வாழ்விற்கு சுவை சேர்ப்பவை சிக்கல்களே...
18 சித்திரை 2019 வியாழன் 18:15 | பார்வைகள் : 3301
ஒரு முனிவரைப் பார்க்க ஒரு பெண் அழுதுகொண்டே வந்தார். முனிவர் அந்த பெண்ணின் அழுகைக்கான காரணத்தைக் கேட்டார். அதற்கு அந்த பெண் “சுவாமி! எனது வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள், அதிக துன்பங்கள். அதனால் வாழ்க்கை கஷ்டமாக உள்ளது. எனவே நான் மகிழ்ச்சியாக வாழ வழி கூறுங்கள்” என்றார். அதற்கு முனிவர், ஆகட்டும்! அதற்கு ஒரே ஒரு நிபந்தனை என்றார் முனிவர். பெண்ணும் சரி என்று தலையசைத்து என்ன நிபந்தனை? என்றார். ஒரு காகிதத்தில் உங்களுடைய அனைத்து பிரச்சினைகளையும் எழுதி, அதை இந்த பானைக்குள் போடுங்கள்.
பிறகு, இந்தப் பானைக்குள் இருக்கிற ஏதாவது ஒரு காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களைப்போன்றவர்கள் எழுதியிருக்கும் பிரச்சினைகள் இருக்கும். அதை நீங்கள் எடுத்து கொள்ளுங்கள். அந்த பிரச்சினைகளை எளிதில் தீர்த்து நீங்கள் மகிழ்ச்சியாக வாழுங்கள் என்றார். உடனே, அந்த பெண் தனது பிரச்சினைகளை எழுதி அந்த பானைக்குள் போட்டுவிட்டு உள்ளே இருந்து மற்றொரு காகிதத்தை எடுத்தார். அதில் பிரச்சினைகள் மிக அதிகமாக இருந்தன. இது வேண்டாமென்று மற்றொரு காகிதத்தை எடுத்தார்.
அதிலிருந்து பிரச்சினைகள் இவரால் தீர்க்க முடியாததாக இருந்தது. இப்படி தொடர்ந்து அவர் எடுத்துக்கொண்டே வந்தார். ஒவ்வொரு காகிதத்தில் இருந்த பிரச்சினைகளெல்லாம், இவரது பிரச்சினைகளை விட பெரியதாகவும் சிக்கலாகவும் இருந்தது. கடைசியில் மற்றவர்களின் பிரச்சினைகளைவிட தனது பிரச்சினைகளைத் தீர்ப்பதே மேல் என்று நம்பினார். முனிவரிடம் சுவாமி! நான் எனது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொள்கிறேன் என்று சொல்லி கிளம்பினார்.
பிரச்சினைகளே இல்லாத வாழ்க்கை, இந்த உலகில் இல்லை. பிரச்சினைகள் தான் வாழ்வின் சுவாரசியம். ஒரு மனிதனின் சரியான திறமை பிரச்சினைகளை எதிர்கொள்வதில் இருக்கிறது. உண்மையான மகிழ்ச்சி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில்தான் உள்ளது.
ஒரு சிறு பிரச்சினையை கூட, கண்ணுக்கு அருகே வைத்துப் பார்த்தால் அது பெரிதாகத் தெரியும். பிரச்சினைகளை சற்று தூரத்தில் வைத்துப் பார்க்கும்போதுதான் தெளிவு உண்டாகும். பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாமல் தங்களை மாய்த்துக்கொள்வதும், குடும்பத்தோடு தற்கொலை செய்வதும், வாழ்க்கை முழுவதும் வருந்திக்கொண்டே இருப்பதும் என வாழ்க்கையை பலரும் பாழாக்குவது கண்கூடு. குழந்தைகள் படிக்க ஆரம்பிக்கும்போது அவர்களுடைய மொழிப்பாடம் எளிதாக இருக்கும். தீர்வு காணவேண்டிய கணித பாடங்கள் சற்று கடினமாக இருக்கும். கணக்கு கடினம் என்பதற்காக படிக்காமல் விடுவது எத்தகைய அறிவின்மையை தருமோ, அதுபோல பிரச்சினைகளை கையாளவேண்டும் என்பதற்காக வாழ்க்கையை நிர்மூலமாக்கிக் கொள்வதும் முட்டாள்தனமே.
“மான அவமானங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், நிலைகுலைந்து போகச்செய்யும் காலச்சூழ்நிலைகள், நம்பிக்கை துரோகங்கள், செய்யும் காரியத்தில் நஷ்டங்கள், வஞ்சக சூழ்ச்சிகள், எதிர்ப்புகள், உறவினர் நண்பர்களின் சூதுகள், அன்பின் இழப்புகள் இவையெல்லாம் மானிட வாழ்க்கையில் அன்றாட நிகழ்வுகள்” என்கிறது பகவத்கீதை. இதுபோன்ற போராட்டங்களையெல்லாம் மன உறுதியுடனும், துணிச்சலுடனும் எதிர்கொள்கின்ற மானிடன் எவனோ, அவனே மிகச்சிறந்த பராக்கிரமம் பொருந்திய வெற்றியாளனாக பரிணமிக்கிறான் என்று அதற்கு தீர்வும் கீதை தருகிறது.
முதலில் பிரச்சினைகளை அடையாளம் காணவேண்டும். அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் அதைப் பகுத்தாய்ந்து சிறுசிறு கூறுகளாக்க வேண்டும். ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு என்னவாக இருக்கும் என்பதை ஆராய்ந்து, அதற்கு சரியான இடம், காலம், ஆள் பார்த்து கொடுத்துவிட்டால், பிரச்சினைகள் எவரிடமும் துவண்டு போகும். எந்தச் சூழ்நிலையிலும் தைரியத்தோடும், நம்பிக்கையோடும் பிரச்சினைகளை அணுகுபவர்கள் மனித வாழ்க்கையில் அழகானவர்கள், அற்புதமானவர்கள்.
நாளிதழ்களில் வருகின்ற புதிர் போட்டிகள், எளிய புதிர் கணக்குகள், குறுக்கெழுத்துப் போட்டிகள், புதிர் விளையாட்டுகள் இவை அனைத்தும் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு பிரச்சினைகளை தீர்வுகாணும் யுக்தியை கற்றுத்தரும். அந்த புதிர் விளையாட்டுகளை யார் ஒருவர் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறாரோ, அந்த புதிர்களுக்கு விடை காண்கிறாரோ அவர் வெற்றியாளராக பரிணமிக்கின்றார். சிறிய புதிர்களை கூட கண்டுபிடிப்பதற்கு சலிப்பு கொள்பவர்கள்; அல்லது புதிர் என்றதுமே பயந்து ஓடுபவர்கள் எல்லோரும் பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர்.
தீர்க்கப்படாத தீர்வுகளே இந்த உலகில் இல்லை. முடிவுகள் தெரியாத பிரச்சினைகள் இந்த உலகில் இல்லை. பிரச்சினைகளைக் கையாளுகின்ற பொழுது, அனைத்து பிரச்சினைக்கும் நடந்த பிரச்சினை இந்த உலகத்தில் உள்ள எல்லோருக்கும் இயல்பானது என்ற மனநிலை கொண்டிருந்தால் பிரச்சினைகள் விலகிப்போகும். நமக்கு மட்டும் தான் பிரச்சினைகள் வருகிறது என்று நினைத்தால், பிரச்சினைகள் நம்மை துரத்த ஆரம்பிக்கும்.
ஒரு திரைப்படத்தின் முடிவினை முன்னரே தெரிந்திருந்தால் அத்தகைய படத்தை பார்க்க யாரும் விரும்புவதில்லை, ஆனால், எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் சிந்துபாத் கதைகள் அனைவருக்கும் பிடித்துப்போகும். காரணம், அக்கதையில் பல தீர்வுகளைக்காண கதாநாயகன் முற்படுவதால்தான். தனக்குள்ள வாழ்க்கையில், சின்னச் சின்ன முடிச்சுகளோடு சில பிரச்சினைகள் இருக்கவேண்டும். அந்த முடிச்சுகளை அவிழ்க்கத் தெரிந்த மனிதனால்தான் நம்பிக்கையோடு பெரிய சவால்களை ஏற்றுக்கொள்ள முடியும்.
பிரச்சினைகளைச் சமாளித்தால் மனிதன்!! பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டால் தீரன்!!