12ஆம் நூற்றாண்டின் பழமையான கோவில் கண்டுபிடிப்பு
1 கார்த்திகை 2022 செவ்வாய் 15:25 | பார்வைகள் : 8807
குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா கடங்கா-பரனே-நாபோக்லு வனப்பகுதியில் பழங்கால கோவில் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள பொல்லுமாடு கிராம மக்கள் அந்த பகுதியில் சில இடங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பழமையான கோவில்கள் இருப்பதுபோன்ற சில அடையாளங்கள் காணப்பட்டது. இதையடுத்து அந்த இடத்தை ஆழமாக தோண்டி பார்த்தபோது, அங்கு பழமையான கோவில் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனே இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். அதில் அந்த கோவில் 12-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்து கோவில் என்று தெரியவந்தது. மன்னர் கால சிற்பங்கள் இடம் பெற்றிருந்ததால், அவர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.
இதையடுத்து அவர்கள் அந்த கோவில் கட்டுமானபணிகளை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பலிபீடம், முகப்பு மண்டபம், கருவறை, பவுலி, சிவலிங்கம், பீடம், சாமியின் வாள் உள்ளிட்ட அழகிய சிற்பங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும் கோவிலின் மேற்கூரை மற்றும் கலசங்கள் சிதிலமடைந்து காணப்பட்டது. அதுபோல, கோவிலின் வடமேற்கு திசையில் கிணறு ஒன்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் 12-ம் நூற்றாண்டு காலத்திலேயே மேற்கை நோக்கியவாறு வடிவமைத்துள்ளனர்.
இதுகுறித்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வரும் தொல்லியல் துறையின் ஓய்வுபெற்ற துணை கண்காணிப்பாளர் நைகண்ட சி.பிரகாஷ் கூறியதாவது:-
கோயிலின் கட்டிடக்கலை உள்ளிட்ட பாணியை பார்க்கும்போது, இந்த கோவில் ஒய்சாலா மன்னர் காலத்தை சேர்ந்தது என்று தெரியவந்தது. அதாவது 12-வது நூற்றாண்டை சேர்ந்தது என கூறலாம். கோவிலின் பவுலி 88 செ.மீ உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. அபிஷேகம் செய்யப்பட்ட நீர் சிவலிங்கத்திற்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தளத்தில் அகழ்வாராய்ச்சி செய்யும்படியான கூடுதல் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இது குடகின் வரலாறு பற்றிய பல தகவல்களை வழங்குவதாக நம்பப்படுகிறது. எனவே அந்த இடத்தில் அகழாய்வு நடத்தி கோவிலை பாதுகாக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்