மிக அரிய தொல்பொருள் பொக்கிஷம் கண்டுபிடிப்பு - உற்சாகத்தில் ஆராய்ச்சியாளர்கள்
21 புரட்டாசி 2022 புதன் 05:52 | பார்வைகள் : 8791
காஸாவில் அரிய பொக்கிஷம் ஒன்றைப் பாலஸ்தீன விவசாயி ஒருவர் தற்செயலாகக் கண்டுபிடித்திருக்கிறார்.
ஆலிவ் மரத்தை நட்டுக் கொண்டிருந்தபோது அவரது மண்வெட்டி கடுமையான பொருளொன்றில் பட்டது.
தமது மகனை அழைத்தார் விவசாயி. இருவரும் சேர்ந்து மூன்று மாதங்கள் அந்த இடத்தை தோண்டினர்.
அங்கு பைசாந்தியப் பேரரசுக் (Byzantine-era) காலத்தில் அமைக்கப்பட்ட மொசைக் (mosaic) தளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அது காஸாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிக அரிய தொல்பொருள் பொக்கிஷம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
புதிய கண்டுபிடிப்பு ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்டுபிடிப்பு தொடர்பில் அப்பகுதி ஹமாஸ் ஆட்சியாளர்கள் வரும் நாள்களில் பெரிய அறிவிப்பொன்றைச் செய்யவுள்ளனர்.
இஸ்ரேலிய எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அந்த மொசைக் தளம் கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் 17 உருவப்படங்கள் பொதிந்துள்ளன.
அத்தளம் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டுள்ளது. அதன் வண்ணங்களும் பிரகாசமாக உள்ளன.
"தளங்கள் சிறந்த தரத்தையும் வரைகலையையும் நுணுக்கமான வடிவத்தையும் கொண்டுள்ளன"
என்று தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
தளம் 5ஆம் நூற்றாண்டுக்கும் 7ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இருக்கவேண்டும். ஆனால், அது எப்போது கட்டப்பட்டது? அது சமய அல்லது சமயச் சார்பற்ற வளாகத்தின் ஒரு பகுதியாக இருந்ததா? -இவற்றைத் தீர்மானிக்க சரியான அகழ்வாராய்ச்சி நடத்தப்படவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.