Paristamil Navigation Paristamil advert login

எளிமையான வாழ்க்கையே இனிமை

எளிமையான வாழ்க்கையே இனிமை

5 கார்த்திகை 2019 செவ்வாய் 10:05 | பார்வைகள் : 8782


 இன்றைய நவநாகரிக உலகில் எளிமையாக வாழ்தல் என்பதை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கடன் வாங்கியாவது தங்களை ஆடம்பரமாகக் காட்டிக்கொள்வதே இன்றைய மனிதர்களின் மனப்போக்கு. ஆனால் எளிமையானதாகத் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்களே வரலாற்றில் இன்றும் பேசப்படுகிறார்கள். மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, நெல்சன் மண்டேலா, அறிஞர் அண்ணா, வினோபா பாவே, ஜே.சி.குமரப்பா, பெருந்தலைவர் காமராசர் போன்ற தேசிய ஆளுமைகள் மிக எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டவர்கள்; அதனாலேயே இன்றளவும் மக்களால் நினைவு கூரப்படுகின்றனர்.

 
“ஒருவன் பெரும்பொருளைத் தேடித் தொகுத்து வீடு முழுவதும் நிரப்பி வைப்பதால் பயன் விளையப் போவதில்லை; அப்பொருள்களை அனுபவிக்காதவன் இறந்தவனுக்குச் சமமாவான்” என்று வள்ளுவர் கூறுகிறார்.
 
 
“வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
 
செத்தான் செயக்கிடந்தது இல்”
 
என்ற குறட்பா இக்கருத்தை விளக்குகிறது. எனவே பெரும்பொருளைச் சேர்த்து வைப்பதால் பயன் இல்லை என்பது நமது முன்னோர்களின் தத்துவம்.
 
எளிமையாக்கப்பட்ட வாழ்வின் சிறப்புக்களைப் பற்றி ஆய்வு செய்த கிறிஸ்டோபர் முர்ரே என்ற அறிஞர் எளிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையானது நமக்குப் பணம் பற்றிய கவலைகளை ஒழித்துவிடுகிறது; நமது வாழ்க்கைக்கு எவ்விதத்திலும் உதவாத மனக்குழப்பங்களையும், வீண் ஆரவாரங்களையும் நம்மிடம் இருந்து துரத்தி விடுகிறது; நமக்குப் புதிய புதிய அனுபவங்களைத் தருகிறது; நம்மிடம் குவிந்து கிடக்கின்ற செல்வம் தராத மகிழ்ச்சியை நமக்குத் தருகிறது; நமது மனஅழுத்தத்தைப் போக்குகிறது என்று கூறுகிறார்.
 
செயற்கையான ஆடம்பரப் பொருள்களை விலக்கி வைத்துவிட்டு எளிய வாழ்க்கையைத் தொடங்கினால் சுற்றுப்புறச் சூழல் சிறப்பாக அமையும்; அதனால் இயற்கை வளம் சிறக்கும். நம்முடைய தேவைகள், ஆசைகள் குறையும்போது நமக்கு யாருடனும் முரண்பாடு ஏற்படாது; சகமனிதர்களுடனான உறவு மேம்பாடு அடையும் என்ற கருத்துகளை கிரிஸ்டோபர் முர்ரே கூறுகிறார். நமது சங்க இலக்கியத்தில் நற்றிணை எனும் இலக்கியத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு, முன்னர் ஒரு தமிழ்ப் புலவர் இக்கருத்தினை மிக நுட்பமாகக் கூறியுள்ளார்.
 
“நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
 
செல்வம் அன்று” என்பது அச்சிறப்பான அடிகள்.
 
பிறரால் பாராட்டப்படுதலும் தன்னைப் பற்றிப் பெரிதாக எண்ணிக் கொள்வதும், மிகப்பெரிய வாகனங்களில் விரைந்து செல்வதும் நம்முடைய செல்வ வளத்தினால் ஏற்பட்டது என்று எண்ணிவிடக்கூடாது; அவை முன்வினைப் பயனின் காரணமாக நமக்குக் கிடைத்தது என்று கருதி மற்றவர்களின் நன்மைக்கும் சிறிது பயன்படுத்த வேண்டும் என்று இப்புலவர் கூறுகிறார்.
 
எளிமைப்படுத்தப் பட்ட வாழ்க்கையை எவ்வாறு அமைப்பது என்ற வினா எழுகிறது! உங்களிடமுள்ள ஒரு பொருள் தொடர்ந்து அறுபது நாட்கள் பயன்படுத்தப்படவில்லையென்றால் அது உங்களுக்குத் தேவையில்லை என்று பொருள்; அப்படியானால் அந்தப் பொருளை உங்கள் உடைமைப் பட்டியலிலிருந்து அதனை நீக்கி விடத் தயங்க வேண்டாம்; உங்களிடமுள்ள ஒரு காரைக் கூட நீங்கள் இவ்வாறுதான் மதிப்பிட்டு முடிவு செய்ய வேண்டும். குறைவான பொருள்கள் இருந்தால் ஒரு சிறிய வீட்டில்கூட உங்களால் வாழ்ந்து விட முடியும்; அதிகப்படியான பொருள்களைக் குவித்து வைத்திருந்தால் அவற்றை வைத்துப் பராமரிக்கப் பெரிய வீடாகப் பார்க்க வேண்டும்; இது வாடகை, பராமரிப்பு நிலைகளில் அதிகப்படியான செலவுகளை ஏற்படுத்தி உங்கள் சேமிப்பைக் காலி செய்துவிடும். சிறிய வீட்டில் வாழும் போது அதிகமாகப் பொருள்களை வாங்க மாட்டோம் என்பது இன்னொரு நன்மை!
 
எளிய வாழ்க்கை வாழ வேண்டுமானால் வரவு செலவைத் திட்டமிடல் மிக இன்றியமையாதது. இன்றைய மனிதர்கள் மிக அதிகமாகப் பயன்படுத்தி வரும் இணையம் முதலான வசதிகளைப் பற்றி எதுவுமே தெரியாத முந்தைய தலைமுறை மனிதர்கள் நிம்மதியாக இருந்தார்கள். ஒரு மாதத்திற்கு நாம் தகவல் தொடர்புக்காக எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டால் அவற்றைக் கட்டுப்படுத்தலாம். இன்றைய சந்தைக் கலாசார வாழ்க்கையில் நிதி நிறுவனங்கள் ஒருவரை எளிதில் கடனாளியாக ஆக்கும் வல்லமை படைத்தவை; நமது தேவைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாவிட்டால் நாம் ஏமாற்றப்படுவது உறுதி! திட்டமிடல் மூலம் இதனைத் தவிர்த்து விடலாம். பொருளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பதைத் திருவள்ளுவர் “பொருளாட்சி போற்றார் கண் இல்லை” என்ற அடியில் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
 
குறிப்பிட்ட நோக்கங்களுடன் மட்டுமே பணத்தைச் செலவு செய்தல், உங்களுடைய உறவினர்கள் எது கேட்டாலும் அதனைத் தள்ளிப்போடுதல், உங்களுடைய வாழ்க்கையில் எது அதிக தேவையோ அதனை மட்டுமே வாங்குதல், இணைய விளம்பரங்களுக்கு மனத்தைப் பறிகொடுத்துவிடாமல் உறுதியாக நிற்றல், கடன் அட்டைகளைப் பயன்படுத்தாமல் இருத்தல், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயரால் பணத்தைச் செலவிடாமை, எளிமைப்படுத்தப்பட்ட வாழ்வின் சிறப்பை நீங்கள் உணர்வதுடன் உங்கள் குடும்பத்தினரையும் உணரச் செய்தல் போன்ற வழிமுறைகளைக் கையாண்டால் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று “மினிமலிசம்” பற்றி ஒரு நூலை எழுதியுள்ள கைநத் சுனோ என்ற அறிஞர் குறிப்பிடுகின்றார். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கப் புலவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்பவர் எளிய வாழ்க்கையின் சிறப்பைப் பற்றிக் கூறியுள்ளார்.
 
“சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது
 
ஒழிந்தவர் எல்லாம் உண்ணாதும் செல்லார்
 
இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார்
 
வளமை விழைதக்கது உண்டோ? உளநாள்
 
ஒரோகை தம்முள் தழீ ஒரோஓகை
 
ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்
 
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை”
 
என்ற பாடல் வாழ்க்கை அனுபவத்தை முன்னிலைப் படுத்திப் பொருளின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்கள் கொண்டிருந்த எண்ணத்தை விமர்சிக்கிறது. வாழ்க்கையின் மகிழ்ச்சியை நுகராமல் பணம் தேடுவதையே குறிக்கோளாகக் கொண்டவர்களுக்கான நற்போதனையை இவ்வடிகள் கூறுகின்றன. வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிப்பதற்கு பணத்தை விட மனம் இசைந்திருப்பதே முக்கியம் என்பது எவ்வளவு உன்னதமான கருத்து! உலகம் முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆட்சி செய்யும் மன்னனாக இருந்தாலும், காட்டில் வேட்டையாடி உணவைத் தேடியுண்ணும் ஒரு வேட்டைக்காரனாக இருந்தாலும் உண்பதற்கு ஒரு படியரிசி உணவும், உடுப்பதற்கு இரண்டு துண்டுத் துணியும்தான் தேவை; எனவே மிகுதியானசெல்வம் சேர்ப்பதால் எந்தப் பயனும் இல்லை என்று நக்கீரனார் என்ற புலவர் கூறுகிறார்.
 
நவீன காலத்தில் பல்வேறு ஆய்வுகள் செய்து வாழ்வியலுக்கான கருத்துக் கொடைகளை இன்றைய ஆய்வாளர்கள் வழங்கி வருகின்றனர். ஆனால் நமது செவ்வியல் இலக்கியப் புலவர்கள் இதே கருத்துகளை அழகுணர்ச்சியுடன் கவிதைகளாகப் புனைந்து தந்திருக்கின்றனர் என்பது தமிழராகிய நமக்குப் பெருமை தருவதாகும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்