Paristamil Navigation Paristamil advert login

டீன்ஏஜ் வயதில் பெண்களிடம் ஏற்படும் தடுமாற்றம்

டீன்ஏஜ் வயதில் பெண்களிடம் ஏற்படும் தடுமாற்றம்

10 ஆடி 2018 செவ்வாய் 11:02 | பார்வைகள் : 8767


 சிறுமிகள், டீன்ஏஜ் பெண்கள் பாலியல் தொடர்புடைய சிக்கல்களில் எளிதாக மாட்டிக் கொள்கிறார்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை அதற்கு காரணமாக இருக்கின்றன.

 
அம்மாக்கள் கவனமாக இருந்தால், பெண்களுக்கு சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்!
 
அதாவது, பாலியல் வன்முறை ரீதியாக பெண்கள் வஞ்சிக்கப்படும் சம்பவங்கள் நடக்கும்போது, அந்த சம்பவம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று அம்மாக்கள் மகள்களுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும். அப்படி ஒரு சம்பவம் நடந்தால் எப்படி அதில் இருந்து தப்பிக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கவேண்டும்.
 
அறிமுகமற்ற ஆண்களோடு பேசும்போது எப்படி எல்லாம் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும் என்பதை மகள்களுக்கு கற்றுக்கொடுங்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை மூலம்தான் சிக்கலுக்குரிய பந்தங்கள் உருவாகின்றன. அதனால் மகள் எதற்காக செல்போன், இன்டர்நெட் போன்றவைகளை பயன்படுத்துகிறாள் என்பதை எப்போதும் அம்மா கண்காணிக்கவேண்டும்.
 
அவளது நண்பர்கள் யார், அவர்களது நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதை எல்லாம் அம்மா அறிந்திருக்கவேண்டும். காதல் தொடர்பு ஏதாவது இருப்பதாக அறிந்தால் டென்ஷம் ஆகாதீர்கள். மகளை அடக்குதல், அடித்தல், முடக்கிப்போடுதல் போன்றவை எதிர்விளைவுகளையும், பழிவாங்கும் உணர்வுகளையும் தோற்றுவித்துவிடும். சரியான பருவத்தில் ஏற்படும், சரியான காதலுக்கு தான் ஒருபோதும் எதிரியல்ல என்பதை புரியவைத்து, பிரச்சினையை சுமூகமாக தீர்க்க முன்வரவேண்டும்.
 
 
 
டீன்ஏஜ் பருவத்தில் மாடர்ன் டிரஸ் அணியும் ஆர்வம் அதிகரிக்கும். ஆனால் அது அவள் உடலுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதைப் பார்த்து சரியான முறையில் அணியச் செய்ய வேண்டும். உடல் உறுப்புகளை பாதுகாப்பதில் உடையின் பங்கு என்ன என்பதை மகள்களுக்கு புரிய வைக்கவேண்டும்.
 
ஆண் ஒருவர் அனாவசியமாக பெண்ணின் உடலைத் தொடுதல், உடலை வர்ணித்தல், அனாவசிய அழைப்பு விடுத்தல் போன்ற எதிலாவது ஈடுபட்டால் அந்த நிமிடத்திலே விழிப்படைந்து கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் காட்டத் தெரியவேண்டும்.
 
‘இந்த மாதிரி வேலைகளை எல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதே’ என்று தைரியமாக சொல்லவேண்டும். அவ்வாறு தைரியமாக சொன்னால், ‘இந்தப் பெண்ணிடம் தன் எதிர்பார்ப்பு எதுவும் நடக்காது’ என்று அவன் ஒதுங்கிவிடுவான்.
 
எதை வேண்டுமானாலும் என் அம்மாவிடம் என்னால் பேச முடியும் என்ற நம்பிக்கையை மகளுக்கு கொடுங்கள். அப்படி ஒரு நம்பிக்கை அவளுக்கு ஏற்பட்டுவிட்டால், எந்த விஷயத்தையும் அவள் மனதில் வைக்கமாட்டாள். எல்லாவற்றையும் மனந்திறந்து பேசத் தொடங்கி விடுவாள்.
 
டீன்ஏஜில் ஒரு பெண் செக்ஸ் பற்றி எதை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை எல்லாம் அவள் தன் தாய் மூலம் தெரிந்துகொள்வது நல்லது. தவறான புத்தகங்கள், தோழிகள், படங்கள் மூலம் அவள் தெரிந்துகொள்ள விரும்புவது நல்லதாக இருக்காது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்