Paristamil Navigation Paristamil advert login

நான் நனைந்த மழை...!

நான் நனைந்த மழை...!

18 தை 2014 சனி 13:01 | பார்வைகள் : 10269


கார்மேகம் கழற்றி
எறிந்துகொண்டிருந்தன
தன் உடைகளை
மண்ணில் மழையாய்...!
 
குடையின்றி ஒதுங்கியதால்
உடையும் நனைந்துவிட்டன இலையாய்...!
நள்ளிரவு என்பதால்
அக்கம்பக்கம் யாருமில்லை
ஒரு அநாதை நாயைத்தவிர...!
 
மனதோடு ஒரு மாற்றம்
நடுங்கிய விரல்நடுவே
சிகரெட் உட்கார அடம்பிடித்தது..
மூட்டிய தீயில் மூச்சும் இனித்தது...!
 
பசித்த மண்
மழைச்சோறு உண்ட களைப்பில்
மண்வாசனை தந்துகொண்டிருந்தது...!
மிஞ்சிய மழையை தேங்கியநீராய்
சேமித்து வைத்து சேறு தயாரித்தது...!
 
குருத்தோலை தொட்டமழை
தென்னம் கருவோடு கொஞ்சிக்குலாவி
பழுத்தோலை வழியாக -
என் தோள்வந்து தொட்டபோது
பிஞ்சிக் கரமொன்று
எனையுரசும் சுகம்கண்டேன்...!
 
அமான்ய இரவு
அலங்கரிக்கப்பட்ட நிலவு
எனை எட்டிப்பார்த்து
ஏதோ சொல்ல முயல்கிறது
மின்னல் வந்து செல்கிறது
நிலா மறைகின்றது....!
 
நிறுத்தப்பட்டது மழை
விலக்கப்பட்டது திரை
மீண்டும் நிலா உலா..!
 
சிறிது நேர ஒய்வு
சில ஒலிகள் ஆரம்பம்..!
இடிமுழக்கம் தவளைப்பாட்டு
கச்சேரி ஆரம்பம்...!
 
மழை போழியுதென்று
இழுத்திப்போர்த்திப்
படுத்துகொண்டால்
இயற்கைதரும் சுகத்தையெல்லாம்
 இழந்து நீயும் வாழுகின்றாய்...!
 
இயற்கை எனை வியக்கவைத்தது
மீண்டும் பிறக்கவைத்தது
மீண்டும் ரசிக்கப்போகின்றேன்
நீங்களும் வாருங்கள்...!

- நா.நிரோஷ்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்