Paristamil Navigation Paristamil advert login

மக்களின் மனோநிலையில் கொரோனா எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது....!

மக்களின் மனோநிலையில் கொரோனா எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது....!

4 ஆனி 2021 வெள்ளி 06:46 | பார்வைகள் : 8853


 கொரோனாவின் தாக்கம் மக்களிடம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மக்களின் மனோநிலையில் கொரோனா எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பது பற்றி மனோதத்துவ நிபுணர்கள் அளித்திருக்கும் விளக்கம்!

 
பள்ளிக்கு செல்ல முடியாதது, குழந்தைகளின் மனோநிலையை பாதித்திருக்கிறதா?
 
 
பள்ளிகளில் குழந்தைகளுக்கு கல்வி மட்டும் கிடைப்ப தில்லை. சக நண்பர்களை நேரடியாக காண்பார்கள். பேசுவார்கள். விளையாடுவார்கள். அதன் வழியாக அவர்களுக்கு மனோவளர்ச்சி கிடைக்கும். கொரோனாவால் அந்த வாய்ப்பை குழந்தைகள் இழந்திருக்கிறார்கள். அந்த ஏமாற்றம் தொடக்க நிலைக் கல்வி பயிலும் குழந்தைகளிடம் அதிகமாக தென்படும். அதை பெற்றோர் புரிந்துகொண்டு குழந்தைகளிடம் அதிக கோபம்கொள்ளக்கூடாது. குறிப்பாக மழலையர் பள்ளி மற்றும் ஒன்றாம் வகுப்புக்கு செல்ல முடியாத குழந்தைகளிடம் எப்போதும் படிக்கச்சொல்லி வற்புறுத்தக்கூடாது. வற்புறுத்தினால் அவர்கள் பள்ளி திறந்த பின்பும் படிப்பை வெறுக்கும் சூழல் ஏற்படலாம்.
 
பள்ளிக்கு செல்லும்போது குழந்தைகளுக்கு பயணம், மைதானத்தில் விளையாட்டு, சூரிய ஒளி உடலில்படுதல் போன்றவை கிடைக்கும். சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் டி மூளையின் செயல்பாட்டிற்கு மிக முக்கியம். ஆனால் இப்போது குழந்தைகள் வீட்டிற்குள்ளே இருக்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகளுக்கு வீட்டு முற்றத்திற்கு வருவதற்குகூட அனுமதி கிடைப்பதில்லை. பள்ளிகள் இல்லாததால் மைதானங்களிலான விளையாட்டுகளுக்கு பதில் செல்போன், கம்ப்யூட்டர்களில் விளையாடுகிறார்கள். அதனால் டிஜிட்டல் அடிக்‌ஷன் எனப்படும் பாதிப்புக்கு நிறைய சிறுவர்-சிறுமியர்கள் உள்ளாகியிருக்கிறார்கள். அவர் களை மனநல சிகிச்சைக்கு அழைத்து வருகிறார்கள். எலக்ட்ரானிக் உபகரணங்களோடு குழந்தைகள் அதிக நேரத்தை செலவிடுவது அவர்களுக்கு உற்சாகமின்மை, அலட்சியம், உறக்கமின்மை, மறதி போன்றவைகளை ஏற்படுத்துகிறது. முன்பு தினமும் பெருமளவு நேரத்தை குழந்தைகள் பள்ளிகளில் செலவிடுவார்கள். இப்போது முழுநேரத்தையும் அவர்கள் வீடுகளிலேயே செலவிடுவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக ஆசிரியர் வேலையையும் சேர்த்து செய்யவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இது பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒருவித கடினமான அனுபவம்தான்.
 
கொரோனா, பெண்களிடம் எத்தகைய மனஅழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது?
 
கொரோனாவால் பெண்களிடம்தான் அதிக மனஅழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. வருமானம் குறைந்துவிட்டதால் எதிர்காலத்தை பற்றிய கவலை. பள்ளி, கல்லூரிகள் மூடிக்கிடப்பதால் பிள்ளைகளின் கல்வியை பற்றிய அச்சம். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் எழும் சிக்கல் போன்ற அனைத்தும் சேர்ந்து பெண்களை அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. ஆனால் அது தேவையற்றது.
 
கோபத்திற்கும்- கொரோனாவிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?
 
கொரோனா சிகிச்சைக்கு உள்ளாகியிருப்பவர்களில் 58 சதவீதம் பேர் அதிகமாக கோபம்கொள்ளும் வழக்கம்கொண்டவர்கள் என்பது ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. கொரோனா பாதித்தவர்களின் சுபாவத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ‘பாசிட்டிவ்’ ஆனவர்கள் மட்டுமின்றி அவர்களுடன் தொடர்பில் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் சுபாவங்களிலும் மாற்றம் உருவாகியுள்ளது. சில மாதங்கள் கழித்துதான் அவர்கள் அந்த நிலையில் இருந்து மாறி இயல்புக்கு வருகிறார்கள்.
 
முழுமையான இலவச சிகிச்சை மற்றும் எளிதாக குணமடையும் சூழ்நிலை இருந்தும் கொரோனா பாதித்த ஒருசிலர் தற்கொலை செய்துகொள்வது ஏன்?
 
கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசியும் இதுவரை முழுநிலையில் தயாராகவில்லை. நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதனால் நோய் பாதித்தவர்களில் சிலர் பெரும் அச்சம் கொள்கிறார்கள். இப்போது பயத்தில் இருந்து அனைவரும் அகலவேண்டும். கொரோனா வந்தாலும் அதில் இருந்து மீளமுடியும் என்று நம்பிக்கை கொள்ளவேண்டும். நம்பிக்கை கொண்டால் தற்கொலை எண்ணம் தோன்றாது. நம்பிக்கைதான் வாழ்க்கை.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்