Paristamil Navigation Paristamil advert login

தடம் மாறுகிறதா தமிழர் பண்பாடு?

தடம் மாறுகிறதா தமிழர் பண்பாடு?

30 வைகாசி 2019 வியாழன் 05:31 | பார்வைகள் : 9308


 இன்றைய சமுதாயத்தில் மனிதர்கள் பல வாழ்வியல் நெறிமுறைகளை இழந்துவிட்டனர். வாழ்க்கை என்பது ஒரு சிறந்த கலையாகும். அதனை நல்லமுறையில் அமைத்துக் கொள்ள வேண்டும். மனித சமுதாயம் தன் வாழ்க்கைமுறை, நாகரிகம் ஆகியன சீர்குலையாமல் இருக்கவே நெறிமுறைகளையும், விதிமுறைகளையும் வகுத்தது. அது முதல் அந்நெறிமுறைகளையும், விதிமுறைகளையும் பின்பற்றிய வாழ்க்கை முறையானது நிலைகொள்ளத் தொடங்கின. தமிழர்கள் கண்ட வாழ்வு நெறிகளும், நாகரிகமும் உலகத்தாருக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்வன ஆகும்.

 
வாழ்வை நல்லமுறையில் அமைத்துக்கொள்ள வேண்டு மெனில் நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும். நம் தமிழ் மக்கள் கொண்ட உயரிய கொள்கையே “வாழ்; வாழவை” என்பதாகும். இக்கொள்கைகளைப் பின்பற்றுவதால் சமூகத்தில் குற்றங்கள் பல தானாகவே குறையும் என்பது உறுதி.
 
 
கட்டுப்பாடுகள் மனிதனை நெறிப்படுத்தும் ஒரு வழிமுறையேயாகும். கட்டுப்பாடுகளை மனத்துள் கொண்டவர்கள் பண்புடையவர்களாகின்றனர். சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்படும் கட்டுப்பாடுகள் மனித சமுதாயத்தைப் பண்படுத்தவே வகுக்கப்பட்டுள்ளன. நம் தமிழர்கள் மிகச் சிறப்பான வாழ்வு வாழ்ந்தவர்கள். தமிழர்களின் வாழ்வியலை ஆராய்ந்தால் கட்டுப்பாடுகளை அவர்கள் ஒருபோதும் சுமையாகக் கருதியதில்லை. சமுதாயத்தில் ஏமாற்றங்களும், வஞ்சங்களும் நிகழாது தடுக்க அக்கட்டுப்பாடுகளே மிகச்சிறந்த ஆயுதமாகத் திகழ்ந்தன. இன்றைய நாகரிக மாற்றத்தால் முன்பிருந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள் மிகுதியும் தளர்ந்து சமுதாயத்தில் எல்லா நிலையிலும் சீர்கேடு நிகழ்வதைக் காணமுடிகிறது.
 
ஒழுக்கக்கேடு ஒரு கொடியநோய். சமுதாயத்தில் ஏற்படும் குழப்பங்கள் எல்லாம் அந்நோயின் அறிகுறிகளே ஆகும். சமுதாயத்தில் நிகழும் குற்றங்களுக்குப் பொருளாதார வறுமையும் அறியாமை நிறைந்த மனமும் பெரும் காரணிகளாக அமைகின்றன. இவற்றில் பொருளாதாரத்தில் மாற்றம் செய்வது எளிது. ஆனால் உள்ளத்தில் படிந்துள்ள இருளை அகற்றுதல் அவ்வளவு எளிதன்று. எனவே, சமூகம் கட்டுப்பாடுகளையும் நெறிமுறைகளையும் மதித்து வாழும் போது தான் மீண்டும் உயரிய சமுதாயம் துளிர்விடும். மன இருளும் நீங்கும்.
 
ஒழுக்கமே நன்மைகளுக்கெல்லாம் அடிப்படை. இன்றைய சமுதாயம் ஒழுக்கநெறி தவறிவிட்டதோ? என எண்ணத் தோன்றுகிறது. மக்களுள் பலர் பணந்தேடும் நோக்கையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு, எவ்வழியிலும் பணம் தேட எண்ணுகிறார்கள். ஆனால் வாழ்க்கை என்பது எப்படியும் வாழலாம் என்பதில் அல்ல. இப்படித்தான் வாழவேண்டும் என்பதில் தான் உள்ளது. நம் முன்னோர்கள் உயரிய நெறிகளைப் பின்பற்றி வாழ்ந்ததால்தான் தமிழ்ச் சமூக நாகரிகம் உலகத்திற்கே எடுத்துக் காட்டாய்த் திகழ்கிறது. சமூகச் சீரழிவுகள் மாறவேண்டுமெனில் குழந்தைகளிடத்திலிருந்தே மாற்றங்களை விதைக்க வேண்டும்.
 
 
 
இன்றைய சூழலில் சமுதாயத்தை மாற்ற மேடைப்பேச்சோ பல வகையான அறிவுரைக் கட்டுரைகளோ அவசியமில்லை. ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகளை நல்லமுறையில் உருவாக்குதலே இன்றியமையாததாகும். அதுவே நாம் நாட்டிற்குச் செய்யும் முதற்கடமையுமாகும். நல்ல கல்வியை அவர்களுக்குக் கொடுத்து அவர்களிடத்து மறைந்துள்ள ஆற்றல்களைக் கண்டறிந்து அவற்றை வெளிக்கொணர்ந்து, அறிவைப் பெருக்கி, இளம் உள்ளங்களில் நற்பண்புகள் என்னும் விதைகளைத் தூவி, அவர்களை வளர்த்தால் உறுதியாக நம் சமுதாயம் சீர்பெறும்.
 
உணவு, உடை, பழக்க வழக்கங்கள், திருமணம் போன்ற விழாக்களின் நிகழ்முறைகள் போன்றவை அனைத்தும் தமிழர்களின் மரபுப்படி அர்த்தமுள்ளவை. நம் நாடு பல்வேறு தட்பவெப்ப நிலைக்கு உட்பட்டது. அந்நிலையில் உணவு, உடை போன்றவற்றையும் அந்நிலைக்கு ஏற்றவகையிலேயே அமைத்துள்ளனர். ஆனால் அதைத் தவிர்த்து உணவுப் பழக்க வழக்கத்தை நாம் மாற்றிக்கொள்ளும்போது அவை நம் தட்பவெப்பத்திற்கு ஏற்றதாக அமையாமல் பல நோய்களை ஏற்படுத்துகிறது.
 
நாகரிகம் என்னும் பெயரில் இன்று உடையமைப்பில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்கள் நிகழ்வதைக் காணமுடியும். உடுத்தும் உடையில் மருத்துவம் நிறைந்துள்ளது என அறிஞர்கள் கூறுவர். நம் தட்பவெட்பத்திற்குப் பருத்தியாடையே மிகச் சிறந்தது என்கின்றனர். ஆனால் இன்று அதை விடுத்து ஆணும், பெண்ணும் உடல் நலத்தைப் பாதிக்கும் வகையில் உடை உடுத்துவது நாகரிகச் சிதைவையே உணர்த்துகிறது.
 
தமிழர்கள் தங்களின் தலை சிறந்த நாகரிகங்களை முற்றிலுமாக மறந்துவிடும் காலம் மிக அருகில் வந்துவிட்டது என்பதைத் தற்காலச் சூழலில் உணரமுடிகிறது. மொழியும், பண்பாடும் ஒவ்வொரு மனிதருக்கும் முகவரியாக அமைவன ஆகும். இவை இரண்டும் இல்லையெனில் மனிதன் அடையாளமின்றி முகவரி இல்லாத அனாதையாகிவிடுவான். தமிழர்களுக்கு அந்தநிலை வெகுதூரமில்லை.
 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்