Paristamil Navigation Paristamil advert login

மனோபலம் மூலம் முதுமையை வெல்வோம்

மனோபலம் மூலம் முதுமையை வெல்வோம்

14 மார்கழி 2019 சனி 11:27 | பார்வைகள் : 8752


 இயல்பான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு கூட மற்றவர்களை நம்பியிருக்கும் காலக் கட்டாயத்தில் முதியவர்களுக்குத் துணையிருப்பது அவர்களுடைய மனோபலம் ஒன்று மட்டுமே. வாழ்வில் எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சினையையும் மிகப் பொறுமையுடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் மிக அவசியம். அதற்குத்தான் இந்தப் புரிதல் தேவைப்படுகிறது. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது, பிறர் மேல் கோபப்படுவது, தன் உரிமைகளை நிலை நாட்ட முயல்வது போன்ற செயல்களை முடிந்த அளவு குறைத்துக் கொள்வது நல்லது.

 
அந்தக் கால பெரியோர்கள், முதுமையை துறவற வாழ்க்கையோடு ஒப்பிட்டார்கள். எதையும் நேர்மறையாகவே பார்க்கும் குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். பல கசப்பான நினைவுகளை இந்த குணம் வடிகட்டிவிடும். “எதிலும் வெற்றி, எப்பொழுதும் வெற்றி” என்ற மன நிலையிலேயே வாழ்க்கையை நகர்த்திச் செல்ல முயல வேண்டும். எதைப் பேசினாலும், செய்தாலும் அதன் விளைவுகள் நன்மை தருவதாக மட்டுமே இருக்க வேண்டும். அதாவது, வாழ்க்கையில் நல்லது மட்டுமே நடக்கும் என்று செயல்படுவது சிறந்தது. “இன்று புதியதாய் பிறந்தோம்” என்ற மனநிலையுடன் தைரியமாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
 
 
ஒருவருக்கு வயது ஆக ஆக உடலின் எல்லா உறுப்புகளின் செயல்திறன்களும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே போகும். ஆனால் மனதுக்கு வயதாவதில்லை. மற்ற உறுப்புகள் அடைந்திருக்கும் முதுமை அதற்குப் புரிவதும் இல்லை. இளமையில் இருந்தது போன்ற நினைப்பிலேயே அது மட்டும் எப்பொழுதும் எதையாவது நினைத்தபடி இருக்கும். ஓய்வின்றி பழைய நினைவுகளை அசை போட்டுக் கொண்டே இருக்கும். “முதுமையில் மனம் ஒரு குரங்கு போல்” என்பதுண்டு. முதுமையை நலமுடன் கடக்க வேண்டும் என்றால் முதலில் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தி ஒரு நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
 
ஒருவரின் மனோபலத்துக்கு மரணத்தைக் கூட வெல்லும் சக்தி உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்திலிருந்து என்னிடம் சிகிச்சைக்காக ஒரு முதியவர் வந்தார். அவருக்கு வயிற்றுவலிக்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம். ஆனால் அறுவை சிகிச்சையை ஆரம்பித்தபோதுதான் அந்த விபரீத உண்மை தெரிந்தது.
 
அவரது வயிற்றில் புற்றுநோய் தீவிர நிலையிலிருந்தது. அதனால் டாக்டர்களால் அறுவை சிகிச்சை எதுவும் செய்ய முடியவில்லை. அவரது உறவினர்களிடம் மட்டும் உண்மையைச் சொல்லிவிட்டு, “சாதாரண வாயுத் தொல்லை தான். ஒன்றும் பிரச்சினையில்லை. சீக்கிரம் சரியாகிவிடும்” என அந்த முதியவரிடம் சொல்லி, மருந்து கொடுத்து அனுப்பி வைத்தேன். சில மாதம் கழித்து மறுபரிசீலனைக்கு அவர் வரவில்லை. “பாவம் பெரியவர், புற்றுநோய் தீவிரமாகி இறந்து விட்டிருப்பார்” என அவருக்காக பரிதாபப்பட்டேன். சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த முதியவரின் உறவினர் ஒருவரோடு அந்த ஊருக்குப் போனபோது ஆச்சரியத்தில் சிலையாகிப் போனேன். அந்த முதியவர் சுறுசுறுப்பாக தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். புற்றுநோய் என்று அவருக்கு முன்பே தெரிந்திருந்தால் ஒரு வேளை அவர் இறந்திருப்பாரோ!
 
ஆரோக்கியமாக வாழ்ந்து, முதுமையை முடிந்தளவிற்கு தள்ளிப்போட நாம் நம்மை முதலில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதை செய்து முடிக்க அல்லது சாதித்துக் காட்ட முதலில் மனதில் அதிக உறுதி வேண்டும். நம் முயற்சியில் நாம் கண்டிப்பாக வெற்றி அடைவோம் என்ற எண்ணத்தை ஆழ்மனதில் விதைக்க வேண்டும். பின்பு அதே உறுதியில், நாம் நினைத்ததை செயல்படுத்த வேண்டும். இதை தவறாமல் வாழ்க்கையில் கடைப்பிடித்தால், முதுமையையும் வெல்ல முடியும். ஒன்று மட்டும் உண்மை. அதீத மனோபலம் இருந்தால் முதுமையை வெல்லலாம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்