2 ஆவணி 2019 வெள்ளி 07:54 | பார்வைகள் : 12265
சொன்ன சொல் தவறாமல் கேட்கும் என் பிள்ளைகள் பதின்மூன்று வயதில் எப்படி மாறினார்கள்? ஏன் மாறினார்கள்? அன்று அன்பொழுக வகுப்பில் நடந்தவற்றை எல்லாம் சொல்லி சொல்லி மடியில் தலைவைத்துத் தூங்கிய பிள்ளைகள் இன்று ஏன் எதற்கெடுத்தாலும் எரிந்து விழுகிறார்கள் என்ற வருத்தம் தோய்ந்த கேள்வி எழுகிறதா? பதின்மூன்று வயதிலிருந்து பத்தொன்பது வயது வரை உள்ள குழந்தைப் பருவத்தையே பதின்பருவம் என்றும் வளரிளம் பருவம் என்றும் அழைக்கிறோம். ஆண், பெண் பிள்ளைகளிடம் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மாற்றம் நடப்பது இக்காலகட்டத்தில்.
அந்தக் காலகட்டத்தில்தான் அவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைப் பதற்றத்துடனும், பயத்துடனும் எதிர்கொள்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில்தான் அவர்கள் பதினொன்றாம் வகுப்புப் பொதுத்தேர்வையும் பிளஸ்-2 அரசுப்பொதுத்தேர்வையும் எதிர்கொள்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில்தான் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளமாய் அமையும் உயர்கல்விக்காகக் கல்லூரிக்குள் நுழைகிறார்கள். அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களைக் கலக்கமுறச் செய்கின்றன.
அதுவரை குழந்தைகளாய் இருந்த தங்களை அவர்கள் பெரியோராக மெல்லமெல்ல உணரத்தொடங்குகிறார்கள். எதிர்பாலினங்களின் மேல் வரும் ஈர்ப்பை அவர்கள் காதல் என்று தவறாகப் புரிந்துகொண்டு சொல்லமுடியாத தீராத மனவலிக்கு ஆளாகிறார்கள். தங்களின் மன உடல் மாற்றத்தைத் தங்கள் பெற்றோர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூச்சப்பட்டு நண்பர்களிடம் பகிர்ந்துகொள்கிறார்கள்.
அவர்களின் உலகம் என்னும் புரியாத புதிருக்குள் நுழையும் வழியறியாமல் பெற்றோர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். கூட்டுப் பறவைகளாய் அதுவரை வீட்டிற்குள் வளர்ந்த குழந்தைகள் பொதுவெளிக்கு வரவிரும்புகிறார்கள், அவர்களின் உளவியல் உடலியல் சிக்கல்களைச் சரியாகப் புரிந்துகொண்டு அவர்களைச் சரியாக வழிநடத்தத் தவறினால் அவர்களின் எதிர்காலமே பாழாகும் நிலை ஏற்படலாம்.
பெற்றோர்களின், ஆசிரியர்களின், சமூகத்தின் கட்டுப்பாடுகளைக்கண்டு எரிச்சலடைந்து எதிர்வினை புரிகிறார்கள். சுதந்திரமாய் நாலுபேரோடு பேசிப் பழக விரும்புகிறார்கள், தடுக்கும் பெற்றோர்களை எதிர்க்கவும் எடுத்தெறிந்து பேசவும் துணிகிறார்கள். தங்கள் உடலைக் கொண்டாடத் தொடங்கி கண்ணாடிமுன் அதிக நேரத்தைச் செலவழிக்கிறார்கள். லட்சரூபாய் மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் பறக்கத்தொடங்குகிறார்கள். சில பிள்ளைகள் மன அழுத்தத்தால் மதுப்பழக்கம், போதைப்பழக்கம் போன்றவற்றிற்கு ஆளாகிறார்கள்.
அவர்களின் கவனம் எதிர்காலத்திலிருந்து திசைமாறி வேறுதிசை நோக்கிப் பயணிக்கத் தொடங்குகிறது. எப்போதும் தனிமை, வெறுமை, இறுக்கம் போன்றவற்றிற்கு ஆட்படுகிறார்கள். அந்தக் காலத்தில்தான் வைரத்தை வாசலில் எறிந்துவிட்டு கூழாங்கற்களை அவர்கள் கையில் ஏந்திக்கொண்டிருப்பதாய் சமூகம் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசத் தொடங்குகிறது.
பதின்பருவத்துக் குழந்தைகள் அன்புக்கும் தங்கள் பெற்றோர்களின் அங்கீகாரத்திற்கும் ஏங்குகிறார்கள். பல குழந்தைகளின் தாய், தந்தையர் இருவரும் வேலைக்குச் சென்றுவிடுவதால் பள்ளி, கல்லூரி முடித்து வரும்போது அப்பிள்ளைகளை வரவேற்கவோ, அன்புடன் பேசிச் சிற்றுண்டி தருவதற்கோ யாரும் இன்றித் தனிமைக்குள் தள்ளப்படுகிறார்கள். அவர்களின் தனிமைக்குச் சமூக ஊடகங்கள் தீனியாய் அமைகின்றன. நாகரிகம் என்ற பெயரில் அளவுக்கதிகமான செல்போன் பயன்பாட்டிற்குள்ளாகிச் சமூக ஊடகங்களுக்குள் நுழைகிறார்கள்,
முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், டுவிட்டர், டிக்டாக் கணக்குகளைத் தொடங்குகிறார்கள். இணையத்தின் மாயஉலகில் அப்பிள்ளைகள் நுழைவது இப்படித்தான். சமூக ஊடகங்கள் மூலமாக அரும்பும் காதல் அவர்களைக் கவனத்துடன் படிக்கவிடாமல் வேறு திசை நோக்கித் திருப்புகிறது. அறிமுகம் இல்லாதவர்களிடம் தங்கள் சொந்த வாழ்வைத் தந்து அவர்கள் வழி தவறுவதற்கு யார் காரணம்? பள்ளிச் சீருடைகளுடன் அவர்களைக் காதல் பிம்பங்களாய் சித்தரிக்கும் திரைப்படங்கள் அவர்களின் வழி தவறுதலுக்கு ஒருவகையில் காராணம்தான். உண்மை எது? போலி பிம்பங்கள் எது என்று தெரியாமல் அப்பிள்ளைகள் பதின்பருவத்தில் வழி தவறுவதற்குப் பெற்றோர்களும், சமூகமும் ஏன் காரணமாக வேண்டும்?
பதின்பருவப் பிள்ளைகளின் சிறுநடவடிக்கைகளைக் கூட பெற்றோர்கள் கூர்ந்து கவனமாக நோக்க வேண்டும், பாதை தவறுவதாய் உணர்ந்தால் நம் செயல்கள்தான் நம் முகங்களாக அமைகின்றன என்று மென்மையான சொற்களால் அவர்களைத் திருத்த முயலவேண்டும். அவர்களை அடிப்பதோ, அவர்களைக் கண்டபடி திட்டுவதிலோ பயனில்லை, வாழ்வின் மாயைகளை அவர்களுடன் பேசிப்பேசியே உணர்த்தமுடியும். அவர்கள் செய்யும் செயல் அவர்களின் வாழ்வில் உண்டாக்கப் போகும் தீயவிளைவுகளை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
அவர்கள் வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களின் வாழ்வைப் பாழாக்கும் என்பதை அவர்கள் உணரச்செய்யவேண்டும். விலையுயர்ந்த ஸ்மார்ட் செல்பேசிகளையும், விலையுயர்ந்த பைக்குகளையும் பெற்றோர்கள் அப்பிள்ளைகளுக்கு வாங்கித் தருவதைத் தவிர்க்க வேண்டும். அருகருகே இருந்தாலும் தண்டவாளங்கள் எந்தப் புள்ளியிலும் ஒன்று சேரமுடியாது. அவர்கள் நியாயப்படுத்தும் தவறுகள் பெற்றோர்களைக் காயப்படுத்தத்தான் செய்யும். அதனால் செய்த தவறுகளை நியாயப்படுத்தாமல் ஒத்துக்கொண்டு இனிமேல் செய்யாமல் இருப்பதற்கான நேர்மையை அவர்களுக்குக் கற்றுத்தரவேண்டும்.
கல்கண்டு போல்தான் உடைந்த கண்ணாடியும் காட்சியளிக்கிறது, கவனமாய் இல்லையென்றால் குத்திக்கிழித்துவிடும் இந்த வாழ்க்கை என்பதைப் பிள்ளைகளுக்கு உணர்த்துங்கள். பெண்பிள்ளைகளுடன் தாய் நட்பாகப் பழகுவதன் மூலம் சமூகத்தின் பல்வேறு முகங்களை அவர்களுக்குக் காட்டி கவனமாய் இருக்கவைக்க முடியும். மனத்தெளிவே அவர்களின் மகிழ்ச்சிக்கும், மலர்ச்சிக்கும் ஒரே வழி. அத்தெளிவை அவர்களுக்கு உண்டாக்கி அல்லதை விலக்கி, நல்லதை நோக்கி நகர்த்தப் பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் மட்டுமே முடியும்.
சுத்தியல்களால் அடிக்கப்படும் ஆணிகள் மாதிரி சொற்களால் அப்பிள்ளைகளை அடிப்பதைவிட மென்மையாலும் உண்மையாலும் அவர்களுக்கு நன்மையை உணர்த்துவோம். காரிருளைப் பழிப்பதைவிட அகல்விளக்காய் இருக்கலாமே. நடந்துபோக மட்டுமல்ல பிடிக்காதவற்றைக் கடந்துபோகவும்தான் கால்கள். காலம் மாறிக்கொண்டிருக்கிறது, பிள்ளைகளின் உளவியலும் மாறிக்கொண்டே இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு உண்மையைச் சொல்லி நன்மையைச் சொல்லி வாழ நம் பிள்ளைகளை நாம் பயிற்றுவிக்க வேண்டும்.
என்னால் முடியாமல் போன என் கனவுகளை என் பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டும் என்று பெற்றோர்கள் நினைக்கக்கூடாது. அவர்களின் ஆர்வமறியாமல் நாம் முன்னிறுத்தும் லட்சியங்களே அப்பிள்ளைகளை மனஅழுத்தத்தில் கொண்டு சேர்க்கின்றன. உறுத்திய கண்களால் உலகைப் பார்க்கும்போது எல்லாம் கலங்கலாகத்தான் இருக்கும், எல்லாம் நம் பார்வையில் இருக்கிறது, நம் பார்வையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும், எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுவதை விட்டுவிட்டு அவர்களை நம்புவோம், வழி தவறும்போது நண்பர்களைப் போல் நாசுக்காய் அவர்களைத் திருத்துவோம்.