காதல் வாழ்க்கையை அழகாக்கும் சின்ன சின்ன சண்டைகள்
27 மாசி 2021 சனி 05:34 | பார்வைகள் : 9080
காதலர்கள் இடையே சண்டை நடப்பது சாதாரணம். சில நேரங்களில் சிறிய சண்டையானது மிகப் பெரிய பிரச்சனைகளை வழிவகுக்கும். சிலர் சண்டை போட்டுக்கொண்டாலும் சிறிது நேரத்தில் சமாதானம் ஆகிவிடுவார்கள். சிலர் வாரக்கணக்கில், மாசக்கணக்கில் கூட பேசாமல் இருப்பார்கள். அது காதலர்களுக்கு இடையேயான புரிதலை அடிப்படையாக கொண்டது. சண்டை போடுவதும், வாக்குவாதம் செய்வதும் காதலை நிச்சயமாக வளர்க்கும் என்றால் நம்புவீர்களா? ஆம். இது உண்மை என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரச்சனைகளை உடனுக்குடன் விவாதித்து சண்டை போட்டு முடிப்பவர்கள் மற்றவர்களைவிட 10 மடங்கு அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களாம். பிரச்சனைகளை அப்படியே விட்டுவிட்டு பேசாமல் இருப்பது தான் காதலர்கள் செய்யும் பெரிய தவறு. அப்போதைக்கு சண்டை வேண்டாம் எனத் தள்ளிப்போடுவது பிரச்சனையின் வீரியத்தை அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது.
காதலில் ஒவ்வொரு சூழலிலும் நமது உணர்வுகளின் மாறுபாடுதல்களை நாம் புரிந்துகொள்ளாமல் நமது துணை மீது பழிபோடுவது தான் காதலில் செய்யும் மிகப்பெரும் தவறு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகளை மட்டுமின்றி சில பழக்கவழக்கங்களும் ஜோடிகளுக்குள் சச்சரவுகளைக் கொண்டு வருமாம்.
காதல் உணர்வு குறைவாக உள்ளவர்களிடம், மனஅழுத்த உணர்வு அதிகமாக இருக்கும். அதிக மன அழுத்தத்திற்கு உள்ளானவர்கள், தங்கள் மீதே காதல் இல்லாதவர்களாகவும், மற்றவர்கள் மீது பாசம் காட்ட தயங்குபவர்களாகவும் இருப்பார்கள். அவர்களிடம் சுயநலம் அதிகமாக இருக்கும். அவர்கள் காதலிக்கப்படாததற்கு அதுவே காரணமாக இருக்கிறதாம்.
எனினும் கோபத்தால் ஏற்படும் சிறு சண்டைகளால் ப்ரேக்அப் எனப்படும் நிரந்தர பிரிவுகள் கூட ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மாதிரியான சூழ்நிலையைத் தவிர்க்க இருவரும் சிறிது நாட்கள் பிரிந்து இருப்பது காதல் வாழ்க்கையை வளமாக வைத்துக் கொள்ளும். ஏனெனில் பிரிந்து இருக்கும் போது தான் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக தவறு யார் செய்தார்களோ, அதை பிரிந்திருக்கும் காலத்தில் உணர முடியும்.
மேலும் இந்த பிரிவு காலங்களில் இருவருக்கும் இடையில் காதலானது அதிகம் பெருக்கெடுக்கும். ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகம் இருக்கும். இதனால் கோபம், சண்டைகள் அனைத்தும் நீங்கி இருவரும் அமைதியான காதல் வாழ்க்கையை வாழலாம். காதல் நீண்ட கால உறவுக்கு வழிவகுக்கும். அதனால், மனம்விட்டு அனைத்தையும் பேசிவிடுவது காதலுக்கு நல்லது என்றே கூறப்படுகிறது.