விவாகரத்தால் தனிமைபடுத்தப்படும் குழந்தைகள்
26 சித்திரை 2019 வெள்ளி 09:47 | பார்வைகள் : 3374
பெற்றோர்க்கு இடையிலான விவாகரத்து பிரச்சனையால் குழந்தைகள் மனதளவிலும், உடலளவிலும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் பெற்றோர் தங்களுக்குள்ளான சண்டையால் குழந்தையிடம் பரிவாக பேசாமல், கவனிக்காமல், அவர்களின் தேவைகளை பார்த்துக்கொள்ளாமல் இருப்பதால் குழந்தைகள் தாம் தனிமைபடுத்தப்பட்டு இருப்பதுபோல உணர்கிறார்கள்.
குழந்தைப் பருவ ஆரோக்கிய வளர்ச்சிக்கு பெற்றோரின் அரவணைப்பும், அன்பும் சரியாக கிடைக்காமல் தன்னை மாற்றுத்திறனாளிக்கு இணையாக நினைப்பதுடன், அச்சூழல் குழந்தைகளை வன்முறை குணம் கொண்டவர்களாகவும் மாற்றிவிடுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் தன் அம்மா-அப்பா இருவரிடமும் இருந்து அன்பான அரவணைப்பும், அச்சமில்லாத வளர்ப்பு முறையும் கட்டாயம் கிடைக்க வேண்டும்.
எல்லா பிரச்னைகளும் மனம் விட்டுப் பேசித் தீர்க்கக் கூடியவையே. கணவன் - மனைவிக்கு இடையேயும் சண்டை வருவது இயல்புதான். அதனை ஆரம்பக் கட்டத்திலேயே குழந்தைகள் பார்வையில் இல்லாத வகையில், தங்களுக்குள் பேசித் தீர்த்து வன்மத்தை வளர்க்காமல் அன்பைப் பரிமாறிக் கொண்டு வாழ்கையை இன்பமாகக் கழிக்கலாம். குறிப்பாக ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ரோல்மாடல் தன் பெற்றோர்தான்.
அதன்படி தன் பெற்றோரைப் போலவே என் வாழ்க்கையும் மகிழ்ச்சியும், முடிந்தவரையில் பிறருக்குப் பயன்தரும் வகையிலும் அமைய வேண்டும் என ஒரு குழந்தை நினைக்க வேண்டும். மாறாக தன் பெற்றோரின் சண்டை, வன்மத்தைப் பார்த்து வளர்ந்து, அதுப்படியே தன் வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளக் கூடாது.
குழந்தைகள் மனித வளத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. அவர்கள் இருக்கும் இடத்தை மிகவும் மகிழ்ச்சியானதாக மாற்றிவிடுவார்கள். அந்த மகிழ்ச்சி பெற்றோர்கள், தாத்தா-பாட்டி, உறவினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், சமூகத்தினர் என எல்லோர் வாயிலாகவும் கிடைக்க வேண்டும். அதில் முதலானவர்களும் முடிவானவர்களும் பெற்றோரே.
உங்கள் குழந்தை பலர் போற்றும் வண்ணம் இன்பமாய் வாழவேண்டுமா அல்லது தங்களால் வாழ்க்கையையே இழக்க வேண்டுமா என்பது பெற்றோராகிய நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.