Paristamil Navigation Paristamil advert login

தொலைந்து போன உறவுகளும், குலைந்து போன மன நிம்மதியும்...

தொலைந்து போன உறவுகளும், குலைந்து போன மன நிம்மதியும்...

6 சித்திரை 2019 சனி 03:17 | பார்வைகள் : 2941


 கற்காலம் ஆயினும் கலிகாலம் ஆயினும் ஒரு தனி மனிதனால், உறவுகள் இல்லாமல், மன நிம்மதியோடும், மன மகிழ்ச்சியோடும் வாழ முடியாது என்பது முற்றிலும் உண்மையான விஷயம். ஒரு தனி குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வு நடக்குமெனில் தங்களுடைய உறவினரிடையே பகிர்ந்து கொள்ளும் போது அந்த மகிழ்ச்சியானது பல மடங்கு பெருகி அனைவருக்கும் ஆத்மார்த்தமான உணர்வை நிச்சயம் அளிக்கும். அதுவே நமக்கு ஏதேனும் ஒரு வகையில் துன்பம் நேர்ந்தால் நம்மை தேற்றவும், நமக்காக முன் வந்து நிற்கவும், நமக்காக ஆறுதல் அளிக்கவும் நமது உற்றார் உறவினர் முன் வருகையில், மனதிற்கு யானை பலம் கிடைத்தது போன்ற உணர்வு ஏற்படும்.

 
மேற்கூறிய அனைத்தும் இப்போதைய காலகட்டத்தில் முக்கால்வாசி குடும்பங்களில் காண முடியாது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமாக கூட்டுக் குடும்பம் என்ற கலாசாரமே தொலைந்து அனைவரும் தனித்தனி குடும்பங்களாக வசிக்கத் தொடங்கிவிட்டோம். கால சூழ் நிலைகளுக்கு ஏற்பவும் வேலைக்கு தகுந்தாற் போலவும் தனி குடும்பங்களாக மாறிப்போனதில் தவறு எதுவும் இல்லை. ஆனால் உறவு முறைகளையும் உறவினர்களையும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டே வருகிறோம்.
 
 
எதற்கெடுத்தாலும் தற்போதைய வேகமான உலகத்தில் எங்கே நேரம் இருக்கிறது என்று குறைபட்டுக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும். என்னதான் உலகம் பல்வேறு பரிமாணங்களில் வளர்ந்தாலும் தனக்கான தனித்துவத்தை காட்டுவது நம் பாரம்பரியத்தால் மட்டுமே முடியும். ஒரு குடும்பத்தில் எடுத்துக்கொண்டால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் கடை பிடித்து வரும் பழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். 
 
மேலும் குழந்தைகளை சிறு வயதிலிருந்தே அவற்றை கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும். ஆனால் இப்போதைய பெற்றோர்களில் நிறைய பேர் இச்செயலை செய்யத் தவறுவதோடு மட்டுமல்லாமல், இவற்றையெல்லாம் நீங்கள் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று வேறு கூறிக் கொண்டிருக்கின்றனர். நிறைய குழந்தைகளுக்கு உறவு முறைகளே தெரிவதில்லை.
 
இந்த செயலால் பெரிதும் வீட்டில் உள்ள குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். வேகமான உலகத்தில் பள்ளியையும், வீட்டையும் தவிர இவர்களுக்கு வேறு எதுவும் தெரிவதில்லை. முன்பெல்லாம் ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர் அனைவரும் ஆளுக்கு ஒருவராக அக்குழந்தையை தங்கள் குழந்தையாக எண்ணி வளர்ப்பார்கள். 
 
அக்குழந்தை வளரத் தொடங்கிய உடன் சக குழந்தைகளோடு ஓடியாடி விளையாடி குழந்தைப் பருவத்தை மிக அருமையாக அனுபவிக்கும். ஆனால் தற்போது அடுக்குமாடி குடியிருப்பில் ஏதோ எந்திர பொம்மைகளைப் போல குழந்தைகள் அடைந்து கிடக்கின்றனர். நகரத்தில் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் மாதம் ஒருமுறையாவது தங்களின் சொந்த ஊர்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும். அப்படிச் செய்யும்போது குழந்தைகளால் உறவு முறைகளைப் பற்றி அறிந்துகொள்ள முடியும். அந்த இளம் வயதில் அவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தம் உருவாகாமல் தவிர்க்கப்படும்.
 
ஒரு வீட்டில் திருமணம் நடக்கப் போகிறது என்றால் உறவினர்களால் ஒரு வாரம் முன்னதாகவே வீடே நிறைந்து காணப்பட்ட காலமானது மாறி, ஒரு நாளுக்கு முன் கூட வீட்டில் யாரையும் பார்க்க முடிவதில்லை. கல்யாண பத்திரிகைகளை தங்களால் முடியாத பட்சத்தில் தான் தபாலில் அனுப்பிக்கொண்டிருந்தனர்.
 
ஆனால் இப்போதோ தபாலும் கூட நின்று வாட்ஸ்-ஆப் பத்திரிகையாக மாறிப்போய்விட்டது. என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், நமது நண்பர்களின் பத்திரிகையையோ, உறவினரின் பத்திரிகையையோ, குடும்பத்துடன் பிரித்துப் படிக்கும்போது ஒருவித மனமகிழ்ச்சியை, டிஜிட்டல் பரிமாற்றம் செய்யப்பட்ட வாட்ஸ்-ஆப் பத்திரிகையால் எக்காலத்திலும் தர முடியாது. உலகத்துக்கு ஏற்ப அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டுமே தவிர தனது அடையாளமான பாரம்பரியத்தை ஒருபோதும் விட்டுத்தரக்கூடாது.
 
சதாகாலம் ஸ்மார்ட்போனில் கேம் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை வாரம் ஒருமுறை தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை ஆகியோரிடத்தில் பேசச் செய்ய வேண்டும். கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகும் சூழ்நிலையில் குழந்தைகளை சரியான முறையில் பராமரிக்க அனேகம் பேர் தவறுகின்றனர். 
 
நம்முடைய குழந்தைகளுக்கு நிறைய பணம் சம்பாதித்து வைக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியத்துடன் வளர்க்கிறோமா என்பதை மனதில் கொள்வதில்லை. இந்த சூழலில் வளரும் குழந்தைகள் சிறுவயது முதலே அதீத மன அழுத்தத்துடன் வளரத் தொடங்குகின்றனர். சிறுவயதில் பெற்றோர்கள் இழைக்கும் இந்த தவறினால் குழந்தைகள் வளர்ந்த பின் ஒரு சிறிய பிரச்சினைக்குக்கூட மனம் உடைந்து தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்.
 
ஞாயிற்றுக்கிழமைகளில் தியேட்டர்களுக்கும், ஷாப்பிங் மால்களுக்கும் குழந்தைகளை அழைத்துச் செல்வதை வெகுவாக குறைத்து அவரவர் வழிபடும் கோவில்களுக்கு அழைத்துச் செல்லத் தொடங்க வேண்டும். இது நிச்சயம் குழந்தைகளுக்கு மன ஒருமைப்பாட்டை ஏற்படுத்த வழிவகுக்கும். முன்பெல்லாம் மாதத்தில் ஒருமுறை நெருங்கிய உறவினர்களோடு ஒன்றாக புறப்பட்டு குலதெய்வ வழிபாடு செய்து ஒன்றுகூடி கோவில்களில் சமைத்து மகிழ்ந்தனர். அந்த நிலைமையானது 80 சதவீத குடும்பங்களில் காணாமல் போய்விட்டது.
 
பண்டிகை என்ற ஒரு தருணம் வந்தாலே அனைவரது வீட்டிலும் சத்தான இனிப்புகளையும் பலகாரங்களையும் செய்து நெருங்கிய உறவினர்களுக்கு பகிர்ந்து மகிழ்ந்தனர் நம் முன்னோர்கள். ஆனால் இப்போதோ அவரவர் வீட்டிற்கு தேவையான பலகாரங்களை கூட செய்வதில்லை. உறவுகளின் எடையை அவர்கள் வைத்திருக்கும் பணத்தை பொருத்து நிர்ணயிக்க தொடங்கிவிட்டது இக்காலம். நாம் நாகரிகம் என்ற பெயரில் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கு தவறி ஆரோக்கியமான வாழ்விற்கு பெரிய அளவில் பாதிப்பை பெருக்கிக்கொண்டே போகிறோம். இதை உணர்ந்து பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு காலம் காலமாக நம் முன்னோர்கள் காப்பாற்றிய பாரம்பரியத்தை நம் சந்ததியினருக்கு கொண்டு செல்வோம்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்