வித்தியாச மனிதர்கள்..!!
3 தை 2014 வெள்ளி 17:43 | பார்வைகள் : 10246
போராட்ட மறவர்கள் உணர்த்திய
சுதந்திர தாகத்தை அறிந்தும்
சமூகத்தின் மத்தியில் வாழும்
வித்தியாச மனிதர்கள்
இவர்களின் உறக்கம் கலைத்து
மயக்கம் கலைத்தெழுப்பி வந்து
தமிழீழ சுதந்திரத்தைத் தான்
உணரவைக்க முடியுமா?
சுயசிந்தனை உள்ளவர்களால்
இந்த மனிதர்களின் வரலாற்றை
மறுபார்வை செய்தால்
இவர்களுக்கு ஏன்? இந்த
எதிர்ப்பரிமாணம் என்ற கேள்விகள்
எழத்தான் செய்யும்
இவர்கள்
முட்டையில் வடதுருவத்தையும்
தென்துருவத்தையும் தேடும்
வித்தியாச மனிதர்களா?
காலம் காலமாக
இவர்கள் மேனியில் படிந்திருக்கும்
அழுக்குப் புழுதியை
அவ்வப்போது பொழியும் மழையாலும்
சலவை செய்ய முடியாதே
கைகுலுக்கி வரவேற்கும்
மனிதர்கள் மத்தியிலும்
விலங்குகளாக மாறும் இவர்கள்
குரோத எண்ணங்களால்
இப்படியும் விசித்திர மனிதர்களா
என்ற விசும்பல் தோன்றுகின்றதே?
துளிர்க்கும் துளிர்கள் புதிதானால் - அதில்
மலரும் மலர்களும் புதியவை தானே
புதிய சிந்தனையற்று
இனத்தை காட்டிக்கொடுத்து
அடிமை சாசனத்தை
எழுதிப் பெற்றுக் கொண்டே
வளமான வாழ்கை வாழும்
இவர்களும் வித்தியாச மனிதர்கள் தானே.!
எத்தனை மகான்கள்
எத்தனை மன்னர்கள்
எத்தனை புத்திஜீவிகள்
அன்று வாழ்ந்து மறைந்தார்கள்
அதை அறிந்தும்
அழுக்கு மனங்களோடு வாழும்
மர்ம மனிதர்கள் இவர்களும்
இந்தப் பூமிக்கு வித்தியாச மனிதர்கள் தானே..!
- விக்கி நவரட்ணம்