தங்கம் தேடியவர்களுக்கு கிடைத்த சூரிய குடும்பத்தின் முன்னோடி - அதிசய பாறையின் ரகசியம்
27 கார்த்திகை 2022 ஞாயிறு 08:16 | பார்வைகள் : 8329
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டேவிட் ஹோலே 2015ஆம் ஆண்டு தங்கத்தை தேடி பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தில் அவருக்கு தங்கம் கிடைக்கவில்லை என்றாலும், அதைவிட விலைமதிப்பற்ற பொருள் கிடைத்தது. தங்கம் கிடைக்கும் என நம்பிய அவர் கண்டறிந்ததோ மிகவும் அரிய வகை விண்கல்.
பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக இருந்த கல்லை தூக்கியபோது அதன் எடை அசாதாரணமாக இருக்கவே, உள்ளே வேறு ஏதோ இருக்கிறது என கருதி எடுத்துச் சென்றுள்ளார். அந்த பாறைக்கல்லை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அது நமது சூரிய குடும்பம் உருவான காலத்திலிருந்தே விலைமதிப்பற்ற மழைத்துளிகள் ஒன்றுதிரண்டு உருவானது என கண்டறியப்பட்டது. ஹோலே தேடிக்கொண்டிருந்த தங்கத்தை விட இந்த பாறையானது அரிதானது மற்றும் மதிப்புமிக்கது என்று கூறியுள்ளது சயின்ஸ் அலர்ட்.
ஹோலே கண்டறிந்த அந்த பாறையை குறித்து சயின்ஸ் இதழ் மேலும் விளக்கியுள்ளது. ஹோலே கொண்டுவந்த அந்த பாறைமீது ரம்மை ஊற்றி, அதனை துளையிட முயற்சித்து, உடைக்க முயற்சித்துள்ளார். வலுவான பெரிய சம்மட்டியை கொண்டுகூட அதனை உடைக்க முயற்சித்துவிட்டார். ஆனால் அந்த பாறையின் சிறிய விரிசலைக்கூட உருவாக்க முடியவில்லை என்று கூறியுள்ளது. அவர் உடைக்க முயற்சித்ததற்கு காரணம், அந்த பாறைக்குள் தங்கக் கட்டிகள் இருக்கலாம் என்ற எண்ணம் தான்.
ஆனால் பல வருடங்களுக்குப் பிறகே அவர் கண்டுபிடித்தது ஒரு சாதாரண கல் அல்ல; விலை மதிப்பற்ற விண்கல் என்று தெரிந்துகொண்டார். அந்த பாறைக்கல்லானது செதுக்கப்பட்ட, பள்ளமான தோற்றத்தைக் கொண்டிருந்தது என்கிறார் மெல்போர்ன் அருங்காட்சிய புவியியலாளர் டெர்மோத் ஹென்ரி. மேலும், இதுபோன்ற பாறைகளானது வளிமண்டலத்தின் வழியாக வரும்போது உருவாகிறது எனவும், ஆனால் அவை வெளியில் உருகுகின்றன. அவற்றை வளிமண்டலம் அவற்றைச் செதுக்குகிறது என்றும் கூறியுள்ளார் ஹென்ரி.
ஹோலே கண்டெடுத்த அந்த பாறையானது 4.6 பில்லியன் வருடங்களுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த விண்கல் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். அந்த பாறைக்கல்லானது பூமியிலுள்ள பாறைகளைப் போல் இல்லாமல் மிகவும் கனமாக இருக்க காரணம், அவற்றிலுள்ள அடர்த்தியான இரும்பு மற்றும் நிக்கல் தான் என்பதையும் கண்டறிந்துள்ளனர். இதனை ”மேரிபரோ விண்கல்” என அழைக்கின்றனர்.
மேலும், கூரிய வைரக்கற்களைக்கொண்டு அந்த பாறையின் ஓரத்தை உடைத்து பார்த்தபோது, அதில் சிறிய வெள்ளிநிற மழைத்துளிகள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார் ஹென்ரி. ஒரு காலத்தில் சிலிகேட் கனிமங்கள் துளிகளாக இருந்தன. அவை சூரிய மண்டலத்தை உருவாக்கிய சூடான வாயு நிறைந்த மேகங்களால் படிகமாக்கப்பட்டன. இதன்மூலம் சூரிய மண்டலம் எப்படி உருவானது என்பது குறித்து நம்மால் இங்கு புரிந்துகொள்ள முடிகிறது என்கிறார் ஹென்ரி.