Paristamil Navigation Paristamil advert login

கணவருக்கு பிடித்த மனைவியாக இருப்பது எப்படி?

கணவருக்கு பிடித்த மனைவியாக இருப்பது எப்படி?

29 ஆவணி 2019 வியாழன் 08:59 | பார்வைகள் : 8365


 கணவருக்கு பிடித்த மனைவியாக இருப்பது கடினமான விஷயம் அல்ல.தற்போது திருமணம் முடிந்த கையோடு விவாகரத்து கோரி நீதிமன்றம் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 
திருமண உறவில் ஆண் தான் பெரியவர், பெண் அவருக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பது இல்லை. இருவரும் சமமே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். திருமண நாளை நினைத்து கனவு காண ஒதுக்கிய நேரத்தில் பாதியை மணம் முடிந்த பிறகு பிரச்சனை ஏற்பட்டால் அதை தீர்க்க ஒதுக்கலாம்.
 
எவ்வளவு ஒற்றுமையான கணவன், மனைவியாக இருந்தாலும் பிரச்சனை ஏற்படாமல் இருக்காது. அப்படி பிரச்சனை ஏற்படும் போது கணவன் அல்லது மனைவி ஆகியோரில் யாராவது ஒருவர் அமைதியாக இருந்து விட்டுக் கொடுப்பது நல்லது. நீங்கள் விட்டுக் கொடுத்தால் உங்களின் கணவரோ, மனைவியோ தொடர்ந்து கோபப்பட்டு கத்திக் கொண்டே இருக்க மாட்டார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் கோபப்பட்டு கத்துவதையே நிறுத்திவிடுவார்கள்.
 
 
 அலுவலகத்தில் இருந்து அசதியாக கணவர் வந்தால் வீட்டிற்குள் நுழைந்த உடன் அவரிடம் குறைபாட வேண்டாம். அது அவரின் கோபத்தை மேலும் தூண்டிவிடுவது போன்றாகிவிடும். அதே போன்று சக ஊழியர்கள் மீதான கோபத்தை மனைவி மீது காட்டுவது தவறு ஆகும். கணவர் செல்போனை எடுத்து நோண்டிப் பார்ப்பது, அவர் மீது எப்பொழுதும் சந்தேகக் கண் வைத்திருப்பது உங்களின் உறவு மற்றும் நிம்மதியை தான் கெடுக்கும். கணவன் மனைவி மீதும், மனைவி கணவன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
 
 
இல்லத்தரசிகள் தொலைக்காட்சி சீரியல்களை பார்த்துவிட்டு அதில் நடப்பது போன்று தான் நம் வாழ்விலும் நடக்கும் என்று பயப்பட வேண்டாம். சீரியலில் கணவன் ஏமாற்றினால் நிஜத்திலும் அப்படியே நடக்கும் என்று இல்லை. நமக்காக பிறந்த வீட்டை விட்டு வரும் மனைவிக்காக தினமும் நேரம் ஒதுக்குவது கணவன்மார்களுக்கு நல்லது. பரிசுகளில் விலை மதிப்பில்லாதது நேரம் தான். மனைவியுடன் தினமும் நேரம் செலவிட்டாலே முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்துவிடும்.
 
 
கணவன் மனைவி இடையே breathing space இருக்க வேண்டும். அது கட்டாயமானது. திருமண உறவை மேம்படுத்த உதவுவதும் ஆகும். முக்கியமாக மனைவிமார்கள் கணவனை பார்த்து உங்களுக்கு நான் முக்கியமா, அந்த வீணாப் போன நண்பன் முக்கியமா என்று கேட்கக் கூடாது. திருமணமாகிவிட்டால் ஆண்கள் தங்கள் நண்பர்களுடன் நேரம் செலவிடக் கூடாது என்று மனைவிகள் நினைப்பது தவறு.
 
 
பல குடும்பங்களில் மாமனார் பிரச்சனையே இல்லை. அந்த மாமியார், குறிப்பாக நாத்தனார் என்றால் தான் கசக்கும். கணவன் மட்டும் வேண்டும் அவரின் குடும்பத்தார் வேண்டாம் என்று நினைப்பது தவறு. மாமியார், நாத்தனாரை பிடிக்காவிட்டால் அவர்கள் மீது அன்பு செலுத்துவது போன்று முதலில் நடிக்கவாவது செய்யுங்கள், பின்பு உங்கள் மனம் மாறி நிஜமாகவே பாசமாக இருப்பீர்கள். தன் குடும்பத்தை கொண்டாடும் மனைவியை எந்த கணவனுக்கு தான் பிடிக்காது.
 
 
பிரச்சனை ஏற்பட்டால் அதை கணவன், மனைவி மட்டுமே பேசித் தீர்ப்பது நல்லது. மூன்றாவது நபர் அதில் தலையை நுழைத்தால் ஆபத்தாகிவிடும். கணவனுடன் சண்டை போட்டால் உடனே பெட்டியை தூக்கிக் கொண்டு அம்மா வீட்டிற்கு ஓடுவது பிரச்சனையை பெரிதாக்கி அதை பிறர் ஊதிப் பெரிதாக்கி விவாகரத்தில் கூட முடியும். கணவன் மனைவி இடையே ஒளிவு மறைவு இல்லாமல் இருப்பதும், ஈகோ பார்க்காமல் இருப்பதும் உறவை மேம்படுத்தும். சின்னச் சின்ன விஷயங்களில் விட்டுக் கொடுத்தால் அது பெரிய பிரச்சனையாகாமல் தவிர்க்கலாம். ஏதோ எங்களுக்கு தெரிந்ததை கூறியுள்ளோம். அதை படித்து மனதில் வைத்துக் கொண்டு நடந்தால் மகிழ்ச்சி.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்