Paristamil Navigation Paristamil advert login

பெண்களுக்கு சமூக வலைத்தளம் வரமா? சாபமா?

பெண்களுக்கு சமூக வலைத்தளம் வரமா? சாபமா?

1 வைகாசி 2018 செவ்வாய் 11:48 | பார்வைகள் : 8549


 சமூக வலைத்தளங்கள் இன்று பெரும்பான்மையான மனிதர்களின் வாழ்வில் இன்றியமையாத அங்கமாக மாறிவருகின்றன. மக்கள்தொகையில் இளைஞர்கள் அதிகமாக கொண்ட நம்முடைய நாட்டில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி இன்னும் கூடுதலானது.

 
நவீன உலகில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக சமூகவலைத்தளங்கள் திகழ்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. கையடக்க கணினி மற்றும் செல்போன்களின் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில் சமூக வலைத்தளங்களை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகிவருகிறது.
 
சமூக வலைத்தளம் என்பது பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டகிராம் போன்றவைகளாகும். ரெயிலிலும், பஸ்களிலும் ஒருவரையொருவர் பார்த்தால், புன்முறுவல் செய்ய நேரம் இல்லாத அளவுக்கு ஒவ்வொருவரும் தத்தம் செல்போன்களில் மூழ்கிவிடுகின்றனர். அதிலும் குறிப்பாக செல்போனில் சமூக வலைத்தளங்களை தான் எந்நேரமும் பலரும் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
 
சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டில் நன்மைகளும், தீமைகளும் கலந்தே இருக்கின்றன. இதன் நன்மைகளை நாம் எப்படி நமது வாழ்வுக்கும், தொழிலுக்கும் பயன்படுத்திக்கொள்வது என்கின்ற பார்வை மட்டுமே நம்மை முன்னோக்கி நகர்த்தும்.
 
உலகின் எங்கோ ஒரு பகுதியில் வசிப்பவர் உலகெங்கும் உள்ளவர்களோடு தொடர்புகொள்ள சமூக வலைத்தளங்கள் பயன்படுகின்றன. புதிய உறவுகளையும், நட்புகளையும் உருவாக்கிக்கொள்ளவும் பழயனவைகளை புதுப்பித்துக்கொள்ளவும், தக்கவைத்துக்கொள்ளவும் சமூக வலைத்தளங்கள் பெரும் பயனளிக்கின்றன.
 
இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு படித்த பள்ளி, கல்லூரி நண்பர்கள் இன்றைக்கு ஆளுக்கு வெவ்வேறு ஊர்களில் வாழலாம். மீண்டும் தங்கள் நட்பை தொடர இனிமையான இளமைக்கால நாட்களை திரும்பப்பெற சமூக வலைத்தளம் வழிவகுக்கிறது.
 
மேலும், தனி மனிதரோ, நிறுவனமோ தங்கள் வியாபாரத்தினை பெருக்கிக்கொள்ள சமூக வலைத்தளங்கள் பயன்படுகின்றன. சுந்தரி என்ற சாமானிய பெண், சென்னை மெரினா கடற்கரையில் மீன், இறால் என்று சுவையாக கடல் உணவுகளை விற்பவர். தற்போது, இவர் சமூக வலைத்தளங்களின் மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டார்.
 
லட்சக்கணக்கான நபர்கள் வலைத்தளம் மூலம் இவரின் செயல்பாட்டினை அறிகிறார்கள். இதனால் இவரின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது. இவருடைய கடையில் வரிசையில் நின்று மக்கள் சாப்பிடுவது அன்றாட காட்சியாகிவிட்டது.
 
 
 
தரமான பொருட்களை, சேவைகளை சிறிய வட்டத்தைத் தாண்டி மற்றவர்கள் அறிய செய்வது சமீப காலங்கள் வரை எளிமையான காரியம் அல்ல. அதற்காக விளம்பர செலவுகள் லட்சக்கணக்கில் செலவிட வேண்டும். ஆனால் காசு செலவு இல்லாமல் மக்களை எளிதில் சென்றடைய சமூக வலைத்தளங்கள் பயன்படுகின்றன.
 
இப்பொழுது உடனுக்கு உடன் செய்திகளையும் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிகின்றது. ஒவ்வொருவரும், இதில் செய்தி சேகரிப்பவராகவும் செய்தியினை கொண்டு செல்பவராகவும் செயல்படுகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டம் பெரும் எழுச்சியோடு நடந்ததற்கும், அதில் நாம் வெற்றி பெற்றதற்கும் சமூக வலைத்தளங்களின் பங்கு மிகப்பெரிய அளவில் இருந்தது.
 
சில பாதகமான விஷயங்களும் சமூகவலைத்தளங்களால் ஏற்படுவது உண்டு. குறிப்பாக, ஆதாரமற்ற, மேம்போக்கான தவறான தகவல்கள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன. அவற்றை உண்மை என்று நம்பிவிடும் அபாயமும் உள்ளது. மேலும் எளிதில் யார் மீதும் அவதூறு பரப்பும் செயலுக்கும் சமூக வலைத்தளங்கள் அடிபணிகின்றன.
 
அதைப்போலவே, பேஸ்புக் புதிய நண்பர்களை உருவாக்கிக்கொள்ள வாய்ப்புகள் அளித்தாலும், சில நேரங்களில் கூடா நட்பு கேடாய் முடியும் விபரீதமும் அரங்கேற வாய்ப்புண்டு. குறிப்பாக, பெண்கள் இதில் பெருமளவில் பாதிக்கப்படும் செய்திகளை நாம் பார்க்கிறோம். தவறான நபர்கள் மூலம் உண்டாகும் நட்புகள் குடும்ப வாழ்க்கையையே சிதைத்துவிடும்.
 
எனக்கு நன்கு அறிமுகமான குடும்பம் ஒன்றில் பெண்மணி ஒருவர் கணவன், குழந்தைகள் வெளியே சென்றவுடன் பொழுது போக்கிற்கு பேஸ்புக்கில் நேரம் செலவழிப்பார். அதில் அறிமுகமான ஒரு ஆணுடன் உரையாடத் தொடங்கினார். நெருங்கிய நண்பர்களானார்கள். ஒருகட்டத்தில் அந்த ஆண், பெண்மணியை மிரட்டி பணம் கேட்கும் அளவிற்கு போய்விட்டது. தக்க சமயத்தில் கணவரிடம் நடந்ததை கூறியதால் பிரச்சினையின்றி சிக்கலிலிருந்து மீள முடிந்தது.
 
இன்றைக்கு பெருகிவரும் மணவிலக்குகளுக்கு சமூக வலைத்தளங்களும் பெரும்பங்கு ஆற்றுகிறது என்பது வேதனையான ஒன்று. புதிய கண்டுபிடிப்புகளால் ஒரு பக்கம் நன்மை இருந்தாலும் இன்னொரு பக்கம் பாதகமும் இருக்கத்தான் செய்கிறது.
 
மோட்டார் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதும் இதே நிலைதான். ஒரு பக்கம் பயணம் எளிதானாலும் இன்னொருப் பக்கம் விபத்துகள் அதிகரித்தன. அதற்காக நாம் அவைகளை பயன்படுத்தாமல் இருப்பதில்லையே. எதிலும் எச்சரிக்கையோடும் கவனத்துடனும் செயல்படும்போது எத்தகைய புதிய கண்டுபிடிப்புகளையும் நாம் எளிதில் ஆட்கொள்ளமுடியும்.
 
மாற்றங்கள் மட்டுமே மாறாதவை. மற்றவையெல்லாம் மாறிக்கொண்டே இருப்பவை. நமக்காக உலகம் காத்திருப்பதில்லை. உலகோடு ஒட்டி வாழ வேண்டுமெனில் சமூக வலைத்தளங்கள் அளிக்கும் நன்மைகளையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வதும் விபரீதங்களில் இருந்து விலகி நிற்பதும் அவசியம். 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்