Paristamil Navigation Paristamil advert login

சில நிழல்கள் அசைவதில்லை !

சில நிழல்கள் அசைவதில்லை !

28 மார்கழி 2019 சனி 13:03 | பார்வைகள் : 12582


நடு இரவு அது...!
திடீரென யாரோ
தூக்கியடித்ததுபோல
விழித்துக்கொண்டேன் நான்...!
 
என் எதிரில்,
வெள்ளை சுவரில்,
என்னையே கவனித்தபடி
ஒரு நிழல்...!
 
அந்த நிமிடம் பயந்தாலும்,
அடுத்த நிமிடத்தில் - என்னை
ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்...!
அது என் நிழலென...
 
கைகளை அசைத்தேன்...!
கழுத்தை திருப்பினேன்...!
ஆனாலும் நிழலில் ஏதும் மாற்றமில்லை...!
 
படபடத்தது மனது...!
 
நிழலின் உருவத்தை உற்று நோக்கினேன்...!
 
ஆம்....
அது அவள்தான்...!
 
நீள்வடிவ முகம்...!
நீண்ட தேகம்...!!
சிறு இடை...!
சின்னதாய் முடியும் பாதங்கள்...!
 
பார்த்து பலவருடமாகியும் - அவள்
உருவம் மட்டும்
உள்ளுக்குள்ளே என்னை உருக்கியது...!
 
காதலித்த என்னை
கண்ணீர்சிந்த வைத்து,
இன்னொருவனை அவள்
கைப்பிடித்தது - என்
நினைவுகளில் வந்துபோனது...!
 
போர்வைக்கடியில்
புதைந்துகொண்டேன் நான்...!
 
நினைவுகளும்,
கனவுகளுமாய்
கண்மூடி தூங்கிவிட்டேன் நான்...!
 
காலை கண்விழித்ததும்
எதிரில் சுவரில் பார்த்தேன்...!
 
அசையாமல் நின்றிருந்த நிழல்,
அங்கு இல்லை...!
 
அன்றிலிருந்து இதுவரை
அந்த நிழலை எந்த இரவிலும்
அங்கே நான் பார்க்கவில்லை...!
 
ஆனால் அன்றிலிருந்து,
எனக்கே தெரியாமல்
எல்லா இரவுகளிலும் - அவள்
எனக்குள் அசைந்துகொண்டிருந்தாள்...!
நினைவுகளாக...

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்