2000 ஆண்டுகளுக்கு முந்தைய சுரங்கப்பாதை எகிப்தில் கண்டுபிடிப்பு
9 கார்த்திகை 2022 புதன் 11:33 | பார்வைகள் : 18889
பண்டைய எகிப்திய நகரத்திற்கு கீழே 4,800 அடி நீளமான சுரங்கப்பாதையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நீண்ட சுரங்கப்பாதை கிளியோபாட்ராவின் கல்லறையில் சென்று முடியலாம் எனவும் கூறப்படுகிறது.
2,000 ஆண்டுகளுக்கு முந்தைய கிரேக்க-ரோமன் சுரங்கப்பாதை பண்டைய எகிப்திய நகரமான டபோசிரிஸ் மேக்னாவிற்கடியில் கண்டுபிடிக்கப்பட்டது. எகிப்தின் வடக்கு கடற்கரையில் 4,281 அடி நீளமுள்ள பாறையில் செதுக்கப்பட்ட சுரங்கப்பாதை எகிப்திய டொமினிகன் தொல்பொருள் மிஷனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கி.மு.280 மற்றும் 270-க்கு இடையில் பார்வோன் டோலமி II பிலடெல்பஸால் நிறுவப்பட்ட நகரமான டபோசிரிஸ் மேக்னா, தற்போதைய எகிப்தில் உள்ள அலெக்ஸாண்டிரியா கவர்னரேட்டில் அமைந்துள்ளது. கடந்த காலத்தில், கி.மு. 332-ல் அலெக்சாண்டர் தி கிரேட் எகிப்தைக் கைப்பற்றி அலெக்ஸாண்டிரியாவை நிறுவிய பிறகு இது ஒரு பெரிய கலாச்சார, மத மையமாக இருந்தது.
இதுகுறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கேத்லீன் மார்டினெஸ் கூறுகையில், கிளியோபாட்ரா மற்றும் மார்க் ஆண்டனி ஆகியோர் இங்கே புதைக்கப்பட்டதற்கு ஒரு சதவீத வாய்ப்பு மட்டுமே இருப்பதாக கூறுகிறார். மேலும், இந்த சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு 21-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கப்பாதை 6.5 அடி உயரம் கொண்டதாக உள்ளது என எகிப்திய சுற்றுலா மற்றும் தொல்பொருட்கள் அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சுரங்கப்பாதையைத் தவிர, கடந்த 14 ஆண்டுகளாக மார்டினெஸ் தலைமையிலான குழு, கோயில்களுக்கு அருகே பல ஆராய்ச்சிகளை செய்ததாக கூறப்படுகிறது.
இச்சுரங்கப்பாதையை ‘ஒரு பொறியியல் அதிசயம்’ என்று அழைக்கும் மார்டினெஸ், அதன் கட்டிடக்கலை வடிவமைப்பு கிரேக்கத்தில் உள்ள யூபிலினஸ் சுரங்கப்பாதை திட்டத்தை ஒத்திருக்கிறது என்று விளக்குகிறார். சுரங்கப்பாதையின் ஒரு குறிப்பிட்ட பகுதி மத்தியதரைக் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அகழ்வாராய்ச்சியில் பல பீங்கான் ஜாடிகள் மற்றும் பானைகள், சேறு மற்றும் மணல் வண்டல்களுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செவ்வக வடிவ சுண்ணாம்புத் தொகுதியுடன் கண்டுபிடிக்கப்பட்டது. 320 AD மற்றும் 1303 AD-க்கு இடையில் எகிப்திய கடற்கரையில் குறைந்தது 23 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் தபோசிரிஸ் மாக்னா கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்து நீரில் மூழ்கியது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.