கர்ப்பகால அழகும்.. தாம்பத்தியமும்..
21 வைகாசி 2020 வியாழன் 13:41 | பார்வைகள் : 8938
இளம்பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் நிறைய சந்தேகங்கள் ஏற்படுகின்றன. சந்தேகங்களில் பெரும்பாலானவை அவர்களது தாம்பத்தியம் மற்றும் அழகு தொடர்புடையதாக இருக்கின்றன. அழகை பொறுத்தவரையில் சருமம், கூந்தல் பிரச்சினைகளே அதிகம். கர்ப்ப காலத்தில் தாம்பத்தியம் வைத்துக்கொள்ளலாமா? என்ற கேள்வியும் எழுகிறது.
பொதுவாகவே கர்ப்பகாலத்தில் பெண்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களில் வித்தியாசம் ஏற்படும். அதனால் முகத்தில் அதிகமாக முடி வளர்தல், முகப்பரு தோன்றுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். கர்ப்பிணிகள் கருவளையத்தாலும் பாதிக்கப்படுகிறார்கள். தூங்கும்நேரம் குறைவதே இதற்கான காரணம். நன்றாகத் தூங்கி ஓய்வெடுத்தால் கருவளையம் மறையும். குளிர்ந்த ஏதாவது ஒரு மோய்சரைசிங் கிரீமை பயன்படுத்தி கருவளையம் இருக்கும் பகுதிகளில் மென்மையாக வருடி மசாஜ் செய்து ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் இதற்கு தீர்வு கிடைக்கும்.
கர்ப்பகாலத்தில் ஏற்படும் சரும பிரச்சினை என்னவென்றால், கருப்பு மற்றும் தவிட்டு நிறத்தில் படை போன்று தோன்றும். கர்ப்பகாலத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். அதனால் சருமத்திற்கு நிறம் கொடுக்கும் மெலானின், மெலோனோசைட்டுகள் என்ற திசுக்களின் செயல்பாடு வேகமடையும். அதுவே சருமத்தில் படை தோன்றுவதற்கு காரணம். சூரிய ஒளி படக்கூடிய முகம், கழுத்து போன்ற பகுதிகளில் இந்த படை பொதுவாக தோன்றும். இதனால் தொந்தரவு இல்லை. பிரசவத்திற்கு பிறகு ஹார்மோன் சுரப்பு சீரானதும் சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள் சரியாகிவிடும்.
‘ஸ்ட்ரச் மார்க்’ எனப்படும் அடிவயிற்று கோடுகள்தான் கர்ப்பகாலத்தில் பெண்களை அதிகம் வாட்டும். கர்ப்ப காலத்தில் சருமம் விரிவடைவதன் மூலம் இந்த கோடுகள் உருவாகின்றன. இது வயிற்றில் மட்டுமின்றி மார்பகங்கள், தொடைப்பகுதி, கைகளிலும் தோன்றும். இதற்காக இப்போதே கிரீம் மற்றும் எண்ணெய் வகைகளை பயன்படுத்தினாலும் பெரிய அளவில் பலன் எதுவும் ஏற்படாது. அவரவர் சருமத் தன்மைக்கு ஏற்ப இந்த கோடுகள் உருவாகும். சிலருக்கு கோடுகள் உருவாகாமலும் இருக்கும். கர்ப்ப காலத்தில் பெண்கள் அழகுக்காக இயற்கையான மூலிகைப் பொருட்களை மட்டும் ஓரளவு பயன்படுத்தலாம். ரசாயனம் கலந்த அழகுப்பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
கர்ப்பகாலத்தில் தாம்பத்தியம் வைத்துக்கொள்வது பெண்களை பயம்கொள்ளவைக்கும் விஷயமாக இருக்கிறது. சமூகத்தில் பரவி இருக்கும் தவறான எண்ணங்களே அதற்கு காரணம். கர்ப்பிணியின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க பிரச்சினை எதுவும் இல்லை என்றால், ஆரோக்கியமான கர்ப்பிணியாக இருக்கிறார் என்றால், தாம்பத்தியம் வைத்துக்கொள்ளலாம் இதில் முடிவெடுப்பது கணவன்-மனைவி இருவரது மனநிலை, உடல்நிலை, சூழ்நிலைகளை பொறுத்தது. கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத அளவுக்கு தாம்பத்தியத்தை வைத்துக்கொள்ளவேண்டும்.
கர்ப்ப காலத்தில் பெண்களிடம் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றங்களைப் பொறுத்து சில பெண்களுக்கு உறவில் ஆர்வம் இருக்காது. அதனால் உடலுறவு தற்போது தேவையில்லை என்று தற்காலிக ஓய்வு கொடுத்துவிடுவார்கள். சில பெண்கள் உடல் நிலையை கருத்தில் கொண்டு பயத்தோடு கணவரை அணுகவிட மாட்டார்கள். கர்ப்பிணிகளில் குறிப்பிடத்தக்க சதவீதத்தினர் கணவரது தொடுதல், வருடுதல், அணைத்தல் போன்றவைகளில் மகிழ்ச்சியடைகிறார்கள். அதனால் கர்ப்பகால தாம்பத்தியம் என்பது பெண்ணுக்கு பெண் மாறுபாடு கொண்டது.
சூழலுக்குதக்கபடி அந்தந்த தம்பதிகளே இதில் இறுதி முடிவு எடுக்கவேண்டும். பொதுவாக பார்த்தால் கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாதங்களும், இறுதி மூன்று மாதங்களும் உறவு மீதான ஈர்ப்பு குறைவாக இருக்கும். அப்போது தவிர்க்கலாம். நிறைய பெண்கள் உறவின்போது வயிற்றுக்கு அழுத்தம் ஏற்பட்டு, சிசுவுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்றும் பயப்படுகிறார்கள். அதனால்தான் கர்ப்பகாலத்தில் தாம்பத்தியத்தை தவிர்க்கிறார்கள். மனதும், உடலும், ஆரோக்கிய சூழலும் இடம்கொடுத்தால் கர்ப்பகால தாம்பத்தியத்தை மேற்கொள்ளலாம்.