என்றும் இளமையாகத் திகழ்வதற்கு...
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9941
வயோதிபர்களில் சிலர் வயதுபோனாலும் கூட இளமைத் தோற்றத்துடனும் திடகாத்திரமானவர்களாகவும் விளங்குவார்கள். அவர்களிடம் சென்று உங்கள் அழகின் ரகசியம் என்ன என்று கேட்டால் அவர்கள் கூறும் பதில் சிறந்த உடற்பயிற்சியும் முறையான உணவு பழக்கவழக்கமும்தான் என்பதுதான்.
எப்போதும் தங்களை அழகாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் செயற்கையாக அந்த அழகை பெற்றுக்கொள்ளாமல் இயற்கையாகவே அழகை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
பேஷியல் செய்வதற்காக பல மணித்தியாலங்களை கடத்துபவர்கள் ஒரு நாளில் அரை மணித்தியாலத்தை உடற்பயிற்சிக்காக செலவழித்தால் எப்போதும் உடலை ஒரு கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ளலாம்.
நாம் எமது அன்றாட வாழ்வில் அவசியமாக செய்ய வேண்டியது உடற்பயிற்சி. உடற் பயிற்சியானது நம்மை உறுதியானவர்களாகவும் ஆரோக்கியமானவர்களாகவும் வைத்திருக்கின்றது. மனதை எந்தவித சஞ்சலங்களுமின்றி இலகுவாக வைத்திருக்க உடற்பயிற்சி உதவும்;.
இவையெல்லாவற்றையும்விட எமது உடலை ஒரு கட்டுக்கோப்புடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல் என்றும் இளமையாகவும் விளங்கவைக்கின்றது.சர்க்கரை நோய், உயர் குருதி அழுத்தம், கொலஸ்ட்ரோல் பிரச்சினை, தொந்தி வளர்ச்சி போன்றவற்றை கட்டுப்படுத்த முறையான உடற்பயிற்சியின்றியும் முறையான உணவு பழக்கமும் உதவும். உடற் பயிற்சி என்றாலே உடலை வருத்தக் கூடியது என்று எண்ணுபவர்கள்தான் அதிகம். ஆனால், நாளாந்த வாழ்வில் செய்யக்கூடிய உடற் பயிற்சிகள் இருக்கின்றன. இவை தலையில் ஆரம்பித்து பாதத்தில் வந்து முடிக்க வேண்டிய படிமுறையான உடற்பயிற்சிகள்.
இத்தகைய பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் உடல் ஒரு கட்டுக்கோப்புடன் இருப்பதுடன் நாள்தோறும் சுறுசுறுப்புடன் இயங்கலாம். உடல் ஆரோக்கியத்திற்கும் அவை மிகவும் உதவும்.தினமும் உடற்பயிற்சி செய்து முடிந்தவுடன் 5 நிமிடம் தரையில் அமர்ந்து தியானம் செய்யலாம். தியானமானது மனதிற்கு அமைதியை தருவதுடன் கோபம் போன்ற உணர்வுகளை கட்டுப்படுத்தி எம்மை சாந்தமாக இயங்கச் செய்கிறது. எப்போதும் எமது முகம் பிரகாசமாக இருக்க தியானம் என்பது அவசியம்.
உடற்பயிற்சி இருந்தால் மட்டும் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ள முடியாது. எமது உணவு முறையிலும் கட்டுப்பாடு தேவை.அதிகமான எண்ணைய் நிறைந்த உணவுகள் உடலில் கொழுப்பு அதிகமாகுவதற்கு உதவுவதுடன் முகத்தில் அதிகமான பருக்கள் தோன்றுவதற்கும் காரணியாக அமைந்துவிடுகிறது.
மலச்சிக்கல் வராத வகையில் உணவில் நார்த்தன்மையான பொருட்களை தினமும் உட்கொள்ள தவறக்கூடாது. இதைவிட நாளாந்த வாழ்வில் அதிகமான நீரை அருந்துவதற்கு உங்களைப்பழக்கிக் கொள்ளுங்கள்.
இவற்றையெல்லாம் விட உங்கள் அகத்தை – மனதை - எப்போதும் அழுக்குகள் நிறைந்த குப்பைத் தொட்டியாக மாற்றாதீர்கள். அகம் அழுக்குடன் காணப்படுமானால் புறத்திலே அதனது தாக்கம் விளங்கும்.