Paristamil Navigation Paristamil advert login

தள்ளு வண்டி காவியம்

தள்ளு வண்டி காவியம்

23 மாசி 2020 ஞாயிறு 12:10 | பார்வைகள் : 10215


தள்ளுவண்டி

தள்ளும் பெண்ணின்
பித்த வெடிப்பு
கால்பட்டு
கிழக்கு சிவக்கிறது.
 
விசை கொண்டு
தள்ளு வண்டியை
நகர்த்தும் வேகத்தில்
சூரியன் நகர்கிறது.
 
வண்டியை
ஏற்றத்தில்
உந்தித் தள்ளி,
 
இறக்கத்தில்
இழுத்துப் பிடித்து,
 
பள்ளிப் பிள்ளைகள்
சைக்கிள்கள்
பைக்குகளின் சீண்டல்கள்
படாமல்… விலகி
பக்குவமாய்
கட்டுக்குள் நிறுத்தும்
பெண்ணின்
தொண்டைக்குழி தசையில்
வியர்வை உருளும்.
 
தள்ளுவண்டி
நிறுத்துமிடத்தை
குனிந்து நிமிர்ந்து கூட்ட
சில
பார்வை குப்பைகள்
படுத்தும்.
 
 
உடலையே
சமைத்துப்போடுவது போல் களமாட வேண்டும்
பார்சல் பேப்பர்
பார்சல் கவர்
குடம்
தண்ணீர் கேன்.. என
வந்து சேரும்
இருசக்கர வாகனத்தில்
அவள்
கணவனைத் தவிர
அனைத்தும்
வசதியாய் அமர்ந்திருக்கும்.
 
எரிக்கும் சிகரெட்டெ
எரிபொருள்.
சேர்ந்து இருமும்
சைக்கிளின் மேல் மாமனார்.
அந்த
தள்ளுவண்டி வியாபாரத்தை
தாங்கிப் பிடிக்கும்
துருபிடித்த சக்கரத்தில்
அவர்
விலா எலும்பும் அடக்கம்.
 
கை கழுவி
உறக்கம் தொலைத்த
விழிகளால் தீ மூட்டி
ஓங்கி… தோசைக்கல்லில்
உயிர் தண்ணீர் தெளிக்க
அங்கே
ஒட்டு மொத்த குடும்பத்தின்
ஆவி
பறக்கும்.
 
வாழ்வின்
சுமை கொள்ளா
வாகனமாய்
தள்ளு வண்டி
காட்சி தரும்.
 
பள்ளிக்குப் போனாளோ…
பத்திரமாய் வருவாளோ..
பிள்ளையை நினைக்கையில்
மணக்கும் இட்டிலியோடு
அவள் மனதும் வேகும்.
அடுத்த ஈடு ஊத்துவதில்
தோசையை புரட்டுவதில்
சட்டினி.. சாம்பார் – என
குரல்கள் நெருக்குவதில்
நினைவுகள் தொலையும்
தன் பசி மறக்கும்.
 
 
குடும்பமே பணியாற்றும் தள்ளு வண்டிக் கடை
குறிப்பிட்ட நேரத்திற்குள்
மொத்த உடலின் சத்தும்
பிழியப்படும்.
தசைகளின்
அசைவுகளில்
ஆட்டம் கண்டு
தள்ளுவண்டி
உயிர் உறையும்.
 
உடலையே
சமைத்துப்போடுவது போல்
களமாட வேண்டும்.
 
பசியின் வேகத்திற்கு
பரிமாற வேண்டும்
மனித எந்திரமாய்
உருமாற வேண்டும்.
 
நாலு இட்லி.. ரெண்டுவடை
பொங்கல் ஒண்ணு…
பூரி ஒண்ணு
ரெண்டு கல்தோசை
ஒரு வடகறி….
வித விதமாய் வரும்
கட்டளைக்கு
காது முளைக்க வேண்டும்
விடுபடாமல்
வேகமாய் பார்சல் கட்ட
விரல்களின் நகக் கண்
விழிக்க வேண்டும்.
 
கழன்டு விடும்
மணிக் கட்டு.
கூட்டத்தின் கோபத்திற்கு
வாட்டம் காட்டாமல்
குவிந்து விரியும்
நெற்றிப் பொட்டு.
 
நிலைகுத்தி
நின்ற இடத்தில்
உடல் வளைந்து
பொருள் எடுக்க
வலி பிடுங்கும்
தொடை நரம்பு.
 
கைவிடப்பட்ட
முதியவர்கள்
பசித்ததை
சொல்லத் தெரியாமல்
பார்த்து நிற்கும்
மனநோயாளிகள்
இவர்க்கும்
சுரக்கும்
தள்ளுவண்டிக் கடையின்
பாசப் பரிமாற்றம்.
பாக்கி வைக்கும்
பழக்கமில்லா முகங்களுக்கும்
தள்ளுவண்டி
இடம் கொடுக்கும்.
 
முதுமையில் வளைந்த
தந்தையின் கை நரம்புகள்
சட்னி, சாம்பார்
பொட்டலம் கட்ட தடுமாறும்.
 
பார்த்து.. பார்த்து.. என
பார்வையில்
முடிச்சு போட்ட படியே
பையன்,
 
பல விதமாய்
உண்டவர் கணக்கை
ஒன்று விடாமல்
ஒரு விதமாய்
கூட்டிச் சொல்லும் அழகு
வலியின் பிரசவம்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்