Paristamil Navigation Paristamil advert login

மூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை

மூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை

7 சித்திரை 2021 புதன் 06:43 | பார்வைகள் : 9652


 குடும்பங்களில் திருமணத்திற்கு பிந்தைய தொடர்புகள் அதிகரித்து வருவதாகவும், சில குடும்பங்களில் ஏற்கனவே அறிமுகமாகி நட்புவட்டத்தில் இருந்தவர்களே வில்லன்களாக மாறுவதாகவும்..' போலீஸ் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பள்ளியில் நண்பர்களாக இருந்தவர்களும், கல்லூரிகளில் நண்பர்களாக இருந்தவர்களும் சமூக இணையத்தள சாட் ஆப்ஸ் வழியாக திருமணத்திற்கு பின்பு தங்கள் நட்பை புதுப்பித்துக்கொண்டு தினமும் தகவல்களை பரிமாறிக்கொள்கிறார்கள்.

 
அந்த பேச்சு ஒருகட்டத்தில் அந்தரங்க உரையாடலாக மாறிவிடுகிறது. `அந்த காலகட்டத்திலே நீ மிக அழகாக இருப்பாய். அப்போது நீ என் கனவில் வந்து எப்படி எல்லாம் தொந்தரவு செய்தாய் தெரியுமா? அதை வெளியே சொல்லவே கூச்சமாக இருக்கிறது. ஒரு குழந்தைக்கு தாயாகி விட்ட பின்பும், இப்போது உன்னை பார்த்ததும் எனக்கு அந்த கனவுதான் மீண்டும் வருகிறது' என்பதுபோல் பேசி, பெண்களின் மனதில் சலனத்தை உருவாக்கிவிடுகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்களாம்.
 
 
இத்தகைய கிளுகிளுப்பு உரையாடல் வெடிகுண்டுபோல் செயல்பட்டு பலரது நிம்மதியான குடும்ப வாழ்க்கை வெடித்து சிதற காரணமாகியிருக்கிறது. அதன் தாக்கம் போலீஸ் நிலையங்களிலும், குடும்ப நல நீதிமன்றங்களிலும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் கணவனோ, மனைவியோ எதிர்பாலினத்தவரிடம் கொண்டிருக்கும் அத்தனை நட்பும் பிரச்சினைக்குரியவை என்ற சந்தேகமும் தம்பதிகளிடம் வந்துவிடவும்கூடாது. அதுவும் குடும்ப மகிழ்ச்சியை சிதறடித்துவிடும்.
 
பொதுவான சில அறிகுறிகளை வைத்து அந்த குடும்பத்தில் (ஆணுக்கோ, பெண்ணுக்கோ) மூன்றாவது நபரின் தொடர்பு இருக்கிறதா? என்பதை கண்டுபிடித்துவிடலாம்.
 
கண்களில் தெரியும் உண்மை
 
கண்கள் உண்மையை உணர்த்திவிடும் தன்மை பெற்றவை. திருட்டு நட்புகளை புதைத்துவைத்தால் கண்கள் காட்டிக்கொடுத்துவிடும். அதனால்தான் ஆத்மாவின் வாசலாக கண்களை வர்ணிக்கிறோம். கண்களை மனசாட்சியின் கண்ணாடி என்றும் சொல்கிறோம். வாழ்க்கைத் துணை, உங்கள் கண்களை நோக்கி பேச வேண்டும். முகத்துக்கு நேராக பார்த்து பதிலளிக்கவேண்டும். சிலர் குற்ற உணர்ச்சிகள் கண்களில் வெளிப்படாமல் இருக்க கூடுதலாக நடிக்கவும் செய்வார்கள். தவறான நட்புவைத்திருக்கும் ஆணோ, பெண்ணோ தன் இணையோடு வெளி இடங்களுக்கு வரும்போது, மற்றவர்களை அதிகம் கவர முயற்சிப்பார்கள். அதாவது தாங்கள்தான் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழும் பொருத்தமான ஜோடி என்று காட்டிக்கொள்வார்கள். பொது இடத்தில் இணையோடு சிரித்து சிரித்து பேசுவார்கள். சந்தோஷ சிலுமிஷ சேட்டைகள் வழியாகவும் அடுத்தவர்களை கவர்வார்கள்.
 
தோற்றத்தில் திடீர் மாற்றங்கள்
 
தோற்றத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காதவராக உங்கள் இணை இருந்திருக்கலாம். அழகில் அக்கறை செலுத்தாத அவர் திடீரென்று தனது உடை அலங்காரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தலாம். கூந்தல் அலங்காரத்தில் புதுமைகளை கையாளலாம். மேக்அப் செய்துகொள்ள அதிக நேரத்தை செலவிடலாம். (ஆண்கள் என்றால்) குறுந்தாடி வைக்கலாம் அல்லது வழக்கமான தாடி முகத்தை மழித்துவிடலாம். உணவில் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதோடு, உடல் எடையை பற்றி வருத்தப்பட்டுக்கொண்டு ஜிம்மிற்கு செல்லலாம்.
 
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இத்தகைய மாற்றங்கள் அனைத்தும் வரவேற்கத் தகுந்த பாசிட்டிவ்வான விஷயங்கள்தான் என்றாலும், அடிப்படையான காரணமில்லாமல் திடீரென்று ஏற்படும் இத்தகைய மாற்றங்கள் கவனிக்கத்தகுந்தவை. ஒருசிலரிடம் ஏற்படும் இத்தகைய மாற்றங்களுக்கு `மூன்றாம் நபரின் வருகை' காரணமாக இருக்கும் என்பது செக்ஸாலஜிஸ்டுகளின் கணிப்பாக இருக்கிறது.
 
சிறப்பு கவனிப்பு பெறும் செல்போன்
 
சிலர் செல்போனுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். அலுவலகம் முடிந்து வீடு திரும்பி வந்ததும், ஏதாவது ஒரு மூலையில் செல்போனை தூக்கிப்போட்டுவிட்டு கண்டுகொள்ளாமலே இருப்பார்கள். அப்படிப்பட்ட இயல்பை கொண்டவர்கள் திடீரென்று செல்போனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் அது ஒருவகையில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். செல்போன் மற்றவர்களின் கண்களில் பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஒளித்துவைக்கவும் செய்யலாம்.
 
திடீரென்று செல்போன் பயன்பாட்டை அதிகரித்திருப்பார்கள். தொடர்ச்சியாக சாட்டிங் செய்வார்கள். ஆனால் சாட் பாக்சை திறந்தால் பதிவு ஒன்றும் இருக்காது. சாட் ஹிஸ்டரியை கிளீயர் செய்வது போன்ற செயல்களில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள். இவைகளை செய்வதன் மூலம் தவறான தொடர்பினை மறைத்துவிட முடியும் என்பது அவர்களது எண்ணமாக இருக்கலாம்.
 
அன்றாட செயல்பாடுகளில் திடீர் பரபரப்பு
 
அலுவலகத்தில் அவருக்கு பதவி உயர்வு போன்ற எதுவும் கிடைக்காத நிலையில் தனது வேலையில் திடீரென்று அதிக பரபரப்பு காட்டினால் கவனியுங்கள். அதில் பதற்றமும் தென்பட்டால் அவர் மீது ஒரு கண் வையுங்கள். வீட்டிற்கு வர தாமதமாகுதல், லீவு நாட்களிலும் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிடுதல், அதுவரை இல்லாத புதிய விஷயங்களை கூறுதல் போன்றவை சந்தேகத்திற்கிடமானவை. அலுவலக ரீதியாக புதிய பயிற்சிகளுக்கு செல்வதாக கூறுவது, ஓவர்டைம் வேலைபார்த்ததாக சொல்வது, நண்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது- நண்பரின் பெற்றோர் மரணமடைந்துவிட்டதாக கூறுவது, பீல்டு ஒர்க்குக்காக சென்றது என்பன போன்றவை (வழக்கத்திற்கு மாறானதாக இருந்தால்) சந்தேகத்திற்கிடமானவை.
 
தான் எப்போதும் பிசியாக இருப்பதாக சிலர் சொல்வார்கள். அலுவலகத்தில் பரபரப்பு காட்டுவார்கள். அவர்களது செல்போன் பெரும்பாலும் பிசியாக இருக்கும். சாப்பிடக்கூட நேரமில்லை என்பார்கள் அல்லது மதிய சாப்பாட்டையே மறந்துவிடுவார்கள். இப்படிப்பட்டவர்களும் கண்காணிக்கப்படவேண்டியவர்கள். இவர்கள் பிசியாக இருப்பதாக காட்டிக்கொண்டு தனது மனைவி, குழந்தைகளிடம்கூட பேசமாட்டார்கள். அந்த நேரத்தையும் சேர்த்து `புதிய' உறவுக்காக செலவிட்டுக்கொண்டிருக்கலாம்.
 
எங்கும், எதிலும் ரகசியம்
 
வெளிப்படைத்தன்மை எதுவும் இல்லாமல் எல்லாவற்றையும் ரகசியமாக பாதுகாப்பதும் கவனிக்கத்தகுந்தது. லேப்டாப், செல்போன் போன்றவைகளை பயன்படுத்தும்போது அறைக்குள் யாராவது வந்தால் உடனே மறைப்பது, சாட் செய்யும்போது யாராவது வந்தால் அதை மறைத்துவிட்டு உடனே ஆன்லைன் ஷாப்பிங் சைட்டுக்கு சென்று துழாவிக்கொண்டிருப்பது.. போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டால் கண்காணிக்க வேண்டும்தான்.
 
சுபாவங்களில் ஏற்படும் மாற்றங்களையும் கவனியுங்கள். காரணமே இல்லாமல் திடீரென்று கோபம்கொள்வது, பொருட்களை தூக்கி வீசுவது, மூலையில் போய் சோகமாக உட்கார்ந்துவிடுவது, இழக்கக்கூடாத எதையோ இழந்தது போன்று காணப்படுவது போன்றவை, மீண்டும் ஒரு காதலில் விழுந்ததற்கான அறிகுறியாக இருக்கலாம்.
 
அன்பு குறைதல்
 
குடும்ப நலனுக்கு ஆதாரமான மிகப்பெரிய செல்வம் அன்புதான். சேர்த்து வைத்திருக்கும் அன்பை எல்லாம் வீட்டில் தம்பதிகள் தங்களுக்குள் செலவிடும்போது அங்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்படும். ஆனால் வீட்டிற்கு வெளியே இன்னொரு உறவை ஏற்படுத்திக்கொள்ளும்போது அந்த புதிய நபரிடம் அன்பை செலவிட்டுவிட்டு, காலியான நிலையில் அவர் வீட்டிற்கு வந்து சேர்வார். வீட்டில் இருக்கும் தனது இணையிடம் செலவிட அவரிடம் அன்பு இருக்காது. அதனால் வீட்டில் கோபதாபங்களும், எரிச்சலும், விரக்தியும் ஏற்படும்.
 
திருமணத்திற்கு பின்பு ஆணோ, பெண்ணோ மூன்றாம் நபருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும்போது `தப்பு செய்துவிட்டோமே' என்ற குற்ற உணர்ச்சியும், `நாம் செய்யும் தப்பு வெளியே தெரிந்துவிடுமோ' என்ற பயமும் ஏற்படும். இரண்டும் சேர்ந்து அவரிடமிருந்து நிம்மதியை பறித்துவிடும்.
 
அதே நேரம் தனது திருட்டுத்தனம் வெளியே தெரியாமல் இருக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று திட்டம்போட்டு, தனது இணையிடம் ஒரு நாடகத்தையும் அரங்கேற்றிக்கொண்டிருப்பார்கள். அதாவது, அளவுக்கு அதிகமாக தனது இணையிடம் அன்பு பாராட்டுவார்கள். மற்றவர்கள் பார்வையில் படும்படி அவர் மீது அளவு கடந்த அக்கறையை வெளிப்படுத்துவார்கள். `இப்படிப்பட்ட பெண்ணை நாம் சந்தேகப்படலாமா?' என்ற கேள்வி, அவருக்குள் எழும்நிலையை உருவாக்கிவிடுவார்கள்.
 
இத்தகைய அறிகுறிகள் அனைத்தும் தவறான தொடர்பின் வெளிப்பாடு என்ற இறுதியான கருத்து ஓட்டத்திற்கு சென்றுவிடாதீர்கள். இப்படியும் இருக்கலாம் என்பதுதான் இதன் சாராம்சம். இருந்தால் என்ன செய்வது? அன்பால் திருத்திக்கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் எடுக்கவேண்டும். பொறுமை, பக்குவத்தோடு செயல்பட்டால் அது முடியும். மாறாக, தங்கள் குடும்பத்திற்குள் மூன்றாம் நபரின் தலையீடு எந்த விதத்திலும் உருவாகிவிடாத அளவுக்கு தம்பதிகள் இருவரும் கருத்தொற்றுமையுடனும், மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ள வேண்டும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்