கணவன் மனைவி சண்டைகள் அதிகமாகி உறவு கசக்க என்ன காரணம்?

3 ஐப்பசி 2019 வியாழன் 16:00 | பார்வைகள் : 11799
தற்போது எதற்கெடுத்தாலும் எதிரும், புதிருமாக முட்டி மோதிக் கொள்ளும் தம்பதியர் பெருகிவிட்டார்கள். எல்லாவற்றுக்குமே தீர்வு இருக்கிறது. இல்லறத்தில் இல்லாத இனிமைகளா? பரஸ்பரம் புரிந்து கொள்வதில் இருக்கிறது பாதி வாழ்க்கை, விட்டுக் கொடுப்பதில் இருக்கிறது மீதி வாழ்க்கை.
எப்போது கணவன், மனைவியின் நிலையை புரிந்து கொள்ள வேண்டும், எப்போது யார் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது புரியாமல்தான் அத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம். இதற்கு ஒரே தீர்வு மனம் விட்டுப் பேசிக்கொள்வதுதான். ஆமாம், கணவனும், மனைவியும் கொஞ்சிப் பேச கொஞ்ச நேரம் ஒதுக்கினால், பிரச்சினைகள் தானே ஒதுங்கிப்போய்விடும்.
வாருங்கள் தம்பதியரின் புரிந்துணர்வை அதிகரிக்கும் விஷயங்களை தெரிந்து கொள்வோம்… அலுவலக பிரச்சினைகளை கணவர் மனைவியிடம் கூறலாம். உடல் மனநல பிரச்சினைகளை மனைவி கணவரிடம் கூறலாம். இப்படி பகிர்ந்து கொள்வது ஆறுதல் அளிப்பதுடன், அன்பை வலுப்படுத்தும். ‘நமக்காக ஒருவர் இருக்கிறார்’ என்ற நம்பிக்கையை வளர்க்கும்.
வாழ்க்கையை வளப்படுத்தும். ஏதோ காரணத்தால் பிரச்சினை பெரிதாகும்போது யாராவது ஒருவர் மவுனம் காத்தால் தீர்வு விரைவில் எட்டப்படும். ஒருவர் மவுனத்தைப் புரிந்து கொண்டு மற்றவர் பேசுவதை குறைக்கலாம். பிறகு அந்த மவுனமே இருவரும் சிந்திக்கும் நிலையைத் தூண்டும். அதுவே தன்பக்க தவறை உணரும் வாய்ப்பாக மாறும். தவறுகள் உணரப்பட்டால் சமாதானம் மலரும்.
கர்வம் பார்க்காமல் மன்னிப்பு கேட்கப் பழகிவிட்டால் தம்பதியருக்குள் பிரச்சினைகள் மறைந்துவிடும். இருவருக்குமே தன்மான உணர்வுகள் உண்டு, இணைந்து வாழ்வதே இல்லறம். அதில் இருவருக்கும் சமபங்கு, உரிமை இருக்கிறது. ‘அவர்/அவள் இறங்கி வரட்டும் ‘ஆண் இல்லாமல் அவளால் என்ன செய்ய முடியும்?’ என்பது போன்ற எண்ணம் உங்களுக்குள் இருந்தால், அது பிரிவினையில்தான் கொண்டுபோய்விடும். பிறகு பிரிவுதான் இருவருக்கும் பாடம் கற்பிக்கும்.
தம்பதியருக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டால் உங்களுக்குள் பேசி தீர்வு காணுங்கள். இல்லாவிட்டால் சிறிது இடைவெளி பராமரித்து பின்பு கூடிக்கொள்ளுங்கள். அப்படி இல்லாமல் ஒருவர் மற்றவரின் குடும்பத்தைப் பற்றி கேவலமாக பேசுவது கூடாது. மனைவி கணவரிடம் பாலுணர்வு பற்றி வெளிப்படையாக பேசினால் தவறு என்ற கருத்து ஆண்கள் மத்தியிலும், நம் சமூகத்திலும் உள்ளது. அது தவறு. தாம்பத்தியம்தான் தம்பதியரின் அடிப்படை உறவு. தாம்பத்தியம் ஆரோக்கியமாக இருந்தால், பெரிய பிரச்சினைகளும் தானாக ஓடி மறைந்துவிடும்.
கோபம், பொறாமை, வஞ்சனை, தலைக்கனம் போன்ற எல்லாவற்றையும் வெளியேற்றும் ஆற்றல் தாம்பத்தியத்திற்கு உண்டு. கணவன், மனைவி இருவருமே பாலியல் தேவைகளை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டாலே, இல்லற பிரச்சினைகள் பல இல்லாமல் போய்விடும். புரிதல் இல்லாமல் புலம்புவதைவிட்டு, வெளிப்படையாகப் பேசி, விட்டுக் கொடுத்து வாழ்வதே உறவு பேணும் கலை என்பதை உணருங்கள்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1