கண்ணீரின் வாசலை பூட்ட வேண்டாம்
28 சித்திரை 2020 செவ்வாய் 14:43 | பார்வைகள் : 8922
பெரும்பாலும் ஆண்கள் அழக்கூடாது என்று விலக்கு உண்டு. பெண்களும் அவ்வப்போது அழுகையில் இருந்து விலக்கப்படுகிறார்கள். அவர்களிடம் அழுவது பலவீனம் என்று தொடர்ந்து சொல்லப்படுகிறது. இது தவறான கருத்து. அழுவதற்கு தடை போடுவதால், வலியை போக்கும் கண்ணீரின் வாசலை அடைத்துவிடுகின்றனர். அழாமல் இருந்தால் சோகம் மனதுக்குள்ளேயே தேங்கிவிடும்.
நமது அணுகுமுறை வீட்டிற்குள் ஒரு மாதிரியும், வெளியே வேறு மாதிரியும் இருக்கும். பொது இடங்களில் நிற்கும்போது அழுகையை முடிந்த அளவு தவிர்த்துவிடலாம். ஆனால் வீட்டிற்குள் அழும் சுதந்திரத்தை பிள்ளைகளுக்கு வழங்கவேண்டும்.
சோகத்தை மனதிற்குள் போட்டு பூட்டிவைக்க குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கக்கூடாது. அது வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளை உருவாக்கிவிடும். அழுது தீர்த்து அந்த சோகத்தை வெளியேற்றிவிட்டால், உடலுக்கு புது உற்சாகம் கிடைத்துவிடும்.
பெண்கள் படிக்கவும், வேலை பார்க்கவும் வீட்டைவிட்டு வெளியே வந்துவிடுகிறார்கள். அவர்களது வாழ்க்கையில் ஒரு பகுதி ஹாஸ்டலில் கழிந்து போகிறது. வீடு என்றால் அம்மாவின் தோளில் சாய்ந்து அழுது அதை தீர்த்துவிடலாம். ஆனால் படிக்கும் இடத்திலோ, பணியாற்றும் இடத்திலோ சோகத்தை வெளிப்படுத்த முடியாமல் அடக்கிவைத்து, மன அழுத்தத்திற்கு உள்ளாகிவிடுகிறார்கள். சமூகத்தில் மன அழுத்தம் அதிகரித்துப்போவதற்கு காரணம், அவர்கள் அழுவதற்கு மறந்து போனதுதான்.
பள்ளிக்கு- கல்லூரிக்கு செல்லும் மகள்களாக இருந்தாலும், அவர்களிடம் மனந்திறந்து பேச வேண்டும். அதன் மூலம் கவலைக்குரிய விஷயங்கள் இருந்தால் சொல்லிவிடுவார்கள். மகள்கள் மன இறுக்கத்தோடு இருக்கும்போது, அவர்களை தோள் சாய்த்து கூந்தலை கோதிவிட்டு, “எது நடந்தாலும் நான் உனக்கு ஆதரவாக இருப்பேன். எதற்கும் கவலைப் படாதே!” என்று கூறினால், அடுத்த நிமிடமே அழுது தீர்த்து மனதில் இருக்கும் அனைத்தையும் சொல்லி முடித்துவிடுவார்கள். மகளின் மனதில் இருக்கும் பாரம் இறங்கிவிடும். தாயின் மனதுக்கும் நிம்மதி கிடைத்துவிடும்.