தற்கொலை ஒரு தீர்வா?
6 வைகாசி 2019 திங்கள் 11:23 | பார்வைகள் : 9465
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ந்தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
கற்காலம் தொட்டு பிரச்சினையையும், தோல்வியையும் மனிதன் சந்தித்த ஒன்றுதான். ஆனால் அன்று அவற்றை முறியடித்த மனிதன் இன்று துவண்டு போகிறான். வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றம், மன அழுத்தம் காரணமாக, அதில் இருந்து முடிவு எடுக்க வாய்ப்பின்றி சூழ்நிலை பிடிக்காமல் போகும் பட்சத்தில் தற்கொலைக்கு முடிவு எடுக்கிறார்கள்.
தற்கொலை முயற்சியில் பெரும்பாலும் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக ஈடுபடுகிறார்கள்.
பொதுவாக திருமணமாகாதவர்கள், மனைவி அல்லது கணவனை இழந்தவர்கள், விவாகரத்து செய்து கொள்பவர்கள், வாழ்க்கையில் மன அழுத்தத்தில் விரக்தி அடைந்து யாரிடமும் பேச பிடிக்காமல் குழப்பத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
ஒருவரது குடும்பத்தில் யாராவது தற்கொலை செய்து இருந்தால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
பெற்றோர் எடுக்கும் சில தவறான முடிவுகள் அவர்கள் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ள தூண்டுகிறது.
பெற்றோர் குழந்தைகளை திட்டுவது, திருமண வாழ்க்கையில் பிரச்சினை, வரதட்சணை பிரச்சினை, கள்ளத்தொடர்பு, உடல் நோய் உபாதை, குடும்ப பிரச்சினை, மன அழுத்தம் போன்றவை தற்கொலைக்கான காரணங்களாக இருக்கின்றன. இதில் பெற்றோர் திட்டுவதால் தற்கொலை செய்வது முதல் காரணமாக உள்ளது. மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்வது அடுத்த இடத்தில் உள்ளது.
தற்கொலையை 2 விதமாக பார்க்கலாம். வாழ்க்கையில் தோல்வியை ஏற்ககூடிய மன நிலை இல்லாததாலும், இதற்கு தீர்வே கிடையாது என்று நினைத்து மனவிரக்தியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்கள் வீட்டில் தனிமையாக இருப்பார்கள். சரிவர சாப்பிடமாட்டார்கள். தங்களுக்கு பிடித்தமான பொருட்களை பிறருக்கு அன்பளிப்பாக வழங்குவார்கள். மனதுக்கு வேதனையாக இருக்கிறது. நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கவேண்டும் என்ற தனது மனதின் கூக்குரலை வெளிப்படுத்துவர். இதை குடும்பத்தார் கவனிப்பதில்லை.
திடீரென்று இவர்கள் தூக்குப்போட்டோ, விஷம் குடித்தோ தற்கொலை செய்து கொள்வார்கள். இதுமாதிரியான சூழ்நிலையில் பெற்றோர் ஜாக்கிரதையாக இருந்து அவர்களை கண்காணிக்க வேண்டும். இவர்கள் திட்டமிட்டு தற்கொலை செய்து கொள்பவர்கள். இன்னொரு வகையினர் திட்டமிடாமல் ரெயில்முன் பாய்ந்தோ, கிணற்றில் குதித்தோ உயிரை மாய்த்துக் கொள்வார்கள். மன அழுத்தம் போன்று மன சிதைவு நோய் உள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் காதில் யாரோ ஒருவர் நீ உயிரோடு இருக்காதே; செத்து போயிடு என்று கூறுவதை போல உணருகிறார்கள். எதிலும் தாமதிக்காமல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறவர்கள்.
திட்டமிட்டு தற்கொலை செய்து கொள்பவர்கள் முன்னதாகவே ஒரு நோட்டில் கொடுக்கல் - வாங்கல் விவரத்தை எழுதி வைப்பார்கள். சிலர் உயில் கூட எழுதி வைத்து இருப்பார்கள்.
இந்தியாவில் 2016-ம் வருடம் 36.6 சதவீதம் பெண்களும், 24.3 சதவீதம் ஆண்களும் தற்கொலை செய்து கொண்டனர். இது வருடத்துக்கு வருடம் அதிகமாகி வருகிறது. தமிழ்நாட்டில் 2016-ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் ஆண் - பெண் இருபாலரில் 25 சதவீதம் பேர் தற்கொலை செய்து இருக்கிறார்கள்.
ஏமாற்றத்தை தாங்கி கொள்ள முடியாமல் அவமானமாக நினைக்கிறார்கள். தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டால் நாம் தப்பு பண்ணிவிட்டோம் என்று அப்பா, அம்மா நினைப்பார்களோ என்று நினைக்கிறார்கள். பெற்றோரும் பக்கத்து வீட்டு பையன் அதிக மதிப்பெண் பெற்று தங்கள் குழந்தை குறைவான மதிப்பெண் வாங்கினால் அதை கூறி திட்டுவார்கள். இதனால் குழந்தைகள் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.
தந்தை டாக்டராக இருந்தால் மகனையும் டாக்டராக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். மகனுக்கு அதில் உடன்பாடு இல்லையென்றால் பெற்றோர் அவர் விருப்பத்தில் விட்டுவிட வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் அவர் டாக்டர் தொழிலை தாண்டியும் பரிமளிக்க முடியும். இந்த எண்ணம் பெற்றோருக்கும் இல்லை, பிள்ளைக்கும் இல்லை. பிரச்சினையை எதிர்கொள்ளும் பக்குவம் யாருக்கும் இல்லை.
ஒரு தற்கொலை முயற்சி நடந்தால் அதை மறக்காமல் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். தற்கொலை முயற்சி மேற்கொள்பவர்கள் அடுத்து வரும் பின்விளைவுகளையும் பார்க்கவேண்டும். தற்கொலை முயற்சி மேற்கொண்டவர்களுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். விளையாட்டுத்தனமாக கூட தற்கொலை முடிவில் ஈடுபடக்கூடாது. ஒருவர் விளையாட்டாக செல்போனில் தற்கொலையை படம் பிடிக்க நினைத்து, கழுத்தில் கயிறு இறுகி இறந்துபோன சம்பவம் சமீபத்தில் நடந்து உள்ளது.
ஒருமுறை தற்கொலை செய்து அதில் இருந்து மீண்டவர்கள் மீண்டும் தற்கொலை செய்வதற்கான சாத்தியங்கள் அதிகம் உண்டு என்பதால் அவரை உளவியல் வல்லுனரிடம் ஆற்றுப்படுத்துதலுக்கும், வழிகாட்டுதலுக்கும் அழைத்துச்செல்வது சாலச்சிறந்தது.
பெற்றோர், தங்களது விருப்பங்களை ஏற்றுக்கொள்வதற்காக அச்சுறுத்தலாக விளையாட்டாக செய்யும் முயற்சி பின்னர் விபரீதமாக முடியும் என்பதில் ஐயம் இல்லை.
மன அழுத்தம் உள்ளவர்கள் வாழ்க்கையை வெறுத்து விரக்தியான நிலையில் தற்கொலை ஒன்றே தங்கள் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க ஒரே வழி என கையாண்டு வருகிறார்கள். ஆகையால் நம்மில் யாரேனும் மன அழுத்தம் இருப்பதை உணர்ந்தால் அல்லது மன அழுத்தம் உள்ளவரை சந்தித்தால் அவரை மன நிலை மருத்துவரிடமோ அல்லது உளவியல் வல்லுனரிடமோ அழைத்துச் செல்வது நம் தலையாயக் கடமையாகும்.
இன்றைய நாகரிக காலத்தில் திருமணம் இருமனம் இணையும் ஒரு விழாவாக அல்லாமல் யார் பெரியவர் என்று போட்டியாக இல்லற வாழ்க்கை அமைந்து விடுகிறது. இதனால்தான் தனது மதிப்பை இழந்து விட்டதாக எண்ணி தற்கொலைக்கு முயற்சிப்பவர்களும் உண்டு.
இருவரும் மனம் விட்டு பேசி பழகினால் பிரச்சினைகளை சரிவர கையாள முடியும். பின்னர் அவர்கள் திருமண வாழ்க்கை பூத்துக் குலுங்கும் சோலையாக மாறும்.
மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவில் சேர முடியவில்லையென்றால் வாழ்வதில் அர்த்தம் இல்லை என்ற முடிவுக்கு வராமல் எந்தப்பிரிவாக இருந்தாலும், எந்த துறையாக இருந்தாலும் அதில் தங்கள் திறமையை வெளிக்காட்ட முயற்சி செய்வது அவசியம். அதற்கு அவர்கள் மீது அவர்களுக்கும் நம்பிக்கை இருக்கவேண்டும். தோல்வி என்பது தவறவிட்ட வெந்நி அல்ல. சற்றே தள்ளிபோன வெற்றி. ஆகையால் ராபர்ட் புரூஷும், கஜினி முகமதும் முயன்றதுபோல் நாம் ஒவ்வொருவரும் முயன்றால் தோல்வி என்பதே இல்லாமல் வெற்றி நடைபோடமுடியும்.
ரோஜா செடியில் முள் இருப்பதை பார்க்காமல் பூத்துக்குலுங்கும் அழகிய பூவை பார்க்க கற்றுக்கொண்டால் பிரச்சினை என்னும் செடியில் தீர்வு என்ற மலர் இருப்பதை காணலாம். இருந்து சாதிக்க முடியாததை இறந்து சாதிக்க முடியுமா?
ஆகையால் பிரச்சினைகளுக்கு ஒதுங்காமல் மன தைரியத்தோடு எதிர்த்து போராடுங்கள். பிரச்சினைகள் தூள் தூளாகிவிடும். நாம் ஜெயிப்பது திண்ணம்.