுக்கி வைத்தால் மட்டுமே வாழ்க்கையில் மகிழ்ச்சி நிரம்பும்.
நடைமுறைக்கு ஒவ்வாத எதிர்பார்ப்புகள்
உங்கள் கணவன் அல்லது மனைவியிடம் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளை வைத்திருப்பது தவறாகும். எல்லோரும் இயல்பான மனிதர்கள் தான். உங்கள் வாழ்க்கை துணை மட்டும் சூப்பர்மேன் போல நீங்கள் நினைத்த அனைத்தையும் நிறைவேற்றி விட முடியாது. ஆகவே, உங்கள் வாழ்க்கைத் துணையின் திறமைக்கும், திறனுக்கும் எது முடியுமோ, அதை மட்டும் அவர்களிடம் எதிர்பாருங்கள்.
கட்டுப்பாடு விதிப்பது
கணவன், மனைவி இருவருக்குள் யார் பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு இருக்கக் கூடாது. உங்கள் வாழ்க்கைத் துணை விரும்பாத ஒன்றை அவர்கள் மீது திணிப்பதற்கு நீங்கள் முயற்சி செய்யக் கூடாது. எப்போது பார்த்தாலும் இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என்று குறை மேல், குறை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.
தேவையற்ற விமர்சனம்
இவர் நம்மவர் தானே அல்லது இவள் நம்மவள் தானே, நாம் என்ன சொன்னாலும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள் என்ற நோக்கத்தில் மனம் போன போக்கில் விமர்சனம் செய்யக் கூடாது. உங்களிடம் நகைச்சுவை உணர்வு நிரம்பியிருந்தாலும், அதற்கு ஒரு எல்லை உண்டு. கண்டதையும் சொல்லி, வாழ்க்கைத் துணையை விமர்சனம் செய்தீர்கள் என்றால், இறுதியாக அதுவே தேவையற்ற பிரச்சினைகளுக்கு காரணம் ஆகிவிடும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க பின்பற்ற வேண்டிய வழிகள்..!
அதிக உரிமை எடுத்துக் கொள்ள கூடாது
கணவன் மீது அல்லது மனைவி மீது நீங்கள் உரிமையோடு பழகுவது சரிதான். அதற்கென அவர்களுடைய எல்லா விஷயத்திலும் நீங்கள் மூக்கை நுழைத்து, கருத்து சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. மேலும், அவர்கள் மீதான அதீத அக்கறை காரணமாக நீங்கள் எழுப்பும் கேள்விகள் என்பது, அவர்கள் மீது சந்தேகம் கொண்டுள்ளீர்கள் என்ற அர்த்தத்தை கொடுத்து விடும்.
குறை சொல்வதை தவிருங்கள்
ஏதேனும் பிரச்சினை என்றால், அதற்கு நீ தான் காரணம், நான் தான் காரணம் என்று ஒருவரை, ஒருவர் குறை சொல்வதை நிறுத்துங்கள். குறை சொல்வதால் எந்தப் பலனும் கிடைக்காது. மாறாக, அதற்கு தீர்வு காண முயற்சி செய்யுங்கள்.