யாதுமாகி நிற்கின்றாள் பெண்
8 பங்குனி 2021 திங்கள் 03:44 | பார்வைகள் : 9326
ஆணுக்கென்று சில கடமைகளும் பொறுப்புகளும் என்றும் பெண்ணுக்கென்று சில கடமைகள் பொறுப்புகள் என்றும் நம் சமுதாயத்தில் காலம் காலமாக இருந்து வந்துள்ளது. இதில் பெரும்பான்மையான, பெண்களுக்கான பொறுப்புகள் குடும்பம் சார்ந்ததாகவும், சமூக நலத்திற்கான பெண்களுக்கான கடமைகளும் கூட குடும்பம் மூலமாகவே செயல்படுவதாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் கடந்த சில நூற்றாண்டுகளில் உலகம் எங்குமே உள்ள பெண்கள் அரசியல், பொருளாதாரம் ராணுவம், காவல்துறை, மருத்துவம் வாணிபம் புரட்சி போராட்டங்கள் என்று பல துறைகளிலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த துவங்கி விட்டனர்.
புராண காலம் தொட்டே பெண் இலக்கியவாதிகள், அரசிகள், துறவிகள், போராளிகள் இருந்திருந்தாலும் அவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில், எடுத்துக்காட்டாக மட்டுமே இருந்துள்ளனர். ஆனால் இன்றைக்கு அப்படியில்லை. எல்லாத்துறைகளிலும் பெண்கள் ஆண்களுக்கு இணையாக தங்கள் பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
குடும்பத்தில் குழந்தை பராமரிப்பு, பெரியவர்கள் நோயாளிகள் பராமரிப்பு, சமையல் என்று மட்டுமே தங்கள் கடமையை செய்து வந்த பெண்கள் இன்று குடும்ப பொருளாதாரத்திற்கு உதவும் வகையில் வேலைக்கு சென்றும், சொந்தமாக தொழில் செய்தும் சம்பாதிக்கின்றனர். இன்று குடும்பத்தில் முக்கிய முடிவுகளை தாங்களே எடுப்பது, சொத்துக்களை வாங்குவது, பராமரிப்பது, முதலீடுகள் செய்வது, தனியாக வெளியூர் வெளிநாடு பயணங்களை மேற்கொள்வது என்று ஆணை சாராமல் சுயமாக தனித்து செயல்படுகிறாள் பெண்.
இன்று எல்லாம் பெண்களுமே பள்ளிப் படிப்பை முடித்து விடுகின்றனர். பெரும்பான்மையான பெண்கள் கல்லூரி பட்டப்படிப்பையும், முதுநிலை பட்டப்படிப்பையும் முடிக்கின்றனர். பல பெண்கள் இன்று தொழில்நுட்பக் கல்வியை சுலபமாகவும் விரும்பியும் படிக்கின்றனர். விமானம் ஓட்டுதல், வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டுதல், காவல்துறையில் கடினமான பணிகளை செய்வது, ராணுவத்தில் பணியாற்றுவது, போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் ஓட்டுதல், ஆழ்கடலில் நீந்தி மூழ்கி செய்யும் பணிகள், விண்வெளியில் பயணம் செய்தல் என்று எல்லாவிதமான வேலைகளையும் விரும்பியும், திறமையாகவும் சிறப்பாகவும் செய்து வருகின்றனர் பெண்கள். பெரிய தொழிலதிபர்களாகவும், அறுவை சிகிச்சை நிபுணர்களாகவும், தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களாகவும் என்று இவர்களின் பங்களிப்பு சமுதாயத்தில் நீண்டு கொண்டே போகிறது.
அரசியலில் இன்று பல பெண்கள் ஈடுபடுகின்றனர். கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், அரசியல், மருத்துவம், பாதுகாப்பு, நிதி மேலாண்மை போன்ற பல துறைகளில் தேசிய மற்றும் உலக அளவில் முக்கிய முடிவுகள் எடுக்கும் பல அமைப்புகளிலும் பெண்களின் பங்கு இருந்து வருகிறது. மக்களின் தேவைகளை உணர்ந்து, மற்றவரின் கஷ்டங்களை கருத்தில் கொண்டு, பொறுமையாகவும், நேர்மையாகவும், கருணையோடும் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் எங்கெல்லாம் தேவைப்படுகின்றதோ அங்கெல்லாம் இன்றைய பெண்கள் சிறப்பாக செயல்பட்டு சமுதாய முன்னேற்றத்திற்கு உறுதுணையாகவும், பாதுகாப்பு அரணாகவும் இருந்து வருகின்றனர்.